Published : 28 Jan 2017 10:08 AM
Last Updated : 28 Jan 2017 10:08 AM
நோபல் பெற்ற ஸ்வீடன் அறிவியலாளர்
நோபல் பரிசு பெற்ற ஸ்வீடன் அறிவியலாளர் தோமாஸ் ராபர்ட் லின்டால் (Tomas Robert Lindahl) பிறந்தநாள் இன்று (ஜனவரி 28). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
* ஸ்வீடனின் ஸ்டாக்ஹோம் நகருக்கு அருகே உள்ள குங்ஸ்ஹோல்மேன் என்ற பகுதியில் (1938) பிறந்தவர். தொழில் செய்துவந்த தந்தை, இலக்கியத்தில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர். தனது சகோதர, சகோதரிகளின் குடும்பத்தாருடன் சேர்ந்து வாழ்ந்து வந்தார்.
* கூட்டுக் குடும்பத்தில் வளர்ந்ததால் உறவினர்களின் அன்பும் அவர்களது வழிகாட்டுதலும், பல திறன்களைக் கற்றுக்கொள்ள வைத்தது. வாழ்க்கையில் சரியான பாதையைத் தேர்வுசெய்ய இந்தக் கற்றல் பெரிதும் துணைநின்றதாக இவர் கூறியுள்ளார்.
* பள்ளிக் கல்வியை முடித்து, மருத்துவப் படிப்பில் சேர்ந்தார். கல்லூரி நாட்களின் ஆரம்பகாலத்தில் இலக்கியம், ஜாஸ் இசையில் ஆர்வம் கொண்டிருந்தார். பின்னர், மருத்துவ ஆராய்ச்சிகளில் நாட்டம் பிறந்தது. மருத்துவப் பட்டம் பெற்ற பிறகு, ஸ்டாக்ஹோம் கரோலின்ஸ்கா ஆய்வு மையத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.
* அப்போது, தன் பேராசிரியருடன் இணைந்து டிஎன்ஏ-வின் பண்புகள், செயல்பாடுகள் குறித்த ஆய்வுகளில் ஈடுபட்டார். பிறகு பிரின்ஸ்டன், ராக்ஃபெல்லர் பல்கலைக்கழகங்களில் முதுமுனைவர் பட்டம் பெற்றார். அங்கு நியூக்ளிக் அமிலங்களின் பண்புகள் குறித்து ஆராய்ந்தார்.
* கோட்டன்பர்க் பல்கலைக்கழகத்தில் மருத்துவம், உடலியல் வேதியியல் பேராசிரியராகப் பணியாற்றினார். பின்னர் பிரிட்டன் சென்று, புற்றுநோய் ஆய்வு மையத்தில் ஆய்வாளராகச் சேர்ந்தார். எப்ஸ்டெய்ன்-பார் வைரஸ் (இபிவி) மற்றும் உட்புற செல் அமைப்பில் இருந்து தன்னிச்சையாக உருவாகும் டிஎன்ஏ கோளாறுகள் குறித்த ஆராய்ச்சிகளில் கவனம் செலுத்தினார்.
* லண்டனின் ஹெர்ட்போர்ட்ஷயர் புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தின் இயக்குநராகப் பணியாற்றினார். தொடர்ந்து பல ஆய்வுகளை மேற்கொண்டார். புற்றுநோய்க்கான மரபியல் பண்புகள் குறித்து ஆய்வு செய்தார். இதுதொடர்பாக ஏராளமான கட்டுரைகளை வெளியிட்டார். மரபணுக்களில் கோளாறு ஏற்படும்போது நம் உடல் எவ்வாறு தானாகவே அவற்றை சரிசெய்து கொள்கிறது என்பதை ஆராய்ந்து எடுத்துக் கூறினார்.
* தன் சகாக்களுடன் இணைந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டவர், பாக்டீரியா மற்றும் பாலூட்டிகளின் செல்களில் டிஎன்ஏ கோளாறை சரிசெய்யும் என்சைம்கள் பொதிந்துள்ள அதிசயத்தை ஆராய்ச்சி மூலம் கண்டறிந்தார். இந்த ஆய்வுக்காக அமெரிக்க விஞ்ஞானி பால் மோட்ரிச், துருக்கியைச் சேர்ந்த அஜீஸ் சான்சார் ஆகியோருடன் இணைந்து வேதியியலுக்கான நோபல் பரிசு இவருக்கு 2015-ல் வழங்கப்பட்டது.
* லண்டனில் கிளாரே ஹால் ஆய்வுக்கூடத்தில் டிஎன்ஏ கோளாறு, டிஎன்ஏ பெருக்கம், செல் பிரிவு உள்ளிட்டவை தொடர்பாக இவரது தலைமையில் சிறப்பான ஆய்வுகளை மேற்கொள்வதற்கான மையத்தை மேம்படுத்தினார். பரம்பரை நோய்கள் எவ்வாறு உண்டாகின்றன என்பது குறித்தும், புற்றுநோய், வயது முதிர்வு ஆகியவற்றை உண்டாக்குவதற்கான மூலக்கூறு மாற்றங்கள் குறித்தும் அறிந்துகொள்ள இவரது கண்டுபிடிப்புகள் துணை நிற்கின்றன.
* டிஎன்ஏ கோளாறுகள் குறித்த அடிப்படைப் புரிதல்களை ஏற்படுத்தியதற்காக ராயல் சொசைட்டியின் பதக்கம் பெற்றார். நார்வேனியன் அறிவியல் அகாடமி உள்ளிட்ட பல்வேறு அறிவியல் அமைப்புகளின் உறுப்பினராகச் செயலாற்றினார். காப்ளே பதக்கமும் பெற்றார்.
* புற்றுநோய், மரபணுக்கள் உள்ளிட்ட பல்வேறு களங்களில் முக்கியத்துவம் வாய்ந்த ஆய்வுகளை மேற்கொண்டு, மருத்துவ உலகுக்கு அரிய பங்களிப்பை வழங்கியுள்ள தோமாஸ் ராபர்ட் லின்டால் இன்று 79-வது வயதில் அடியெடுத்து வைக்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT