Published : 25 Apr 2017 09:53 AM
Last Updated : 25 Apr 2017 09:53 AM

மு.வரதராசன் 10

தமிழ் அறிஞர், இலக்கிய ஆராய்ச்சியாளர்

20-ம் நூற்றாண்டின் இணையற்ற தமிழ் அறிஞர்களுள் ஒருவரும் கல்வியாளர், இலக்கிய ஆராய்ச்சியாளர், படைப்பாளர் என பன்முகப் பரிமாணம் கொண்டவருமான மு.வரதராசன் (Mu.Varatharasan) பிறந்த தினம் இன்று (ஏப்ரல் 25). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

* வட ஆற்காடு மாவட்டம், திருப்பத் தூரில் வேலம் என்ற சிற்றூரில் பிறந்தார் (1912). இவரது இயற்பெயர் திருவேங்கடம், ஆனால் தாத்தாவின் பெயரான வரதராசன் என்ற பெயரே நிலைத்துவிட்டது. வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டையில் ஆரம்பக் கல்வி கற்றார். திருப்பத்தூரில் உயர்நிலைக் கல்வி கற்றார்.

* 1931-ல் வித்வான் முதல் நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றார். பின்னர் தானே பயின்று 1935-ல் வித்வான் தேர்வில் மாநிலத்திலேயே முதல் மாணவராக தேர்ச்சி பெற்று, திருப்பனந்தாள் மடத்தின் ஆயிரம் ரூபாய் பரிசும் பெற்றார். திருப்பத்தூர் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றினார்.

* காந்தியடிகள், திரு.வி.க., தாயுமானவர், ராமதீர்த்தர், ராமலிங்க சுவாமிகள், ராமகிருஷ்ணர், விவேகானந்தர், தாகூர், காண்டேகர் ஆகியோரின் கருத்துகளால் கவரப்பட்டார். 1939-ல் பி.ஓ.எல். தேர்ச்சி பெற்றார். அதே ஆண்டில் பச்சையப்பன் கல்லூரியில் கீழ்த்திசை மொழிகளில் விரிவுரையாளர் என்ற பொறுப்பேற்றார்.

* 1944-ல் ‘தமிழ் வினைச் சொற்களின் தோற்றமும் வளர்ச்சியும்’ என்ற தலைப்பில் ஆய்வுக்கட்டுரை எழுதி, எம்.ஓ.எல். பட்டம் பெற்றார். 1948-ல் ‘சங்க இலக்கியத்தில் இயற்கை’ என்ற தலைப்பில் ஆய்வுக்கட்டுரை எழுதி, சென்னைப் பல்கலைக்கழகத்தில் முதன் முறையாகத் தமிழில் முனைவர் பட்டம் பெற்றார். சென்னை பச்சையப்பன் கல்லூரியிலும் சென்னை பல்கலைக்கழகத்திலும் தமிழ்த்துறைத் தலைவராக செயல்பட்டார். பின்னர் மதுரைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பணியாற்றி ஓய்வுபெற்றார்.

* நெடுந்தொகை விருந்து, குறுந்தொகை விருந்து, நற்றிணை விருந்து, திருக்குறள் உரை, தமிழ் இலக்கிய வரலாறு, கள்ளோ காவியமோ, நெஞ்சில் ஒரு முள், அகல் விளக்கு, கரித்துண்டு, உள்ளிட்ட குறிப்பிடத்தக்க நூல்களை எழுதியுள்ளார்.

* இவரது திருக்குறள் தெளிவுரை 100-க்கும் மேற்பட்ட பதிப்புகளாக வெளிவந்துள்ளன. சாகித்ய அகாடமி, பாரதிய ஞானபீடம், தேசியப் புத்தகக் குழு, இந்திய மொழிக் குழு, சென்னைப் பல்கலைக்கழகத்தின் ஆங்கிலம்-தமிழ் அகராதிக் குழு உள்ளிட்ட ஏராளமான அமைப்புகளில் அங்கம் வகித்துள்ளார்.

* தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் தேர்ச்சி பெற்றிருந்தார். தூய தமிழில் பிறமொழிக் கலப்பு இல்லாமல் கதை எழுதியவர்களுள் குறிப்பிடத்தக்கவர்.

* கல்வித் துறை ஆய்வு மாநாடுகளில் பங்கேற்பதற்காக இந்தியா சார்பில், ரஷ்யா, பாரீஸ், மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளுக்குச் சென்றுள்ளார். 1972-ல் அமெரிக்க ஊஸ்டர் கல்லூரி இவருக்கு டி.லிட். பட்டம் வழங்கியது.

* ‘அகல் விளக்கு’ என்ற நாவலுக்காக இவருக்கு 1961-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது கிடைத்தது. இவரது ‘கள்ளோ காவியமோ’, ‘அரசியல் அலைகள்’, ‘மொழியியல் கட்டுரைகள்’ ஆகிய 3 நூல்களுக்கு தமிழக அரசின் விருது கிடைத்தது. இவரது பல நூல்கள் ஆங்கிலம், இந்தி, மராத்தி, சிங்களம், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

* காலம் தவறாமையை இறுதிவரைக் கடைபிடித்தவர். அனைவராலும் ‘மு.வ.’ என நேசத்துடன் அழைக்கப்பட்டார். இறுதிவரை தமிழ்ப் பணியாற்றி வந்தவருமான மு.வரதராசனார், 1974-ம் ஆண்டு 62-வது வயதில் மறைந்தார்.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x