Last Updated : 27 Jan, 2017 11:58 AM

 

Published : 27 Jan 2017 11:58 AM
Last Updated : 27 Jan 2017 11:58 AM

புரட்சிக்கு நேரமில்லை!

என் மனைவி

என் பிள்ளை

என் வீடு என்றிருக்கும்

சின்னதோர் கடுகுள்ளத்தான் நான்

புரட்சிக்கு நேரமில்லை எனக்கு



*



புரட்சிக்கு பஸ் பிடிக்க வேண்டும்

புரட்சிக்கு ரயில் பிடிக்க வேண்டும்

புரட்சிக்குக் குறைந்தபட்சம்

ஆட்டோவாவது பிடிக்க வேண்டும்



*



புரட்சிக்கு இட்டுச் செல்லும்

ஆட்டோக்காரர்களோ

பல மடங்கு கட்டணம் கேட்பார்கள்

புரட்சிக்கு இலவசம் எனும்

வாசகம் கொண்ட

ஆட்டோக்காரர்களைத் தேடவும்

நேரமில்லை எனக்கு

ஏற்கெனவே அவற்றை

ஆக்கிரமித்திருப்பார்கள்

புரட்சியாளர்கள்

*

புரட்சிக்கு கால்டாக்ஸிகள்

வருவதில்லை

அதனால் லாபமேதுமில்லை

அவர்களுக்கு

புரட்சிக்குச் சிறப்புப் பேருந்துகளும்

சிறப்பு ரயில்களும் விடப்படுவதில்லை

கைதொடும் தூரத்தில்

புரட்சி நடந்தால் வசதியென்றாலும்

புரட்சிகள் இப்போதெல்லாம்

நேரலை ஒளிபரப்பாய் வருவது

அதைவிட வசதி

*

புரட்சிக்குச் செல்லும்

பாதைகளைப் போய்ச் சேர விடாமல்

வீட்டைச் சுற்றியே தடுப்புகளும்

முள்வேலிகளும் நடப்பட்டிருப்பதால்

புரட்சிக்குச் செல்வதொன்றும்

அவ்வளவு எளிதில்லைதான்

*

எல்லாவற்றுக்கும் மேலாக

புரட்சிக்கு எனக்கு நேரமில்லை

என் மனைவி

என் பிள்ளை

என் வீடு என்றிருக்கும்

சின்னதோர் கடுகுள்ளத்தான் நான்.

-ஆசை, தொடர்புக்கு: asaithambi.d@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x