Published : 04 Mar 2017 10:29 AM
Last Updated : 04 Mar 2017 10:29 AM
அமெரிக்க மருத்துவர், ஆராய்ச்சியாளர்
பெரியம்மை தடுப்பூசியை அமெரிக்காவில் முதன்முறையாக வெற்றிகரமாகப் பரிசோதனை செய்த பிரபல மருத்துவரும், ஆராய்ச்சியாளருமான பெஞ்சமின் வாட்டர்ஹவுஸ் (Benjamin Waterhouse) பிறந்த தினம் இன்று (மார்ச் 4). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
* அமெரிக்காவின் நியூபோர்ட் நகரில் (1754) பிறந்தார். தந்தை தச்சர். தாய் தன் மகனை மருத்துவராக்கிப் பார்க்க ஆசைப்பட்டார். மருத்துவம் தொடர்பான நிறைய நூல்களைப் படித்ததில், மருத்துவராகும் விருப்பம் இவரிடமும் துளிர்விட்டது.
* உள்ளூரில் உள்ள ஒரு மருத்துவரின் உதவியாளராக 16 வயதில் பணியாற்றி னார். லண்டனில் உறவினர் வீட்டில் தங்கி, எடின்பரோவில் மருத்துவம் பயின்றார். 1780-ல் லெய்டனில் உள்ள டச்சு பல்கலைக்கழகத்தில் மருத்துவத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். 1782-ல் அமெரிக்கா திரும்பினார்.
* கனிமங்கள் குறித்து விரிவுரைகள் நிகழ்த்தினார். ஹார்வர்டு மருத்துவக் கல்லூரியின் இணை நிறுவனரான இவர், அங்கு பேராசிரியராகவும் பணியாற்றினார். பெரியம்மை நோய் குறித்து இங்கிலாந்தின் எட்வர்டு ஜென்னர் ஆராய்ச்சி மேற்கொண்டது குறித்தும், அதற்கான தடுப்பு மருந்து குறித்தும் கேள்விப்பட்டார்.
* உடனடியாக இதுதொடர்பான ஆராய்ச்சியில் இறங்கினார். இதுபற்றி பிரபல ஆராய்ச்சியாளர்களுடன் கடிதம் மூலம் தொடர்பு கொண்டார். இந்த தடுப்பூசி வழங்கப்பட வேண்டிய முறையை வகுத்தார். இதுகுறித்து கட்டுரை எழுதி வெளியிட்டார். பெரியம்மைக்கான தடுப்பூசியை அமெரிக்காவில் பிரபலப்படுத்த வலியுறுத்தி பிரச்சாரம் செய்தார். பல விழிப்புணர்வுக் கட்டுரைகள் எழுதினார்.
* பெரியம்மை தடுப்பு மருந்தை அமெரிக்காவில் முதன்முதலாக பரிசோதனை செய்து வெற்றியடைந்தார். இதில் இவர் கொண்டிருந்த உறுதியான நம்பிக்கையாலும், இந்நோயை ஒழித்துக்கட்ட வேண்டும் என்ற முனைப்பாலும், தன் 5 வயது மகன் உட்பட சொந்த குடும்பத்தினர், பணியாளர்களுக்கும் இந்த மருந்தை அளித்து பரிசோதனை செய்தார்.
* அவர்களிடம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்ததைக் கண்டறிந்தார். இந்த வெற்றி குறித்து பிரச்சாரம் செய்தார். இதற்கு எதிர்ப்பு கிளம்பியதால், ஹார்வர்டில் இருந்து வெளியேறினார். 1812-ல் அமெரிக்க ராணுவத்தில் சேர்ந்து, ராணுவ மருத்துவக் குழுவில் இணைந்து பணிபுரிந்தார். அங்கும் பெரியம்மை நோய் தடுப்பு மருந்தை வழங்கினார்.
* ‘ஹாஸ்பிடல் சர்ஜன்’, ‘போஸ்ட் சர்ஜன்’ பதவிகளை வகித்த பிறகு, 1821-ல் ராணுவ சேவையில் இருந்து விடுவிக்கப்பட்டார். அப்போது, இவரது இலக்கியத் திறனுக்கும் நேரம் கிடைத்தது. நிறைய கதைகள், நாவல்கள் எழுதினார். ‘ஏ ஜர்னல் ஆஃப் ஏ யங் மேன் ஆஃப் மசாசூசெட்ஸ்’ என்ற இவரது கதை மிகவும் பிரபலமடைந்தது.
* ராணுவத்தில் இருந்து வெளிவந்த பிறகு, தனது ஆராய்ச்சி, கோட்பாடுகளைப் பத்திரிகைகளில் எழுதினார். பெரியம்மை தடுப்பூசி குறித்த பிரச்சாரத்தை மீண்டும் தொடங்கினார். தடுப்பூசி போடும் முறை குறித்து பலருக்கும் கற்றுத் தந்தார்.
* முதலில் இவரது பேச்சு பெரிய அளவில் எடுபடவில்லை. பின்னர் மெல்ல மெல்ல இவரது உறவினர்கள், நண்பர்கள் நோயாளிகள் எனத் தொடங்கி, நாடு முழுவதும் பெரியம்மை தடுப்பூசி பிரபலமடைந்தது. புகை பிடிப்பது, மது அருந்துவதால் ஏற்படும் தீங்குகளைத் தன் மாணவர்களிடம் எடுத்துரைத்தார்.
* மருத்துவம், மருந்துகள் தொடர்பாக ஏராளமான நூல்களை எழுதினார். அமெரிக்க கலை, அறிவியல் அகாடமி உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இறுதிவரை சுறுசுறுப்பாக இயங்கிவந்த பெஞ்சமின் வாட்டர்ஹவுஸ் 92-வது வயதில் (1846) மறைந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT