Published : 31 Mar 2017 10:15 AM
Last Updated : 31 Mar 2017 10:15 AM

ஓக்டாவியோ பாஸ் லொஸானோ 10

நோபல் பெற்ற மெக்சிகோ இலக்கியவாதி

மெக்சிகோ நாட்டின் சிறந்த படைப்பாளியும் இலக்கியத்துக்கான நோபல் பரிசை வென்றவருமான ஓக்டாவியோ பாஸ் லொஸானோ (Octavio Paz Lozano) பிறந்த தினம் இன்று (மார்ச் 31). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

மெக்சிகோவில் பிறந்தார் (1914). தந்தை வழக்கறிஞர். 1919-ல் குடும்பம் லாஸ் ஏஞ்சல்சில் குடியேறியது. பின்னர் 1922-ல் மீண்டும் மெக்சிகோ திரும்பி தாத்தாவுடன் வசிக்கத் தொடங்கி னார். இடமாற்றத்தால் நண்பர்கள் யாரும் இல்லாத தனிமை, 8 வயதிலேயே தன் உணர்வுகளைக் கவிதையாகவும் கட்டுரையாகவும் இவரை வெளிப்படுத்த வைத்தது.

எழுத்தாளரான தாத்தா ஒரு நூலகம் வைத்திருந்தார். அதில் உள்ள அத்தனை நூல்களையும் இவர் படித்தார். ஐரோப்பிய மற்றும் மெக்சிகோ நாட்டு இலக்கியங்களையும் நன்கு அறிந்து கொள்ள இவருக்கு இது உதவியது.

பள்ளிப் படிப்பு முடிந்த பிறகு, மெக்சிகோ பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்றார். அப்போது நிறைய கவிதைகளை எழுதினார். 1933-ல் ‘லுனா சில்வெஸ்ட்ரே’ என்ற கவிதை நூலை வெளியிட்டார். தொடர்ந்து ‘நோ பஸாசன்’, ‘ரியாஸ் தெல் ஹோம்ரே’ உள்ளிட்ட நூல்கள் வெளிவந்தன. படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டார்.

1950-ல் ‘தி லேபிரிந்த் ஆஃப் சால்ட்டியூட்’ என்ற நூலை எழுதி வெளியிட்டார். ஸ்பானிய மொழியில் எழுதப்பட்ட இந்த நூல் மிகவும் பிரபலமடைந்தது. இதில் மெக்சிகோவின் நாகரிகம், பண்பாடு, வரலாறு, மக்களின் வாழ்க்கை ஆகியவற்றை விளக்கமாக எழுதியிருந்தார்.

கவிதை, உரைநடை, பத்திரிகை கட்டுரைகள் என படைப்புலகில் சுறுசுறுப்பாக இயங்கி வந்தார். 30-க்கும் மேற்பட்ட நூல்களையும் கவிதைத் தொகுப்புகளையும் படைத்துள்ளார். ‘பாரான்டல்’, ‘டாலெர்’, ‘எல் ஹிஜோ புரோடிஜோ’ உள்ளிட்ட பல இலக்கிய இதழ்களையும் நடத்தி வந்தார்.

1945-ல் மெக்சிகோவின் தூதரகச் சேவையில் இணைந்தார். முதலில் நியுயார்க்கிலும் பின்னர் பாரீசிலும் பணியாற்றினார். ‘ராபச்சீனிஸ் டாட்டர்’ உள்ளிட்ட சில நாடகங்களையும் எழுதினார். இந்தியாவுக்கான மெக்சிகோ நாட்டுத் தூதராகப் பணியாற்றினார். அப்போது இந்து மதம், புத்த மதத் தத்துவங்களைக் கற்பதற்கும் தெரிந்து கொள்வதற்கும் வாய்ப்புக் கிடைத்தது.

1968-ல் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுக்கு எதிரான மெக்சிகோ அரசின் அடக்குமுறையைக் கண்டித்து, தன் பதவியை ராஜினாமா செய்தார். 1970-ம் ஆண்டில் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பதவி ஏற்று 4 ஆண்டுகள் பணியாற்றினார்.

‘லிபரேடட் பாஜோ பலார்பிரா’, ‘சன்ஸ்டோன்’, ‘லா எஸ்டாசியன் வயலென்டா’, ‘வியன்டோ என்டெரோ’, ‘பலாங்கோ’, ‘விஷுவல் டிஸ்க்ஸ்’ உள்ளிட்ட இவரது நூல்கள் குறிப்பிடத்தக்கவை. இவரது நூல்கள் ஆங்கிலம் உள்ளிட்ட பல ஐரோப்பிய மொழிகளிலும் நேபாளி, இந்தியிலும்கூட மொழிபெயர்க்கப்பட்டன.

1957 முதல் 1987 வரையில் இவர் எழுதிய கவிதைகள் தொகுக்கப்பட்டு 1990-ல் வெளியிடப்பட்டன. அதே ஆண்டு இவருக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. மேலும் ஜெருசலேம் பரிசு, மிகுயல் தே செர்வண்டீஸ் பரிசு, இலக்கியத்துக்கான நியுஸ்டாட் இன்டர்னல் பரிசு, ஜெர்மன் புக் ட்ரேட் அமைப்பின் அமைதிக்கான பரிசு உள்ளிட்ட ஏராளமான விருதுகளையும் பரிசுகளையும் பெற்றார்.

கவிஞர், எழுத்தாளர், நூலாசிரியர், கட்டுரையாளர், தூதர் எனப் பன்முகப் பரிமாணம் கொண்டிருந்த ஓக்டாவியோ பாஸ் லொஸானோ 1998-ம் ஆண்டு 84-வது வயதில் மறைந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x