Published : 18 Mar 2017 10:17 AM
Last Updated : 18 Mar 2017 10:17 AM
நோபல் பெற்ற இங்கிலாந்து தொழிற்சங்கவாதி
இங்கிலாந்து நாட்டின் தொழிற்சங்கத் தலைவரும் அமைதிக்கான நோபல் பரிசை வென்றவருமான சர் வில்லியம் ரேண்டல் கிரெமர் (Sir William Randal Cremer) பிறந்த தினம் இன்று (மார்ச் 18). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
* தென் இங்கிலாந்தில் ஃபேர்ஹம் என்ற நகரில் பிறந்தவர் (1828). தந்தை, குடும்பத்தைக் கைவிட்டதால், இரண்டு மூத்த சகோதரிகளையும் இவரையும் அம்மா வளர்த்து வந்தார். சொந்த ஊரில் பள்ளியில் பயின்றார். ஆனால், வறுமை காரணமாக, 12 வயதில் கல்வியைக் கைவிட நேர்ந்தது.
* கட்டுமானப் பணியாளராக வேலை செய்தார். வேலை செய்துகொண்டே, பல்வேறு இடங்களில் நடைபெற்ற இலவச விரிவுரைகளில் பங்கேற்றுத் தன் அறிவைப் பட்டை தீட்டிக்கொண்டார். அந்தச் சந்தர்ப்பங்களில் போரிடும் நாடுகளில் அமைதியை நிலைநாட்டுவது குறித்த விரிவுரை இவரது மனதில் தாக்கத்தை ஏற்படுத்தியது.
* இது பிற்காலத்தில் இவரது வாழ்க்கையின் முக்கிய இலக்காக மாறியது. வேலை தேடி லண்டன் சென்றார். பேச்சாற்றலும் எழுத்தாற்றலும் கொண்டிருந்த இவரிடம் அசாதாரணத் தலைமைப் பண்புகள் இயல்பாகக் குடிகொண்டிருந்தன. லண்டனில் செயல்பட்டு வந்த தொழிற்சங்க அமைப்பின் பணிகளில் ஆர்வத்துடன் பங்கேற்றார்.
* விரைவில் தச்சர்கள் சங்கத்தின் தேசியத் தலைவராகவும் லண்டன் வர்த்தகக் கவுன்சிலின் உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1865-ல் சர்வதேச தொழிலாளர் சங்கத்தின் செயலராக நியமிக்கப்பட்டார்.
* அன்றைய பல்வேறு சர்வதேசப் பிரச்சினைகள், அமெரிக்க உள்நாட்டுப்போர், போலந்து நாட்டினரின் ரஷ்யாவுக்கு எதிரான கிளர்ச்சிகள் உள்ளிட்ட பல நிகழ்வுகள் குறித்த பிரச்சாரங்களிலும் முக்கியப் பங்காற்றினார். தேசங்களுக்கு இடையேயான சர்ச்சைகளைத் தீர்த்துக்கொள்ள சர்வதேச நடுவர் அமைப்பு (arbitration) நிறுவப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
* பிரான்ஸ் - பிரெஷ்யன் யுத்தம் மூண்டபோது, இதில் பிரிட்டனின் தலையீடு கூடாது என்பதற்கான ‘சமாதானக் குழு’ 1870-ல் கூடியது. இதன் பொதுச் செயலாளராக இவர் நியமிக்கப்பட்டார். இந்தக் குழு அதே ஆண்டு இறுதியில் தொழிலாளர்கள் அமைதி அமைப்பாக மாறியது (Workmen's Peace Association-WPA). அனைத்து சர்வ தேசப் பிரச்சினைகளுக்கும் மத்தியஸ்தம் மூலம் தீர்வு காண்பதையும் சர்வதேச நாடுகளின் உயர் நீதிமன்றம் அமைப்பதையும் தன் இலக்காக இந்த அமைப்பு அறிவித்தது.
* 1885-ல் லிபரல் கட்சி சார்பாக தேர்தலில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினரானார். அனைவருக்கும் கட்டாயக் கல்வி, நேரடி வரி முறை, நிலச் சட்டங்களில் சீர்திருத்தங்கள் மற்றும் தொழிற்சங்க சட்ட திருத்தங்களுக்காகக் குரல் கொடுத்தார்.
* டபிள்யு.பி.ஏ. அமைப்பு சர்வதேச நடுவர்மன்ற லீக் (International Arbitration League) என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. நாடு முழுவதும் இந்த அமைப்பு விரிவடைந்தது. உலக நாடுகளிடையே போர் மூள்வதைத் தவிர்ப்பதில் இந்த அமைப்பு முன்னின்று செயல்பட்டது.
* 1889-ல் நடைபெற்ற இன்டர்-பார்லிமென்டரி கான்ஃபெரென்ஸ் ஃபார் ஆர்பிட்ரேஷன் மாநாட்டுக்குப் பின்னர் பல்வேறு நாடுகளின் நாடாளுமன்றங்களும் இதில் இணைந்தன. உலக அமைதி மற்றும் நல்லிணக்கத்துக்கான இவரது மகத்தான பங்களிப்புகளுக்காக 1903-ல் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
* அமைதியும் நல்லிணக்கமும் நிறைந்த மனித நேயம் உலகெங்கும் பரவுவதற்காகத் தன் வாழ்நாள் முழுவதும் பாடுபட்ட, சர் வில்லியம் ரேண்டல் கிரெமர் 1908-ம் ஆண்டு, 80-வது வயதில் மறைந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT