Published : 04 Aug 2016 08:53 AM
Last Updated : 04 Aug 2016 08:53 AM
என்னோட கல்யாணத்துக்கு அப்புறம் அன்புங்கிற ஒரு விஷயம்தாங்க எனக்கு அதிகமான கஷ்டத்தைக் கொடுத்தது. என்னை சுத்தி இருந்த வங்க என்மேல அதிக அளவு அன்பை காட்டுனாங்க. அதனாலதான் என்னால எதுவுமே செய்ய முடியலை. ஒரு கட்டத் துக்கு மேல புகழ் முக்கியம் இல்லை; பணம்கூட முக்கியம் இல்லைன்னு சொல்லியிருக்கேன். ஆனா, எப்போ துமே அன்புதான் முக்கியம்னு மனசு சொல்லும்!
அந்த நிலையில நானும் இருந்திருக் கேன். அதனாலதானோ என்னவோ, அந்த அன்பால பல நேரத்துல என் வாழ்க்கை யில மிகப்பெரிய வலியையெல்லாம் சந்திச்சிருக்கேன். எதிர்ல இருக்கிறவங்க திட்டினா, ‘ஏன்? எதுக்கு’ன்னு திரும்ப பதிலுக்கு ஏதாவது கேட்கலாம். சண்டை பிடிச்சா, திரும்ப நாமும் சண்டை போடலாம். அன்பை எப்படி எதிர்க்க முடியும்? அதுவும் வீட்டுல அம்மா, ‘‘கல்யாண விஷயத்துல பையன் இப்படி பண்ணிட்டானே?’’ன்னு நினைக்காம, எப்பவும் போல எண்ணெய் தேய்ச்சி குளிக்க வைக்கிறது, பதினைஞ்சு தோசை சுட்டுக் கொடுக்கிறதுன்னு கொஞ்சமும் குறையாத அன்போட இருக்கத்தான் செஞ்சாங்க. வீட்டுல கல்யாணத்துக்கு முன்னாடி எப்படி இருந்தேனோ, அப்படியேதான் கல்யாணத்துக்கு அப்புறமும் இருந்தேன். என்ன, அப்பப்போ திட்டுகள் மட்டும் விழும். மத்தபடி அம்மா, அப்பா என்மேல வெச்சிருந்த அன்பு எந்த விதத்துலேயும் மாறலை. குறையவும் இல்லை.
கல்யாணத்துக்குப் பிறகு ‘அவங்க’ ஒரு வீட்டுல, நான் ஒரு வீட்லன்னு வாழ்க்கை ஓடிட்டு இருந்தப்போ, ஒரு போன் பேசணும்னாலும் கஷ்டம். அந்த நேரத்தில் செல்போன் வசதி இந்த அள வுக்கு இல்லை. வீட்டுல இருந்த லேண்ட்- லைன் போன்லதான் பேசணும். அதில் இருந்து யாருக்கும் தெரியாம, சாமர்த் தியமா பேசுறேன்னு நினைச்சுட்டு ‘அவங்க’க்கிட்ட பேசுவேன். ஆனா, மாசக் கடைசியில வீட்டுக்கு பில் வந்து டுமே. அதை வெச்சு கரெக்டா அம்மா கண்டுபிடிச்சிடுவாங்க. எங்க அம்மா அளவுக்கு புத்திசாலியானவங்களை நான் பார்த்ததே இல்லை. இவ்வளவுக் கும் அவங்க பெருசா படிக்கக்கூட இல்லை. பதினாலு வயசுலயே கல் யாணம் முடிஞ்சி, சென்னைக்கு வந்த வங்க. ஆனா, எந்த ஒரு விஷயம்னாலும் அவ்வளவு ஷார்ப்! சி.பி.ஐ டிபார்ட் மெண்ட்ல இருந்தாங்கன்னா அவங் களுக்கு இந்நேரம் மெயின் போஸ்ட்டே கிடைச்சிருக்கும். போன் பில் வந்த தும் நான் யார்கிட்ட பேசினேன்னு தெரிஞ் சுக்கிட்டு, என்னிடம் கேட்கும்போது, ‘‘ஏம்மா… அதான் உனக்கே தெரியும். எதுக்கு தெரிஞ்சுக்கிட்டு உன்னோட மனசை கஷ்டப்படுத்திக்கிறே!’’ன்னு சொல்வேன். ரெண்டு திட்டுங்க சேர்த்தே விழும். அதுதான் எங்க அம்மா!
அப்படி ஸ்ட்ரிக்டா இருக்கும் அம்மாவுக்கே, நான் எந்த நேரத்துல ‘அவங்க’ளை நேர்ல பார்க்கிறேன்னு தெரியாது. பெரும்பாலும் யாருக்கும் தெரியாம ஒளிஞ்சி ஒளிஞ்சிதான் அவங்களைப் பார்ப்பேன். அதில் அவ்வளவு கஷ்டம் இருந்துச்சு. அதையெல்லாம் நானும், கூடவே என்னோட இருந்த நண்பர்களும் அப்பப்போ பேசிப்போம்.
ஒருமுறை தீபாவளி பண்டிகை அன்று, 10 ஆயிரம் வாலா சரவெடியை வாங்கிட்டு வந்து வீட்டு வாசல்ல வெச்சி வெடிக்க ஆரம்பிச்சேன். வெடிக்கிறப்ப வந்த புகைச்சல்ல மறைஞ்சி, நண்ப னோட காரில் ஏறிப்போய் ‘அவங்கள’ப் பார்க்கப் போய்ட்டேன். எப்படியும் திரும்பி வந்தப்புறம் வீட்டுல திட்டு விழும்னு தெரியும். தீபாவளி பண் டிகையாச்சே, அங்கேயும் போய்தானே ஆகணும். இந்த மாதிரி நான் ரிஸ்க் எடுக்கும்போதெல்லாம் என்னோட நண்பர்கள் எனக்கு ரொம்ப உதவியா இருந்தாங்க. மோட்டார் பைக் இல் லேன்னா காரில் என்னை எங்க வீட்டு லேர்ந்து கூட்டிட்டுப் போக ஷார்ப்பா வந்து நிற்பாங்க.
அதில் ஒருத்தன் நான் கிளம்புற வரைக்கும் எங்க வீட்டுக்குப் பக் கத்திலயே நிற்பான். நான் அரை மணி நேரத்துலேயும் கிளம்புவேன்.சமயத்துல 2 மணி நேரம் கழிச்சும் கிளம்புவேன். ஆனா. கொஞ்சம்கூட சலிச்சுக்காம நான் கிளம்பும் வரைக்கும் எனக்காக அவன் நிற்பான். இவ்வளவுக்கும் அவனுக்கும் அன்னைக்கு தீபாவளி தாங்க. இத்தனைக்கும் முழு காரணமும் நான்தான்.
‘அவங்க’ளைப் போய் பார்த்துட்டுத் திரும்ப வீட்டுக்குள்ள வர்ற நிமிஷம் இருக்கே; ‘என்ன நடக்குமோ? ஏது நடக்குமோ?’ன்னு அப்படி ஒரு டென்ஷனோட வருவேன். அம்மா, அப்பா கண்ணில் சிக்காம வீட்டுக்குள்ள பின்னாடி இருக்கிற என் அறைக்குள்ளே போற வரைக்கும் பயமா இருக்கும். மூணு, நாலு நாட்களுக்கு ஒருமுறை இந்த மாதிரி நடக்கும்.
‘மின்சாரக் கனவு’ படத்தில் வர்ற ‘ஊ… லலல்லா’ பாட்டோட ஷூட்டிங்ல இருந்தப்போதான் என்னோட பெரிய பையன் பிறந்தான். என்னால அந்த டைம்ல ‘அவங்க’ பக்கத்துல இருக்கக் கூட முடியலை. ஆறு, ஏழு நாட் களுக்கு அப்புறம்தான் வந்து குழந்தையைப் பார்த்தேன். என் னோட ஃபிரெண்ட்ஸ்ல ஒருத்தன்தான் கூடவே இருந்து அப்போது கவ னிச்சுக்கிட்டான். நல்ல நண்பர்கள் கிடைக்கிறதும்கூட ஒரு வரம்தான். என்னோட விஷயத்துல அந்த ‘வரம்’ கிடைச்சுது!
கல்யாணம், குழந்தைன்னு ஆகி டுச்சே. அம்மா, அப்பாவைப் பிரிஞ்சி தனியா இருந்திருக்கலாமேன்னு நீங்க கேட்கலாம்? என்னால அம்மா, அப்பாவைப் பிரிஞ்சி இருக்கவே முடியாதுங்க. ஒருநாளும், அப்படி ஓர் எண்ணம் மூளைக்குள்ள தோணியதே இல்லை. எப்படி ஒருத்தர் அப்பா, அம்மாவைப் பிரிய முடியும்? இந்த கேள்வி மட்டும்தான் அதுக்கு பதிலா தோணுது.
அவுட்டோர் ஷூட்டிங் போறப்ப ‘அவங்க’ளையும் அழைச்சுட்டுப் போக லாம்னா, பல வகையில டென்ஷன்தான். ‘இருக்கு ஆனா இல்லை; இல்லை ஆனா இருக்கு’ அப்படிங்கிற மாதிரிதான் என்னோட வாழ்க்கை அப்போ ஓடியது. இப்படியே கல்யாணமாகி ஏழு வருஷம் போச்சு. 1995-ல் இருந்து 2002 வரை இருக்கும், அந்த காலகட்டத்தை என்னோட வாழ்க்கையில நான் எப்படி கடந்தேன்னே தெரியலை.
என் பையனுக்கு ஏழு வயசாச்சு. அப்போ வரைக்கும் நான் எங்க வீட்டுலதான் இருந்தேன். ‘அவங்க’ளைப் பார்த்துட்டுத் திரும்பறப்போ, சில நேரத்தில் பையனோட வந்து ‘அவங்க’ளே என் வீட்டுல என்னை டிராப் பண்ணிட்டு போவாங்க.
அப்படி ஒருமுறை டிராப் பண்ண வந்தப்போதான் என்னோட பையன், ‘‘அப்பா இது உங்க வீடா?’’ன்னு என்கிட்ட கேட்டான். எனக்கு, என்ன பதில் சொல்றதுன்னே தெரியலை. ஆனா, அன்னைக்கு என் பையன் கேட்ட ‘அந்தக் கேள்வி’ என்னை ஒரு முக்கியமான முடிவை எடுக்க வைத்தது?
அது என்ன முடிவு?
- இன்னும் சொல்வேன்…
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT