Last Updated : 14 Nov, 2014 03:08 PM

 

Published : 14 Nov 2014 03:08 PM
Last Updated : 14 Nov 2014 03:08 PM

எம்.எஸ்.எஸ். பாண்டியன்: இன்றைய சுயமரியாதை இயக்கத்தின்‌‌ மறதி

இந்தியாவின் மற்ற மாநிலங்களோடு ஒப்பிடும்போது தமிழ்நாடு பல துறைகளில் முன்னேறியுள்ளது. முற்போக்குச் சிந்தனையில் அது முன்னோடியாகத் திகழ்வதும் மறுப்பதிற்கில்லை. இந்த மாற்றத்திற்கு பல சமூக - அரசியல் இயக்கத் தலைவர்கள் காரணமாக இருந்த போதிலும் பெரியார் போன்றோர் தோற்றுவித்த சுயமரியாதை இயக்கமான பிராமணர் அல்லாதோர் இயக்கமும் அதனையொத்த சமூக சீர்திருத்த அரசியல் இயக்கங்களின் பங்களிப்பும் காரணமாகக் கூறப்படுகின்றன. ஒரு வகையில் இது உண்மையுங்கூட.

இத்தகைய வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்த பெரியாரையும் அவர் தம் திராவிட இயக்கங்களையும் கல்வித்தளத்தில் கால் நூற்றாண்டுக்கும் மேலாகக் கூர்ந்து கவனித்து வரும் மறைந்த பேராசிரியரும், திராவிட இயக்கங்களின் ஆய்வாளருமான எம்.எஸ்.எஸ்.பாண்டியன் தனது "பிராமிண் - நான் பிராமிண் - இன்றைய தமிழ் அரசியல் தோற்றம்" தொகுப்பிலும், "தேசப்பழமைவாதம் - தேசியம் பற்றிய பெரியார் புரிதல், திராவிடம்" உட்பட பல கட்டுரைகளிலும் பகுப்பாய்வு விமர்சனத்தோடு பதிவு செய்துள்ளார். சிந்தனையாளர்களைப் புறக்கணிக்கும் திராவிடத் தத்துவார்த்த விவாதங்களில், திராவிட எல்லையைக் கடந்து பெரியாரை உலகம் தழுவிய பின்நவீனத்துவக் கோட்பாட்டில் பெரியாரியலாக விரிவுபடுத்தியவர்.

உலக கல்வித்தள அரங்கில் பெரியாரை மிகப்பெறும் சிந்தனையாளராகக் கொண்டு சென்றதில் அவரின் கல்விப்புலமை போற்றப்பட வேண்டியது. அதுமட்டுமல்ல, எம்.ஜி.ஆரின் திரை அரசியல், ஜெயலலிதாவின் மதமாற்றத் தடைச் சட்டம், கருணாநிதியின் செம்மொழி மாநாட்டு அரசியல், பெரியார் கருத்துரிமைக்கு காப்புரிமைச் சொந்தம் கொண்டாடிய கி.வீரமணி என எந்த திராவிட அரசியலின் அதிகார மட்ட‌த்தையும் விமர்சிக்கத் தயங்கியதில்லை. அதேசமயம் பெரியார் முன்வைத்த பிராமணர் அல்லாதோர் அரசியலையும் தனது ஆய்வில் இருந்து விலக்கி வைக்கவில்லை. பெரியார் எப்படி எந்த அதிகாரத்துக்கும் தன்னை விட்டுக் கொடுக்கவில்லையோ, அதுபோலவே எம்.எஸ்.எஸ். பாண்டியனும் தான் விமர்சித்த எந்த அதிகாரத்துக்கும் வளைந்து கொடுக்காமல் தனக்கான அடையாளத்தை பெரியார் சிந்தனையில் நிறுவினார்.

பிராமணர் - பிராமணர் அல்லாதோர் இயக்கங்களின் சமூக - அரசியல் பரிமாணம் குறித்தும், தேச‌ப் பழமைவாதத்தின் கட்டுடைப்பிலும் அவர் தொடங்கி வைத்த விவாதம் திராவிட இயக்க அரசியல் வளர்ச்சியில் மிக முக்கிய இடத்தை வகித்த‌து. அது அம்பேத்கரின் நூற்றாண்டையொட்டி 90-களில் தன்னெழுச்சி கொண்ட தலித் எழுச்சிக்கும், விளிம்புநிலை மக்கள் ஆய்வுக்கும் கூட விவாதக்களமாக அமைந்தது. கடவுள், மதம், மொழி, மூடநம்பிக்கை இவற்றைக் கொண்டு பிராமண ஆதிக்கத்தை எதிர்க்க‌ உருவாக்கப்பட்ட பிராமணர் அல்லாதோர் இயக்கம் தமிழ்த் தேசியத்தை பேசிக்கொண்டே பெரியாரைத் துணைகோடல் செய்ததையும் எம்.எஸ்.எஸ். மறுத்துள்ளார் என்பது பெரியாரியலில் பெரிதும் விவாதிக்கப்படாதது.

பிராமண ஆதிக்கத்தை எதிர்ப்பதில் யாரை அவர் பகுத்தறிவுக்கு நேரான‌ சுயமரியாதைப் போராளிகளாகக் கண்டாரோ, அவர்களே அன்றைக்கு பிராமணர் அல்லாதோர் அடையாளத்தின் பிராமணியக் கதாநாயகர்களாகிப் போனதையும் சுட்டிக்காட்டியது அவரது "நான் பிராமிண்" வாதம். எனினும் மிக வலுவாக அவர் வைத்த விமர்சனங்கள் பெரியார் இயக்கங்களால் ஏனோ எவ்வகையான சுய மதிப்பீடுகளுக்கும் உட்படுத்தாமல் சட்டென இன்று எம்.எஸ்.எஸ்.பாண்டியனையும், அவர் தம் அறிவாயுத ஆளுமையையும் கூசாமல் தங்களுக்குச் சாதகமாக அடையாளப்படுத்தும் முயற்சி எத்தகைய பகுத்தறிவு என்பது விமர்சனத்துக்குரியது.

ஒரு மாநிலத்தின் அல்லது ஒரு வட்டாரக் குழுக்களின் சமூக மாற்றத்திற்கும், அரசியல் பொருளாதார முன்னேற்றத்திற்கும், பண்பாட்டு வளர்த்தெடுப்புக்கும் வழிகாட்டிய சிந்தனையாளர்களையும், நவீனத்துவ தலைவர்களையும் அதன் இயக்கங்களையும் நன்றியுடன் நினைவு கூறுகின்ற செயல் என்னவாக இருக்கும் என்றால் அவ‌ர்களின் கருத்தியலையும், வாழ்வியல் அனுபவங்களையும், கொள்கைகளையும் முழுமையாக உள்வாங்கி, அப்படியே தங்களின் வாழ்க்கை நடைமுறையில் கடைப்பிடிப்பது தான் அவர்களுக்குச் செய்யும் கைமாறு. அப்படியானால் தமிழகத்தின் சுயமரியாதை முற்போக்கு வளர்ச்சியில் பெரியாரின் சிந்தனைகளால் பங்களிப்பு செய்த எம்.எஸ்.எஸ்.பாண்டியனின் பிராமணர் - பிராமணர் அல்லாதோர் இயக்க விமர்சனங்களை அசைபோடும் பெரியார் இயக்கங்களின் கருத்தியல் தாக்கம் இன்று எவ்வாறு மாறுபட்டிருக்கிறது என்பதையும், அதன் கொள்கைகளுக்கும், தத்துவங்களுக்கும், செயல்பாட்டுத் தார்ப்பரியங்களுக்கும் எவ்வாறு மதிப்பளிக்கிறது என்பதையும் கொஞ்சம் மேலோட்டமாக பார்த்தாலே எம்.எஸ்.எஸ். காண விரும்பிய பெரியாரின் சமூகச்சூழல் தெளிவாகத் தெரிந்து விடும்.

பெரியாரின் புரிதலில் இது வரையிலும் மறந்து போன எம்.எஸ்.எஸ்.பாண்டியனின் பிராமணர் - பிராமணர் அல்லாதோர் கருத்தாக்கத்தை மறுவாசிப்பு செய்தோமானால் சாதி மறுப்பு பேசிக்கொண்டே செய்கின்ற‌ பகுத்தறிவுக்கு எதிரான செயல்பாடுகள் இன்றைய சமூக மாற்றத்துக்கு நம்பகத்தன்மையானது தானா என்பதையும் ஒப்பீட்டளவில் திரும்பிப் பார்ப்பது சிறந்ததாகக் கருதப்படும்.

பெரியாரும் அவர் தம் திராவிட இயக்கத்தின் முற்போக்குக் கொள்கைகளாக முன்னிறுத்தப்பட்ட சுயமரியாதை, மூடநம்பிக்கை ஒழிப்பு, பிராமண எதிர்ப்பின் வழியாகக் கண்டறியப்பட்ட சாதி எதிர்ப்பு, பகுத்தறிவு வார்த்தெடுப்பு, பெண்விடுதலை, சாதிப் பெரும்பாண்மைவாத விகிதாச்சார இடஒதுக்கீட்டின் சமூக நீதி போன்றவை குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய கொள்கைகளாகும். சமூக மாற்றத்திற்கு பெரிதும் தேவை என நம்பப்படும் இக்கொள்கைகளும் அதன் தத்துவார்த்த நடைமுறைகளும் எந்த அளவுக்கு தமிழ்ச்சமூகத்தினரால் பின்பற்றப்படுகின்றன‌ என்பதை கேள்வி எழுப்பினால் பின்னோக்கிய தளர்வுகளும், சறுக்கல்களும் பெரியார் பிறந்த மண்ணில் தான் நிகழ்கின்றனவா என்பவை பெரும் அதிர்ச்சிக்குள்ளானவை.

ஏனெனில், கடவுள், மதம், சாதி, மொழி, புராண‌ இலக்கியம் இவற்றைக் காட்டி பிராமணர்களை விமர்சித்தற்கு நிகராக இதுவரையிலும் இல்லாத அளவுக்கு வட்டார அளவில் சாதியை முன்னிலைப்படுத்தும் குழு அரசியல், அதன் பிம்பங்களை நிஜங்களாக்கும் ஹீரோ வழிபாடு, பெண்கள் மீதான வன்கொடுமைகள், போலிச்சாமியார் பிரவேசம் மற்றும் ஆஸ்ரம பாலியல் - ஊழல் அதிகரிப்பு, ஜோசியம் - வாஸ்து - ஜாதகப்பொருத்தம் பார்த்தல், வரன் தேடும் கல்யாணமாலை விழாக்கள், சுயலாபங்களுக்காக காலில் விழும் அரசியல் கலாச்சாரம், சாதி கலப்புத் திருமணங்களை வன்முறையால் அரசியல்படுத்தி வெளிப்படையாக முறியடிக்கும் கவுரவக்கொலைகள், சமூக நீதி என்கிற பெயரில் சாதிவாரி கணக்கெடுப்பு கோருதல் போன்றவற்றை பெரியாரின் வாரிசுகளாகவும், தொண்டர்களாகவும் காட்டிக்கொள்ளும் தலைவர்கள் எவ்வித சமூக நாகரிகமும் இல்லாமல் பொதுவெளியில் அரங்கேற்றுவது, ஊக்குவிப்பது, பாதுகாப்பு வழங்குவது, ஊடகங்களில் தினசரியாக்குவது என்பது நாளுக்கு நாள் மேலோங்கி வருகின்றது.

அதாவது பிராமணர்களை விலக்கிய நிலையில் பெரியாரை முன்னிலைப்படுத்தி அரசியல் பண்ணும் சாதிக்குழுக்கள் இதன் தீவிர பக்தர்களாக வெளிப்பட்டுக் கொண்டே எம்.எஸ்.எஸ். பாண்டியனையும் அவர் பகுத்தாய்ந்த‌ பெரியாரையும் நினைவேந்துவது இதற்கு எதிரானதாக இருக்கிறது. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால் இத்தகைய செயல்பாடுகள் அனைத்தும் பெரியார் தோன்றிய கொங்கு வட்டாரப் பகுதியிலிருந்தே பீறிட்டு எழுவதையும் மறந்த நிலையில் இங்கே பகுத்தறிவு இயக்கம் செயல்படுவது வியப்பைத் தருகின்றது. அப்படியானால் பிராமணர் அல்லாதோர் இயக்கம் மீது எம்.எஸ்.எஸ்.பாண்டியன் முன்வைத்த விமர்சனங்களை பெரியார் இயக்கங்கள் முற்றிலும் மறுதலித்து விட்டதா?

சமீபத்தில் சென்னை கருத்தரங்கு ஒன்றில் பேசிய சமூகவியல் ஆய்வாளர் சாரதா சீனிவாசன் தான் மேற்கொண்ட ஒரு மானுடவியல் ஆய்வின் மதிப்பீடுகளைப் பகிர்ந்து கொண்டார். அவர் பேசும்போது, கொங்கு வேளாளர் கவுண்டர் மத்தியில் நிலவும் ஆண் - பெண் விகிதாச்சாரத்தில் வயது வந்த பெண்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது என்றும் அதே சமயம் திருமணம் ஆகாத வயது முதிர்ந்த ஆண்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது என்றும் ஓர் ஆதாரத்தைக் குறிப்பிட்டிருந்தார். இந்த எண்ணிக்கை அதிகரிப்புக்கு அவர் கூறும் பல காரணங்களில் முக்கியமானது அவர்களிடையே நிலவும் அகமண முறைக்கு வரன் தேடுதல் சடங்கில் நிலவும் சரியான ஜாதகப் பொருத்தம் இல்லை என்பதாகும்.

இதனால் புற்றீசல்போல பெருகிய பல்வேறு வரன்தேடும் விழாக்களில் கலந்து கொள்ளும் கொங்கு வேளாளர் ஆண்கள் தற்போது ஏமாற்றத்தின் - விரக்தியின் விளிம்பில் நிற்கிறார்கள் என்கிறார். பார்ப்பதற்கு இது எல்லா சாதிகளிலும் தானே நடக்கிறது என யதார்த்தமாகத் தெரிந்தாலும் இதனுள் புரையோடிக் கிடக்கும் கருத்தின் தீவிரப் பற்றாளர்களாகிப் போனவர்கள் யார்? என்பது மறக்கடிக்கப்பட்டு, கடந்த காலங்களில் அவர்களுக்கு எம்.எஸ்.எஸ்.பாண்டியன் முன்வைத்த பெரியாரியல் தீர்வு பொருத்த‌மற்றதாகி விட்டதா? என எண்ணத் தோன்றுகிறது.

பிராமணர்களை விலக்கி, பிராமணர் அல்லாதோரை முன்னிறுத்திய திராவிடர் கழகங்களிலும், திராவிடக் கட்சிகளிலும் இன்றைக்கு கொங்கு வேளாளர்களின் அதிகார பலம் தொடர்ந்து மேலோங்கி வரும் சூழலில் எம்.எஸ்.எஸ்.பாண்டியன் விமர்சிக்கும் தமிழ்த்தேசிய வேளாளர்களின் அதிகார பலத்தையும் கடந்து பெரியார் பிறந்த மண்ணின் வட்டாரத்திலேயே அவரது கொள்கைக்கு எதிரான வழக்காறுகள் நிலம் சார்ந்து கொங்கு தேசப்பழமைவாத‌மாக உருவாகிறது என்றால் இதனை எப்படி தமிழகத்தின் பிராமண எதிர்ப்பு அரசியலாக மட்டுமே தொடர்ந்து நீட்டிக்க‌ முடியும்? அல்லது சாதி எதிர்ப்பாகக் கொண்டாட‌ முடியும்? என எம்.எஸ்.எஸ்.பாண்டியன் எழுப்பிய கேள்விகள் அவரை நினைவேந்தும் பகுத்தறிவு இயக்கங்கள் சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டிய தருணம் இது.

பெரியாரின் நவீனத்துவத்தில் சமூக மாற்றம் அல்லது சமூக சீர்திருத்தம் என்பது சாதிவாரிக் கணக்கெடுப்பின் வழியாகக் கோறும் விகிதாச்சாரத்தின் பயன்பாடான வெறும் பொருளாதார - நாகரிக நலன்களை மட்டுமே முன்னிறுத்தியதல்ல. அதே சமயம் சுயமரியாதையை மீளப்பெறும் இந்த மாற்றத்தை அரசின் சட்டகங்களாலும், விதிகளாலும் மட்டுமே மாற்றி விடவும் முடியாது. அடிப்படையில் அது மக்களின் அடிமனதில் எழவேண்டிய மனமாற்றம். அவர்களால் அன்றாடம் பின்பற்றப்படும் பண்பாட்டுக் கூறுகள், நெறிமுறைகள், பழக்கவழக்கங்கள் இவைகளில் ஏற்பட வேண்டிய மாற்றம். அதற்கு சுயமரியாதை இயக்கங்களின் கற்பிதமும், பொது சிவில் சமுகத்தின் பங்களிப்பும் ஒரு காரணம். அந்த சிவில் சமூகம் இன்றைய தமிழகச் சூழலில் எந்த அளவுக்கு எம்.எஸ்.எஸ்.பாண்டியன் விமர்சிக்கும் பெரியாரின் சமூக சீர்திருத்த முற்போக்குக் கருத்துக்களை உள்வாங்கியிருக்கிறது என்பதும், அது எவ்வாறு வட்டார நில எல்லை தேசப்பழமைவாதத்திலிருந்தும், மூட நம்பிக்கைகளிலிருந்தும் விடுபட்டு, அரசின் சட்ட நடைமுறைகளுக்கு ஒத்துழைப்பு நல்குவதாகவும் இருக்கிறது என்பதும் கவனிக்கத்தக்கது.

தருமபுரியில் தலித் குடியிருப்புகள்மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பிறகு அந்த கிராமங்களைச் சேர்ந்த தலித் மாணவர்களை போலிஸ் வேனில் பள்ளிக்கு அழைத்துச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டதும், ஆதிக்கச் சாதியினர் தெருவில் சென்றான் என்பதற்காக 12 வயது தலித் சிறுவனின் தலையில் செருப்பை வைத்து ஊரைச்சுற்றி வருவதும் தினமும் தலித்துகளுக்கு விதிக்கப்பட்ட சடங்காகிப் போனதை மாற்றுவதற்கு அரசு நடைமுறைப்படுத்தும் சட்டங்கள் சாதிய சமூகத்தின் முன்னால் தோற்றுப் போய்க் கிடக்கின்றன என்றாலும் குறைந்த பட்சம் பெரியார் விரும்பிய தத்துவார்த்த கொள்கைகளில் ஒன்றான சாதி மறுப்புத் திருமணங்களைச் செய்யும் தலித்துகளையும், தலித் அல்லாதவர்களையும் படுகொலை செய்யும் கௌரவக்கொலைகளை கூட தடுக்க முடியாமல் போனதுக்கு யார் காரணம்?

தமிழ்நாட்டில் பிராமணர்களை எதிராக வைத்து பிராமணர் அல்லாதவர்களை பிரதிநிதித்துவப்படுத்திய திராவிட இயக்கங்களும் அது கொண்டு வந்த வகுப்புவாரி ஒதுக்கீடுகளும், சாதிவாரி கணக்கெடுப்பு முழக்கங்களும் மக்கள் மனங்களில் எளிமையாக ஏற்றுக் கொள்ளப்பட்டு விட்டன. தலித்துகள் மீது நிகழ்த்தப்படும் ஒடுக்குமுறைகளை முற்றிலும் மறைத்து, ஏற்கனவே பெற்றிருக்கும் சாதிய அதிகாரங்களோடு திராவிட அரசியல் கட்சிகளின் வழியாக இன்றைய நவீன அரசு ஈட்டித்தரும் இட ஒதுக்கீட்டு அதிகாரங்களையும் சேர்த்து பலமாக்கி மீண்டும் தலித்துகள் மீதே வன்கொடுமை புரிவதற்கு “சமூக பொருளாதார சாதிவாரி கணக்கெடுப்புக்கு” குரல் எழுப்புகின்றன.

இதற்கு எதிராகக் குரல் கொடுப்பதற்கு ஒரு தன்னார்வ தலித் மனித உரிமை அமைப்பும் அல்லது பாதிக்கப்பட்ட தலித் சமூகங்களும் தான் தங்கள் கடமையாக ஏற்றுப் போராட வேண்டியுள்ளது. காலந்தோறும் பிராமணர்களை எதிர்த்த‌ பெரியார் இயக்கங்களும், பொது சிவில் சமூகமும் இவற்றை அன்றாட நிகழ்வாகப் பார்த்து மவுனம் தான் சாதித்தன. இந்த நிலையை எம்.எஸ்.எஸ்.பாண்டியன் மட்டுமல்ல கடுகளவும் பெரியார் ஏற்றுக்கொள்ளவோ? அங்கீகரிக்கவோ? மாட்டார். இதற்கு எதிராக அவர்களது சமூகக் கோபம் மிகக்காத்திரமானதாக இருந்திருக்கும். ஆனால் அப்படியொரு எதிர்வினை எம்.எஸ்.எஸ்.பாண்டியன் பெயரால், பெரியாரின் பெயரால் இங்கே போர்ப்பிரகடனமாக வெளிப்படாதது அவர்களின் அறிவாயுதத்தை எதிரொலிக்காததுக்குச் சமம்.

தமிழகத்தின் கடந்த கால சுயமரியாதை அரசியல் என்பது வெற்றுக் கூச்சலிடும் பிராமண எதிர்ப்பு அரசியலாக மட்டுமே இருந்து விடக்கூடாது என எம்.எஸ்.எஸ்.பாண்டியன் விரும்பினார். அவரின் கனவு நனவாக்கப்படாமல் அது சாதி எதிர்ப்பு அரசியலுக்கும் - பிராமண எதிர்ப்பு அரசியலுக்கும் இடையேயான போதாமையை அம்பலப்படுத்துகிறது. அந்த இடைவெளியை நிரப்ப வேண்டும் என்றால் சாதி எதிர்ப்பை முன்னிறுத்திய நவீன பெரியாரும் அவரைக் கொண்டாடும் எம்.எஸ்.எஸ். பாண்டியனின் செயல்பாட்டுச் சிந்தனைகளும் இன்றைய சுயமரியாதை இயக்கத்துக்கு உடனடித் தேவை.

அன்புசெல்வம், ஆய்வாளர் - தொடர்புக்கு anbuselvam6@gmail.com

சி.லக்‌ஷ்மணன், சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தின் பேராசிரியர் தொடர்ப்புக்கு lchinnaiyan@gmail.com

கட்டுரையாளரின் வலைதளம்>www.anbuselvam.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x