Published : 20 Jan 2016 10:46 AM
Last Updated : 20 Jan 2016 10:46 AM
டென்மார்க்கின் தலைசிறந்த எழுத்தாளரும் இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்றவருமான ஜோஹன்னஸ் வில்ஹெம் ஜென்சன் (Johannes Vilhelm Jensen) பிறந்த தினம் இன்று (ஜனவரி 20). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
l டென்மார்க்கின் ஃபார்சோ நகர் அருகே உள்ள ஹிம்மர்லேண்ட் கிராமத்தில் (1873) பிறந்தார். 11 வயது வரை வீட்டிலேயே அம்மாவிடம் கல்வி பயின்றார். தந்தை, கால்நடை அறுவை சிகிச்சை நிபுணர். 1893-ல் பட்டப் படிப்பை முடித்தார்.
l கோபன்ஹேகன் பல்கலைக் கழகத்தில் பல அறிவியல் துறைகளை உள்ளடக்கிய மருத்துவப் படிப்பில் சேர்ந்தார். 4-வது ஆண்டு படிக்கும்போது, இவரது ஆர்வம் படைப்புக் களத்தில் திரும்பியது. எழுதத் தொடங்கி, அதில் வருமானமும் கிடைத்தது. இதனால், படிப்பா, எழுத்தா? என்ற குழப்பம் ஏற்பட்டது. இறுதியில், எழுத்தாளராகத்தான் ஆகவேண்டும் என தீர்மானித்தார்.
l இந்த காலக்கட்டத்தில் டான்ஸ்கெரே, எய்னர் எல்க்ஜெர் என்ற 2 நாவல்களை எழுதினார். இவர் பிறந்த ஹிம்மர்லேண்ட் பகுதிதான் இவரது ஆரம்பகால படைப்புகளின் கதைக்களமாக இருந்தது. ஆரம்பத்தில் காதல் கதைகள் எழுதிய இவர், பின்னர் துப்பறியும் நாவல்களையும் எழுதினார். 1898 முதல் 1910 வரை வெளிவந்த ‘ஹிம்மர்லேண்ட் ஸ்டோரிஸ்’ என்ற கதைத் தொடர் இவருக்கு பெயரையும் புகழையும் பெற்றுத் தந்தது.
l அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், தூரக் கிழக்கு நாடுகள் என பல இடங்களுக்குப் பயணம் மேற்கொண்டார். அறிவியல் போலவே பயணங்களும் இவரது படைப்புகளில் தாக்கத்தை ஏற்படுத்தின.
l பத்திரிகையாளராகவும் பல ஆண்டுகள் பணிபுரிந்துள்ளார். எந்த பத்திரிகையையும் சாராமல் தனிப்பட்ட முறையில் ஏராளமான கட்டுரைகள், தொடர்களையும் பல பத்திரிகைகளுக்கு எழுதி வந்தார். 1898-ல் ஸ்பானிய அமெரிக்கப் போர் நடந்தபோது, யுத்த செய்தியாளராகவும் செயல்பட்டார்.
l ஓராண்டு காலம் உழைத்து இவர் எழுதிய ‘கொன்ஜென்ஸ் ஃபால்ட்’ என்ற வரலாற்று நாவல் இவரது மாஸ்டர் பீஸாக கருதப்படுகிறது. இது 1933-ல் ‘தி ஃபால் ஆஃப் தி கிங்’ என்ற பெயரில் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது. இது டென்மார்க்கின் குறிப்பிடத்தக்க வரலாற்று நாவல் என்று போற்றப்படுகிறது.
l 1906-ல் வெளிவந்த இவரது கவிதைத் தொகுப்பான ‘டிக்டே 1906’, டென்மார்க் இலக்கியத்துக்கு முதன்முதலாக உரைநடைக் கவிதையை அறிமுகம் செய்து வைத்தது. கதைகள், கவிதைகள், நாடகங்கள் மட்டுமின்றி, ஏராளமான கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.
l இவரது கட்டுரைகள் பெரும்பாலும் அறிவியல், மானுடவியல், பரிணாம வளர்ச்சித் தத்துவங்களை அடிப்படையாகக் கொண்டவை. இவரது படைப்புகள் ஏறக்குறைய 60 தொகுதிகளாக வெளிவந்துள்ளன.
l பரிணாம வளர்ச்சி குறித்து ஆராய்ந்து அவற்றுக்கான கோட்பாடுகளை உருவாக்கினார். இந்த கோட்பாடுகளின் அடிப்படையில் ‘டென் லாங்கெ ரெஜ்சி’ என்ற தலைப்பில் 6 நூல்கள் எழுதினார். இவை ‘தி லாங் ஜர்னி’ என்ற பெயரில் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு இரண்டு தொகுதிகளாக 1938-ல் வெளியிடப்பட்டது.
l இலக்கியத்துக்கான நோபல் பரிசை 1944-ல் பெற்றார். டென்மார்க் இலக்கியத்தின் முக்கியத் தூண், கவிதைக் களத்தில் நவீனத்துவத்தின் தந்தை என்று போற்றப்படும் ஜோஹன்னஸ் வில்ஹெம் ஜென்சன் 77-வது வயதில் (1950) மறைந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT