Published : 17 Sep 2014 02:17 PM
Last Updated : 17 Sep 2014 02:17 PM

குருதி ஆட்டம் 1 - இருட்டுக் கோடாங்கி

இது.. செறுபகை வென்ற சேது நாட்டு வாள். சதிகளின் தலை அறுத்துச் சதுராடிய வாள். வெட்டுப்பட்டுச் சரிந்த வேங்கைகளின் ரத்தம் நக்கிய ஓநாய்களின் நாக்கறுத்த வாள். ஆழிப் பேரலையாய் சுழித்து எழுகிறது தவசியாண்டியின் கோடாங்கிச் சத்தம். வனக் கன்னி செவ்வந்தியின் சுவாசம் தழுவி மணக்கின்றன வண்ணப் பூக்கள். வைக்கோல் பிறிகளுக்குள் ஒளிந்திருக்கும் மறத் தோள்கள், வாளெடுத்து ஆடிய குருதி ஆட்டம்.

இருட்டுக் கோடாங்கி

உச்சி ராத்திரி. உள்ளங்கை தெரியாத இருட்டு.

தவசியாண்டிக் கோடாங்கி அடிக்கிற அடியில் காடு கிழியுது.

‘டுண்…. டுண்ண்… டுண்…’

ஆவேசம் அடங்காத அடி. லயம் தப்பினால் கோடாங்கி தோல் கிழிந்துபோகும்.

வனாந்தரக் காற்று, பம்மிப் பதுங்குது. சுயராஜ்ஜியமாக ஊர்ந்து, அலைந்து இரை தேடப் புறப்பட்ட காட்டு ஜீவராசிகள், கோடாங்கிச் சத்தத்தில் குலை நடுங்கி, பசியோடும் ஆத்திரத்தோடும் பொந்துகளுக்குள் சுருண்டு கிடக்கின்றன.

ஆளைக் கொல்லும் ஜந்துக்கள் எல்லாம் வாய் பொத்தி விழித்திருக்க, நீலக் கழுத்து மயில்கள், ‘வெடுக் வெடுக்’ எனத் தலை சிலுப்பி, கோடாங்கிச் சத்தத்தையும் மீறிப் பெருங்குரல் எடுத்துக் கத்துகின்றன.

குரங்குகள், குட்டிகளை அடி வயிற்றில் அணைத்துப் பல்லிளித்துக் கீச்சாட்டம் போடுகின்றன. மலை உயர மர உச்சியில் பிடி இழந்த தேவாங்கு, ‘தொப்’ என விழுந்து, உருளும் கண்களோடு அடி மரம் பிடித்து மேலேறுகிறது.

நட்சத்திரங்களற்ற கருப்பு வானம், பொறுப்பில்லாத தகப்பனாய் மல்லாந்து கிடக்கிறது.

பாறை இடுக்குகளில் கசிந்தோடி வரும் ஓடை நீர்ச் சலசலப்பில் முழங்கால் நனைய, கண் மூடி நிற்கிறான் தவசியாண்டி. இடுப்புக்கு மேல் வெற்றுடம்பு. அள்ளி முடிந்திருந்த கோடாலி கொண்டைமுடி அவிழ்ந்து, பிடறி மறைத்துத் துள்ளி ஆடுது. உடம்பெல்லாம் பூத்துப் பெருகும் வியர்வை, புட்டம் நனைத்து, கால் வழியே ஓடிக் கரையுது காட்டு நீராய். சாராய நாற்றமெடுக்கும் உதடுகளும் கன்னத்துச் சதையும் அபிநயிக்க, இமை திறவாமல் அடிக்கிறான் தவசியாண்டி.

“ம்… ம்ம்ஹ்…. ம்ம்…” செல்லச் சிணுங்கு சிணுங்கினாள்.

“என்னடீ…. சிணுங்கலூ…!”

படுக்கையில் விலகிப் புரண்டவளை, எட்டி பிடித்தான் உடையப்பன்.

குழைந்தாள்.

‘க்ளுக்’ எனச் சிரித்தவன், “இங்கே பார்றா. நேத்து முந்தா நாளுதான் சமஞ்ச குமரி மாதிரில்ல கொணங்கிறா” தோள் தொட்டு இழுத்தான்.

புரண்டு உடையப்பனின் மார்பில் வந்து விழுந்தவள், இடது கை உள்ளங்கையால் உடையப்பனின் வழுக்கைத் தலையைத் தடவினாள்.

“இங்கே மட்டும் என்னவாம்? வாலிபம் துள்ளுதாக்கும்? வெச்ச கையி… வழுக்கிட்டுப் போகுது!” பின் மண்டை வரை தடவினாள்.

சல்லாபக் கோபத்துடன் கடிக்க வந்தவனின் வாயைப் பொத்தி, “ச்ச்சேய், சாராய நாத்தம் குடலைப் புடுங்குது” நெளித்துச் சரசமாடினாள்.

“ஏன்டீ என் வாய் மட்டும்தான் நாறுதாக்கும்? கத்தை கத்தையா குடுப்பேனே…. அந்தக் காசும் நாறுமே?”

“ஆமலூ பெரிய காசு! ராவு முழுக்க முந்தி விரிச்சு, முழுசா ஒப்படைச்சிட்டு, காலையிலே ரெண்டு காசுகளைக் கையேந்தி வாங்கிட்டுப் போற ஏனவாய்ச் சிறுக்கி நான் ஒருத்தியாதான் இருப்பேன்!”

“என்னவாம் இன்னைக்கு தெக்குப் பட்டிக்காரிக்கு இம்புட்டுக் கோவம்?”

உடையப்பனின் மார்புக்குள் மூச்சு காற்றுபட பேசினாள். “ஒங்களுக்கு நான் ஒருத்திதான் ஓவியமா இருக்கேனாக்கும்? நித்தம் ஒரு பொண்டாட்டி... நெகர் இல்லாத மஹராசா” மார்பில் செல்லக் குத்து குத்தினாள்.

‘டுண்…. டுண்ண்… டுண்…’

வனக்கோடாங்கிச் சத்தம், நர உயிர்ப் பசியோடு கொலை நாக்குகள் நீள, ஊருக்குள் நுழைந்து உடையப்பனின் மாளிகையைத் துழாவுகிறது.

தெற்குப்பட்டிக்காரியின் கோபத்தை ரசித்து, முதுகு மறைத்துக்கிடந்த கூந்தலைக் கோதினான்.

“எவ எவளோ வந்து திங்கிறாளுக. அடியேய் இந்தாடீ, அந்த வீட்டை வெச்சுக்கோ. இந்தக் காட்டை உழுதுக்கோனு கை காட்ட மனசு வருதா? பொண்டாட்டி செத்து இருபது வருசமாச்சு. பேரு சொல்லப் பிள்ளையுமில்லே. வாரிசு இல்லாத சொத்துத்தானே? கொஞ்சோண்டு கிள்ளிக் குடுத்தாக் கொறைஞ்சா… போகுது?” உடையப்பனின் நெஞ்சு ரோமங்களைக் கவ்வினாள்.

உதட்டு உரசலில் கண்கள் செருகின. மூடியவாறு சொன்னான். “இருக்கான்டீ, எனக்கு வாரிசு இருக்கான்!”

“எதூ… வாரிசு இருக்கா? யாரு..?” பதறினாள்.

பதில் சொல்ல வாய் திறந்தான்.

‘டுண்…. டுண்ண்… டுண்…’

ஆங்காரப் பேயாய் மோதும் கோடாங்கிச் சத்தம், குருதி கசியும் நக விரல்களால் கதவு, ஜன்னல்களைக் கவ்வி பிடித்து ஆட்டியது. படுக்கை அறை ஜன்னல் கண்ணாடிகள் கிடுகிடுத்தன. கட்டில் புரண்டது. தெற்குப்பட்டிக்காரி கீழே உருண்டாள். கைப் பிடிமானம் கிடைக்காத உடையப்பன், நிலைகொள்ளாமல் அறை முழுக்கத் தடுமாறினான்.

‘டுண்…. டுண்ண்… டுண்…’

புரண்டு படுத்த ஊர், தூக்கத்தில் புலம்பியது.

“ஊருக்குத் தலை செரைக்கிற நாவிதன் தவசியாண்டிக்கு யாரு மேல இம்புட்டுக் கோவம்?”

“ஊருக்குள்ளே குடியிருக்கவே மாட்டேன்னு, தாயில்லா பொண்ணை கூட்டிக்கிட்டு காட்டுக்குள்ளே ஒதுங்கி இருபது வருஷத்துக்கு மேலே ஆச்சு. அவன் கோவம் யாரு மேலேயோ, என்னைக்கு தீருமோ!”

தீந் தென்றல் மலர்த்திப் போட்ட பூவிதழாக… அவரைக் கொடி இடை திருகி, கண் விழித்தாள் செவ்வந்தி. செம்பருத்திச் செடி உயரம். மினுமினுக்கும் கமுகு மேனி. மேற்கே சரியும் சூரிய நிறம். பலாச்சுளை மூக்கு. பாக்கு உதடு. கம்பங்கதிர் கழுத்து. கால் கூசும் நடை.

தனித்திருக்கும் வனாந்தரத்து ஒற்றைக் குடிசையின் அணையா விளக்கு, ஒளிக் கீற்று அசையாமல், கற்சிற்பமாக எரிந்துகொண்டிருந்தது.

செவ்வந்தி, விரிப்பை விட்டு எழாமலே, விளக்கைத் தூண்டினாள். வெளிச்சம் பரவிப் படர்ந்த வாசலோரம், தகப்பன் தவசியாண்டியின் பாய் விரிப்பு மட்டும் கிடந்தது.

கை ஊன்றி எழுந்தாள். கூந்தலைக் கோதி முடிந்து கொண்டை இட்டாள். வாசலுக்கு வந்தாள். காட்டையும் ஊரையும் அலைக்கழிக்கும் கோடாங்கிச் சத்தம், ஒற்றைக் குடிசையை நெருங்காமல் ஒதுங்கிப் போனது. கண் பழகிய காட்டு இருட்டுக்குள் கூவினாள்.

“அப்பா!”

‘டுண்…. டுண்ண்… டுண்…’

“அப்பா!”

தவசியாண்டியைத் தேடி இருட்டுக்குள் நடந்தாள் செவ்வந்தி.

- குருதி பெருகும்…

வேல ராமமூர்த்தி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x