Published : 20 May 2017 10:22 AM
Last Updated : 20 May 2017 10:22 AM

அயோத்தி தாசர் 10

சமூகப் போராளி, தமிழறிஞர்

தென்னிந்தியாவின் முதல் ஜாதி எதிர்ப்புப் போராளி, சமூக சேவகர், தமிழறிஞர், சித்த மருத்துவருமான அயோத்தி தாசர் (C.Iyothee Thass) பிறந்த தினம் இன்று (மே 20). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

* சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியில் பெரும் கல்விப் பின்னணி உள்ள குடும்பத்தில் பிறந்தார் (1845). இவருடைய தாத்தா, வழக்கில் இல்லாமல் போயிருந்த திருக்குறளைத் தன் குடும்ப சேமிப்பு ஏடுகளிலிருந்து மீட்டெடுத்து தமிழ் இலக்கியச் சுவடிகளைச் சேகரிப்பதில் தன் வாழ்நாளைச் செலவிட்ட எல்லிஸ் துரையிடம் வழங்கியவர். அதன் பின்னர்தான் திருக்குறள் அச்சு வடிவுக்கு வந்தது.

* தந்தையின் பணி காரணமாகக் குடும்பம் நீலகிரிக்குக் குடியேறியது. இவரது இயற்பெயர் காத்தவராயன். தந்தையிடமே ஆரம்பக்கல்வி கற்றார். பின்னர் காசிமேடு சதாவதானி வைரக்கண் வேலாயுதம் புலவர், வல்லக்காளத்தி வீ.அயோத்தி தாசர் பண்டிதர் ஆகியோரிடமும் கல்வி கற்றார். மேலும் சித்த மருத்துவம், தமிழ், இஸ்லாம், கிறிஸ்தவம், இந்த சமய தத்துவங்களையும் கற்றார்.

* தன் குரு மீது கொண்ட பற்றால் தனது பெயரை அயோத்தி தாசர் என மாற்றிக்கொண்டார். தான் சார்ந்த மக்களின் வாழ்க்கை, சமூகத்தில் அவர்களது நிலை, தீண்டாமைக் கொடுமை, கல்வியறிவின்மை இவற்றைப் பார்த்து வளர்ந்த இவர், அவர்களுக்காகப் போராடுவதையே தன் குறிக்கோளாகக் கொண்டார்.

* 1870-ல் நீலகிரியில் அத்வைதானந்த சபையை நிறுவினார். இதன் மூலம் தேயிலைத் தோட்டப் பணியாளர்கள், மலை ஜாதி பழங்குடியின மக்களை ஒன்றிணைத்து ஜாதி பேத உணர்வை ஒழிக்கப் பாடுபட்டார்.

* அனைவரும் கல்வி கற்கும் வாய்ப்புகளுக்கு உள்ள சமூகத் தடைகளை நீக்க வேண்டும், கிராம ஒன்றியங்கள், நகராட்சிகள் ஆகியவற்றில் அனைத்துப் பிரிவினருக்கும் பிரதிநிதித்துவம் வேண்டும், பொது நீர்நிலைகளைப் பயன்படுத்துவதற்கான தடை நீக்கப்பட வேண்டும் ஆகியவற்றுக்காகப் போராடி வந்தார்.

* ஒடுக்கப்பட்ட மக்களுக்காக சென்னையில் பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட முக்கிய காரணமாக இருந்தார். ஏழைகளுக்கு இலவசக் கல்வி, மதிய உணவு வழங்குவதில் முன்னோடியாக இருந்தார். 1885-ல் ‘திராவிட பாண்டியன்’ என்ற இதழின் துணை ஆசிரியராகப் பணியாற்றினார்.

* 1891-ல் இரட்டைமலை நிவாசனுடன் இணைந்து பஞ்சமர் மகாஜன சபையைத் தோற்றுவித்தார். 1898-ல் ஏராளமான தீண்டத்தகாத மக்களுடன் இணைந்து புத்த மதத்தைத் தழுவினார்.

* 1907-ல் ‘ஒரு பைசா தமிழன்’ என்ற செய்தி வார இதழைத் தொடங்கினார். இதில் அரசியல், சமூகம், ஜாதி, மதம், இலக்கியம் குறித்து கட்டுரைகளை எழுதினார். பின்னர் இது ‘தமிழன்’ என்ற பெயரில் வெளிவரத் தொடங்கியது.

* ‘புத்தரது ஆதி வேதம்’, ‘இந்திரர் வேத சரித்திரம்’, ‘அம்பிகையம்மன் சரித்திரம்’, ‘அரிச்சந்திரன் பொய்கள்’, ‘கபாலீசன் சரித்திர ஆராய்ச்சி’, ‘சாக்கிய முனி வரலாறு’, ‘திருக்குறள் கடவுள் வாழ்த்து’, ‘புத்த மார்க்க வினா விடை’ உள்ளிட்ட பல நூல்கள், 30 தொடர் கட்டுரைகள், 2 விரிவுரைகள், 12 சுவடிகளுக்கு உரை, ஏராளமான அரசியல் கட்டுரைகள், கேள்வி பதில், பகுத்தறிவுக் கட்டுரைகள் என நூற்றுக்கணக்கில் எழுதியுள்ளார்.

* தாழ்த்தப்பட்ட சமூகத்தினரின் விடிவெள்ளியாகத் தோன்றி அவர்களின் முன்னேற்றத்துக்காகத் தன் வாழ்நாளை அர்ப்பணித்த அயோத்தி தாசர் 1914-ம் ஆண்டு 69-வது வயதில் மறைந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x