Published : 10 Jun 2016 11:18 AM
Last Updated : 10 Jun 2016 11:18 AM
M.G.R. நல்ல காரியங்களுக்கு நன்கொடை வழங்குவதிலும் சரி; நாட்டுக்கும், மொழிக்கும் உழைத்தவர்களின் குடும்பங்களுக்கு உதவுவதிலும் சரி, முதல் ஆளாக நிற்பார். அப்படி உதவுவதில் அரசு நடைமுறைகளால் தாமதமோ, விதிமுறைகள் மீறலோ இல்லாமல் பார்த்துக் கொள்வார்!
வெள்ளையருக்கு சிம்ம சொப்பன மாகத் திகழ்ந்த லோகமான்ய பாலகங்காதர திலகருக்கு புனேயில் வெண்கல சிலை வைக்க மகாராஷ்டிர அரசு முடிவு செய்தது. தேசியத் தலைவரான திலகரின் சிலை நிறுவ மற்ற மாநிலங்களின் பங்களிப் பும் இருக்க விரும்பி, எல்லா மாநிலங்களிடமும் மகாராஷ்டிர அரசு நிதி கோரியது.
திலகரின் பேரன் அந்த மாநிலத்தின் சட்ட மேலவைத் தலைவராக இருந்தார். சிலை அமைக்க நிதி கோருவதற்காக அவர் தமிழகம் வந்தார். அப்போது, தமிழக சட்ட மேலவைத் தலைவராக இருந்த ம.பொ.சி.க்கு முன்கூட்டியே கடிதம் எழுதிவிட்டு, குறிப்பிட்ட நாளில் வந்து அவரை சந்தித்தார். அன்று தமிழக சட்டப்பேரவை மற்றும் மேலவைக் கூட்டம் நடந்து கொண்டிருந்தது.
மேலவைத் தலைவரான ம.பொ.சி- யின் அறையில் அவரை சந்தித்த திலக ரின் பேரன், முதல்வர் எம்.ஜி.ஆரை சந்திக்க விருப்பம் தெரிவித்தார். அதை அறிந்து, பேரவை நடவடிக்கைகளில் பங்கு கொண்டிருந்த முதல்வர் எம்.ஜி.ஆரும் ம.பொ.சி.யின் அறைக்கு வந்துவிட்டார். திலகருக்கு சிலை அமைக் கப்பட இருப்பதையும் தமது வருகைக் கான நோக்கத்தையும் அவரிடம் திலகரின் பேரன் தெரிவித்தார். உடனே, தனது செயலாளரை அழைத்த எம்.ஜி.ஆர்., அவரது காதில் ஏதோ சொன்னார்.
செயலாளர் வெளியே சென்று முதல்வரின் அறையிலிருந்து காசோலை புத்தகத்தைக் கொண்டு வந்தார். காசோ லையில் ரூ.50 ஆயிரம் தொகையை எழுதி கையெழுத்திட்டு ‘‘திலகர் சிலை அமைக்க இது என் நன்கொடை’’ என்று கூறி திலகரின் பேரனிடம் கொடுத்தார் எம்.ஜி.ஆர்.! இவ்வளவு பெரிய தொகையை, அதுவும் முதல்வர் தனிப் பட்ட முறையில் தருவார் என்று எதிர் பார்க்காத திலகரின் பேரன், அவருக்கு மகிழ்ச்சியுடன் நன்றி கூறினார். காசோலையைப் பெற்றுக் கொண்ட அவருக்கு மனதில் ஒரு சந்தேகம்.
‘‘அரசிடம் இருந்துதான் பணத்தை எதிர்பார்த்தேன். நீங்கள் சொந்தப் பணத் தில் இருந்தே கொடுத்து விட்டீர்களே?’’ என்று எம்.ஜி.ஆரிடம் கேட்டார். ‘அரசு மூலம் கொடுக்காமல் நீங்களே கொடுத் தது ஏன்?’ என்ற அவரது சந்தேகம் அந்தக் கேள்வியில் தொக்கி நின்றது. அது எம்.ஜி.ஆருக்குப் புரியாமல் போய் விடுமா? ‘‘அரசாங்க நிதியில் இருந்து கொடுப்பதென்றால் நான் எழுதும் கடிதம் முறைப்படி ஒவ்வொரு துறையாகச் சென்று ஒப்புதல் பெற்று பணம் கிடைக்க மாதக்கணக்கில் ஆகும். அதைத் தவிர்க் கவே என் சொந்தப் பணத்தைக் கொடுத் தேன். மேலும், திலகரின் சிலை அமைய நானே நன்கொடை வழங்குவதில் எனக்கு மகிழ்ச்சி!’’ என்று புன்முறுவலுடன் எம்.ஜி.ஆர். சொல்ல, நடைமுறைக்கேற்ப முடிவெடுக்கும் அவரது திறனையும் தேசப்பற்றையும் கண்டு சிலிர்த்தார் திலகரின் பேரன்!
தமிழக அமைச்சராகவும் சட்டப் பேரவைத் தலை வராகவும் இருந்த க.ராசாராமுக்கு வேண்டிய தமிழ்ப் பேராசிரியர் க.திருநாவுக்கரசு. திருக்குறள் சம் பந்தமான ஆய்வு நூல்களை எழு தியவர். திருக் குறள் ஆராய்ச்சி தொடர்பாக படித்தும் எழுதி யும் திருநாவுக் கரசுக்கு கண் பார்வையே மங்கி விட்டது. ஒருநாள் அவர் ராசாராமை சந்தித்து, ‘‘எனது மகள் மருத்துவக் கல்லூரியில் சேர விரும்புகிறாள். ஆனால், தேவை யான மதிப்பெண் களைவிட, ஒன் றிரண்டு குறைவாக உள்ளது. என் மக ளுக்கு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்க முதல் வரிடம் கூறி ஏற்பாடு செய்ய வேண்டும்’’ என்று கேட்டுக் கொண்டார்.
இதை முதல்வர் எம்.ஜி.ஆரின் கவனத் துக்கு ராசாராம் கொண்டு சென்றார். திருநாவுக்கரசு எழுதிய நூல்களையும் முதல்வரிடம் அளித்தார். ராசாராம் கூறி யதை அமைதியாகக் கேட்ட எம்.ஜி.ஆர்., தமிழுக்குத் தொண்டு செய்தவரின் மகளுக்கு உதவ முடிவு செய்தார். அவர் மனதுக்குள் தீர்மானித்து விட்டாலும் உடனடியாக வெளியே சொல்லவில்லை. எம்.ஜி.ஆர். மவுனமாக இருக்கவே, ‘‘எப்படியாவது அந்த மாணவிக்கு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்’’ என்று வலியுறுத்தினார் ராசாராம்.
அதற்கு, ‘‘செய்துவிடலாம்’’ என்று எம்.ஜி.ஆரிடமிருந்து பதில் வந்தது. ‘என்ன இவ்வளவு சாதாரணமாக சொல்கிறராரே? நமக்காக ஒப் புக்கு சொல் கிறாரோ?’ என்ற எண்ணம் மேலிட, ‘‘என்ன செய்யப் போகிறீர்கள்?’’ என்று ராசாராம் வினவினார்.
‘‘தமிழ்த் தொண்டு செய்த குடும்பங்களைச் சேர்ந்தவர் களுக்கு மருத் துவக் கல்லூரி யில் இந்த ஆண்டு முதல் இரண்டு இடங்கள் ஒதுக் கப்பட வேண்டும் என்ற புதிய விதி முறையை உரு வாக்கி விட் டால் சரிதானே?’’ என்று புன்ன கைத்த படியே கேட்டார் எம்.ஜி.ஆர்.! அசந்துபோய் நின்றார் ராசாராம்.
எம்.ஜி.ஆர். நினைத்திருந்தால் அந்த மாணவிக்கு மருத்துவக் கல்லூரியில் இடம் ஒதுக்க சிபாரிசு செய்திருக்கலாம். முதல்வரே சொல்லும்போது மாணவிக்கு இடம் கிடைக்காமல் போய்விடுமா? ஆனால், தனது அதிகாரத்தை எம்.ஜி.ஆர். எப்போதுமே தவறாகப் பயன்படுத்தியதில்லை. மரபுகளையும் விதிகளையும் மீறாமல் அதே நேரம் அந்த மாணவிக்கு மருத்துவக் கல்லூரி யில் இடம் கிடைக்கவும் ஏற்பாடு செய்துவிட்டார். அந்த மாணவி மட்டுமின்றி, தமிழ்த் தொண்டு செய்தவர்களின் குடும்பங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் எதிர் காலத்தில் பயனடையும்படியும் செய்து விட்டார். தமிழறிஞர் திருநாவுக்கரசு எம்.ஜி.ஆருக்கு நன்றி தெரிவித்து வாழ்த்தினார்.
எம்.ஜி.ஆரின் பெருமைகளையும் அவரது பண்புகளையும் பாராட்டி, இன்னொரு முக்கியமான தமிழறிஞரும் அவரை வாழ்த்தி, ‘‘குன்றனைய புகழ் கொண்ட குணக்குன்றே...’’ என்று தொடங்கி கவிதை எழுதியுள்ளார். அந்தக் கவிதையில்,
‘‘வென்றாரும் வெல்வாரும் இல்லா வகையில்
எந்நாளும் ஒளிவீசும் தண்மதியே!
தென்னாடும் தென்னவரும் உள்ளவரை
மன்னா! உன் திருநாமம் துலங்க வேண்டும்!
உன்னாலே உயர்வடைந்த என் போன்றோர்
உள்ளங்கள் அதைக் கண்டு மகிழ வேண்டும்!’’
என்று அந்தத் தமிழறிஞர் வாழ்த்தியுள் ளார். அவர்... கலைஞர் மு.கருணாநிதி!
- தொடரும்...
படங்கள் உதவி: ஞானம், எஸ்.எஸ்.ராமகிருஷ்ணன்
முந்தைய தொடர்களை வாசிக்க: >எம்ஜிஆர் 100
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT