Published : 27 Sep 2014 11:19 AM
Last Updated : 27 Sep 2014 11:19 AM

ஜெயகாந்தனோடு பல்லாண்டு - 2

ஜெயகாந்தனைச் சந்தித்ததிலும் அவரோடு நாடெங்கும் பயணித்ததிலும் ஏற்பட்ட அனுபவங்களைத் தொடர்ந்து எழுத விழைகிறேன்.

1960-ம் ஆண்டு செப்டம்பர் மாதம். தேதி அவ்வளவாக நினைவில் இல்லை. நானும் நண்பர் வையவனும் ஜெயகாந்தனை எங்கள் ஊர் பாரதி விழாவில் பேசுவதற்கு அழைப்பதற் காக சென்னைக்கு ரயிலில் புறப்பட்டோம். எனக்கு அப்போது 17 வயது. பி.யு.சி. செலெக்‌ஷன் தேர் வில் கோட்டை விட்டுவிட்டு, அந்த செப்டம்பரில் அடுத்த தேர்வை எழுதி முடித்திருந்தேன். குமுதத்தில் முதல் கதையும், அடுத்து கல்கியில் ஒரு கதையும் ஆனந்த விகடனில் 2 கதைகளும் அப்போது எழுதியிருந்தேன்.

வையவன் எழுத்திலும் வயதிலும் மூத்தவர். என்னைவிட 4 வயது பெரியவர். பத்திரிகைகளிலும் அவரது பல கதைகள் வெளிவந்திருந்தன. திருப்பத்தூரில் இரட்டையர்கள் போல நாங்கள் எபோதும் திரிந்துகொண்டிருப்போம். எங்கள் ஊரில் சுந்தரமூத்தி நாயனார் என்று ஒரு வக்கீல் இருந்தார். ‘‘ஜெயகாந்தன்கூட கூட்டங்களில் பேசுகிறானாம்பா. இந்த வருஷம் அவனைக் கூப்பிடுங்களேன்!’’ என்று முதலில் யோசனை கூறியவர் அவர்தான்.

‘சரஸ்வதி’ பத்திரிகையில் வந்த ஜெயகாந் தன் கதைகளை நாங்கள் அப்போது படித்துவிட் டிருந்தோம். ஆனந்த விகடனிலும் அவர் எழுதுகிற கதைகள் வெளிவர ஆரம்பித்திருந்தன. அதிகாலை நேரத்தில் சென்ட்ரல் ஸ்டேஷனில் இறங்கி, அங்கிருந்து பிராட்வேயில் இருந்த ‘ஜனசக்தி’ அலுவலகத்துக்குச் சென்றோம். எங்கள் 2 நாள் சென்னை பயணத்தில், இரவு தங்குவதற்கு அதைத்தான் நாங்கள் வரித்தோம்.

வையவன்தான் எல்லாவற்றுக்கும் வழிகாட்டி. என்னைவிடவும் அவருக்குத்தான் சென்னை அதிகம் பரிச்சயம். ‘ஜனசக்தி’ வாராந்திர மலரில் அவர் கதைகளெல்லாம் எழுதியிருந்தார். தோழர் மாஜினி அவருக்கு பழக்கமாகியிருந்தார். அவரது சிபாரிசில், இரவு நேரத்தில் தங்கிக்கொள்ள அங்கே எங்களுக்கு அனுமதி கிடைத்தது.

சென்னையில் முதல்நாள் பூராவும், சில பத்திரிகை அலுவலகங்களில் வையவனுக்கு வேலை இருந்ததால், அங்கெல்லாம் அவருடன் நானும் சென்றேன். சில எழுத்தாளர்களையும் சந்தித்தோம். அவர்களெல்லாம், நாங்கள் சென்னைக்கு என்ன வேலையாக வந்திருக்கிறோம் என்று விசாரித்தார்கள். எங்கள் ஊர் பாரதி விழாவுக்கு ஜெயகாந்தனை அழைப்பதற்காக வந்திருக்கிற விவரத்தைக் கூறினோம்.

அதிலே மூன்று நான்கு பேருக்கு மேல் சொல்லிவைத்தாற் போல, “ஜெயகாந்தனையா? அவர் ரொம்ப முரடராமே! கெட்ட வார்த்தையெல்லாம் பேசுவாராமே?” என்று எங்களுக்கு பயம் காட்டினார்கள். பகலெல்லாம் சென்னையில் அலைந்து திரிந்துவிட்டு, இரவு படுப்பதற்கு ‘ஜனசக்திக்கு வந்துவிட்டோம். குளியல் அறையின் எதிரே பெரிய பெரிய பேப்பர் பண்டல்களை அடுக்கியிருந்தார்கள்; அதுதான் எங்களுக்குக் கட்டில்போல் ஆயிற்று. முன்னிரவில் ரயிலில் வந்தபோது நஷ்டமாகியிருந்த தூக்கத்தாலும் பகலின் அலைச்சலாலும் அயர்ந்துபோய் நன்கு தூங்கிவிட்டோம்.

காலையில் வையவன்தான் முதலில் கண்விழித்து எழுந்து குளித்துத் தயாரானார். அன்றுதான் ஜெயகாந்தனைப் போய்ப் பார்ப்பதாகத் திட்டம். ‘‘ஏம்ப்பா, சீக்கிரம் எழுப்பா! அவன் எங்கேயாவது போய்விடப் போறான்’’ என்று வையவன் என்னை அவசரப்படுத்தினார். நான் எழுந்து உட்கார்ந்து கண்களைக் கசக்கிக்கொண்டே, ‘‘அந்த ஆளைப் பத்தி எல்லாரும் சொல்றதப் பார்த்தா, அவர் சீக்கிரம் எழுந்து குளித்து முடித்து வீட்டைவிட்டு வெளியே போற ஆளாத் தெரியலே’’ என்று வையவனின் அவசரத்துக்கு சமாதானம் சொல்லிக்கொண்டு, நான் என் வேலைகளை முடித்தேன்.

டவுன் பஸ் ஏறி எழும்பூரில் இறங்கி, ‘26 எக்மோர் ஹைரோடு’ என்று முகவரி குறிக்கப்பட்ட வீட்டை, காலை எட்டரை மணிக்கெல்லாம் அடைந்தோம். குறுகிய நுழைவாயிலும், வெளியே இருபுறமும் ஒட்டுத் திண்ணைகளும் கொண்ட வீடு. கதவிலே பொறிக்கப்பட்டிருந்த வீட்டு எண்ணை 26தான் என்று உறுதி செய்துகொண்டோம்.

ஒண்டுக்குடித்தன வீடு. உள்ளே ஜனநடமாட்டம் தெரிந்தது. நாங்கள் வாசலில் நிற்பதைப் பார்த்த ஒரு பெண்மணி, ‘யார் வேணும்?’ என்று கேட்டார்.

‘எழுத்தாளர் ஜெயகாந்தனைப் பார்க்க வந்தோம்!’ என்று பதில் சொன்னோம். அந்தப் பெண்மணி, ‘இவங்களைக் கேளுங்க’ என்று ஒருவரைக் காட்டினார். அவர் எங்களுக்கு முகம் காட்டி ‘யாரு?’ என்று கேட்டார். அவர்தான் ஜெயகாந்தனின் தாயார். தோற்றத்திலும் குரலிலும் ஒரு கம்பீரம் துலங்கிற்று. பவ்யமாக, ‘திருப்பத்தூரிலிருந்து வர்றோம், ஜெயகாந்தனைப் பார்க்கணும்’ என்றோம்.

‘வாங்க’ என்று எங்களை அழைத்தவர், தாங்கள் குடியிருந்த பகுதியின் பக்கமாகத் திரும்பி, ‘காந்தா, உன்னை பார்க்க யாரோ வந்திருக்காங்க பார்’ என்று குரல் கொடுத்தார். அதற்குள் நாங்கள் உள்ளே போய் அவர்கள் அறை வாசலில் நின்றிருந்தோம்.

இரண்டே அறைகள் கொண்ட சிறிய குடித்தனப் பகுதி அது. முதல் அறையின் நடுவே, கார்ட்போர்டினால் ஆன ஒரு ஸ்டாண்ட் நிற்க வைக்கப்பட்டும், சுமார் மூன்றடி அகலத்துக்குத் துணித் திரை ஒன்று தொங்கவிடப்பட்டும், அந்த அறையைப் படுக்கை அறையாகவும் வரவேற்பறையாகவும் பிரித்திருந்தனர்.

அம்மாவின் குரல் கேட்டதும், துணித் திரையை ஒரு கரம் சிறிதே விலக்கியது. பள்ளிகொண்ட நாதனைப்போல், படுத்தவாக்கில் அடர்ந்த சிகையோடு கூடிய ஒரு பருத்த முகம் தெரிந்தது. அப்போதுதான் தூக்கம் கலைந்த கண்கள் தீட்சண்யமாகத் துலங்கின. தொடர்ந்து, ‘வாங்க!’ என்று அவர் குரலும் வந்தது. கண்களை நடுவிரலால் துடைத்துக்கொண்டு, இடுப்பில் கட்டிய லுங்கியைச் சரிசெய்தவாறு,ஜெயகாந்தன் திரையை விலக்கிக்கொண்டு வெளியில் வந்தார். அந்த வயதின் ஆரோக்கியத்தாலும் தூங்கி எழுந்ததாலும் அவரது முகம் நன்கு மதர்த்துப் போய்த் தெரிந்தது.

அது எனக்கு மனித முகத்தின் ஒரு புதிய மாதிரியாகத் தோன்றியது.

- வாழ்வோம்...

எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள
pisakuppusamy1943@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x