Published : 14 Jun 2017 06:30 PM
Last Updated : 14 Jun 2017 06:30 PM
வீட்டைவிட்டுப் புறப்படும் ஒவ்வொருநாளும் ஒவ்வொரு முறையும் நம் உயிரை ஒரு கையில் பிடித்துக்கொண்டுதான் செல்ல வேண்டியிருக்கிறது. சாலை விதிகளைப் பற்றி கவலைப்படாமல் அதிவேகத்தில் பறப்பவர்களால்தான் இந்த நிலைமை என்றில்லை. அவசரம் அவசியம் என்று நியாயம் கற்பித்துக்கொண்டு, ஒருவேளை காரணம் சரியாகவே இருந்தாலும் விதிகளுக்குப் புறம்பாக எந்த வழியிலும் படுவேகமாக செல்பவர்களாலும்தான் இந்த நிலை.
நகர சாலைகளில் நாம் எவ்வளவுதான் சரியாக வண்டி ஓட்டிச் சென்றாலும் நம்மை மோதிவிட்டுச் செல்வதுபோல வந்து லாவகமாக அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துவிட்டு செல்பவர்கள் சிலர் இருக்கிறார்கள். தாறுமாறாக வந்து மோதுபவர்களும் அவர்களைப் போன்றவர்கள்தான். இத்தகையவர்கள்தான் சாலை விபத்துகள் சகட்டுமேனிக்கு நடக்கக் காரணமானவர்கள்.
இனி அந்த பயம் தேவையில்லை என்று நம்பிக்கை இனிப்பைத் தந்திருக்கிறார்கள் சென்னை போக்குவரத்துக் காவல்துறையினர். சென்னையில் வாகன விபத்துகளை முற்றிலும் கட்டுப்படுத்தும் கிடுக்கிப்பிடி நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போகிறார்கள் அவர்கள்.
விபத்துகளை கட்டுப்படுத்தும் ஒரு நடவடிக்கையாக சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பாடலை காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் நேற்று வெளியிட்டுள்ளார். இப்பாடலை கானாபாலா பாடியிருக்கிறார். மக்களை விழிப்புணர்வு ஏற்படுத்தும்விதமான கருத்துக்களை பளிச் பளிச் தெறித்துள்ளார். பெரும்பாலும் இளைஞர்களை முன்னிறுத்திதான் அவர் பாடலின் கருத்துகளைப் பாடிச் செல்கிறார்.
சாலையில் நம் கண்ணெதிரே நடக்கும் பல்வேறு விபத்துகளும் பாடலின் ஊடே காட்டப்பட்டுள்ளது. அவற்றைக் காணும்போதே நெஞ்சம் பதறுகிறது. பாடல் காட்சிகளுக்கே இப்படி என்றால் அதில் நாமும் ஒருவராக நினைத்தே பார்க்கமுடியவில்லை.
இந்த வீடியோ பாடலை உருவாக்கிய குழுவினரான நிரஞ்சன் ஜேவிஜே, சுந்தர், வசந்த் இஎஸ், பார்த்திபன் உள்ளிட்ட இசை மற்றும் படபிடிப்பு செய்துகொடுத்த வீடியோ குழுவினரின் திறமை, மக்களுக்கு பயன்படும் விதமாக அமைந்ததோடு உயிரின் விதியை எழுதிச் செல்லும் சாலை விதிகளுக்கான கானா பாடலாகவும் அமைந்துவிட்டது.
''இஎம்ஐயில வண்டி வாங்கி எமனை வம்புக்கு இழுக்காதே. ஹெல்மெட்டை வீட்டுல வச்சுட்டு வந்து போலீஸ்கிட்ட மாட்டாதே. டிராபிக் ரூல்ஸை பாலோ பண்ணு. மீறிப் போனா ஆறடி மண்ணு....''என்று கானா பாலாவுக்கே உண்டான அந்த சென்னை மொழி கானாக் குரல் நம்மை உலுக்கி நிமிர வைக்கிறது.
யாரோ சிநேகமாக நம் தோளை வருடிச் சொல்வதுபோலவும் உள்ளது இப்பாடல். அப்புறமென்ன பாட்டு பட்டையக் கிளப்பட்டும். ''நான் ஒழுங்காக சாலை விதிகளை மதிப்பேன்'' என புறப்படும்போதே சிந்தித்து முடிவெடுத்துவிட்டு நாமும் வண்டியைக் கிளப்புவோம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT