Published : 24 Mar 2017 08:57 AM
Last Updated : 24 Mar 2017 08:57 AM
செய்தி பார்க்கிற, வாசிக்கிற அத்தனை பேருக்கும் அறிமுகமானவர் விவசாயி அய்யாக்கண்ணு. தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத் தலைவரான இவர், தலைநகர் டெல்லியில் நடத்திய போராட்டங்கள் மூலம், தமிழக விவசாயிகளின் பிரச்சினைகளை அழுத்தமாகப் பதிவுசெய்திருக்கிறார். அவருடன் ஒரு பேட்டி.
டெல்லி போராட்டம் எந்த நிலையில் இருக்கிறது?
தமிழ்நாட்டில் செத்தால்தானே, குடும்பப் பிரச்சினையில் செத்துப்போனதாகச் சொல்கிறார் கள். இங்கே அவர்கள் கண் முன்னால் செத்தால் என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம் என்று தான் டெல்லிக்கே வந்து போராடுகிறோம். மத்திய நிதி அமைச்சர் தொடங்கி விவசாய அமைச்சர் வரை எல்லோரையும் பார்த்துப் பேசியும் கடைசி யில், வெறும் 1748 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி யிருக்கிறார்கள். இது உழவுச்செலவுக்குக்கூடப் போதாது. தமிழகம் முதல்வர் கேட்டபடி 40,000 கோடி ரூபாய் வறட்சி நிவாரணம் தரும் வரையில் டெல்லியை விட்டு நகர மாட்டோம்.
விவசாயிகளின் பிரச்சினைக்கு வறட்சி மட்டும்தான் காரணமா?
இல்லை. அண்டை மாநிலங்கள் தண்ணீர் தர மறுப்பதும், விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்காததும் காரணம். 1970-ல் ஒரு பவுன் தங்கத்தின் விலை 120 ரூபாய். அன்றைய நிலவரப்படி, ஒரு மூட்டை (60 கிலோ) நெல் 40 ரூபாய். 3 மூட்டை நெல் விற்றால் ஒரு பவுன் தங்கம் வாங்கிவிடலாம். இன்று தங்கம் விலை 24,000 ரூபாய். பல துறையினரின் சம்பளமும் கணிசமாக உயர்ந்திருக்கிறது. ஆனால்,விவசாயி வருமானம் மட்டும் உயரவேயில்லை. எனவே, எம்.எஸ்.சாமிநாதன் கமிஷன் பரிந்துரைப்படி விளைபொருட்களுக்கு விலை நிர்ணயிக்க வேண்டும் என்றும் ஜேட்லியிடம் வலியுறுத்தியிருக்கிறோம்.
எதற்கெடுத்தாலும் போராடுபவர் என்று உங்களைச் சொல்கிறார்களே?
நான் பெரும் விவசாயி. சட்டம் படித்தவன். ஆனாலும், போராடாமல் இங்கே எதுவும் நடக்காது என்பது என் 30 வருட அனுபவம். விவசாயிகளைத் தேடிவந்து அவர்களது பிரச்சினைகளைத் தீர்க்க இங்கே யாருமில்லை. வேளாண் விரிவாக்க அலுவலர்களே விவசாயிகளைச் சந்திக்காதபோது, மற்றவர்களைக் குறைசொல்லி என்ன பிரயோஜனம்?
வங்கிகளுக்கு எதிராக நிறைய போராட்டம் நடத்துகிறீர்களே?
வறட்சியால் கடனைத் திரும்பிச் செலுத்த முடியாமல், விவசாயிகளின் நகைகள் ஏலத்துக்கு வருகிறபோது, அதிலும் கமிஷன் பார்க்க நினைக்கிறார்கள் வங்கி மேலாளர்கள். இதில் முறைகேடுகள் நடக்கின்றன. இதைத் தடுக்க யாரும் முன்வராததால், நாங்களே ஏலத்தில் பங்கேற்று பிரச்சினை செய்கிறோம். விவசாயிகளின் டிராக்டர்களைக் கடனுக்காக ஜப்தி செய்யக் கூடாது என்று உச்ச நீதிமன்ற உத்தரவே இருக்கிறது. அதை வங்கி அதிகாரிகளும் மதிப்பதில்லை, போலீஸாரும் கண்டுகொள்வதில்லை. ஜப்தி செய்ய வரும் அதிகாரிகளை விரட்டியடிப்பதைத் தவிர வேறு வழியில்லை எங்களுக்கு.
உள்ளூர் நீர்நிலைகளை நாம் சரியாகப் பராமரிக்கிறோமா?
ஒரு காலத்தில் நீர்நிலைகள் விவசாயிகளின் கையில் இருந்தன. கோடைக்காலத்தில் அவற்றைப் பராமரிக்கும் வேலையைத் தங்கள் சொந்த வேலையைப் போல இழுத்துப்போட்டு விவசாயிகள் செய்தார்கள்.
கண்மாய், குளம், வாய்க்கால்கள் எல்லாம் அரசின் கைக்குப் போனதோ, அப்போதே எல்லாம் கெட்டுவிட்டது. நீர்நிலைகளை வருமானம் தரும் இனமாக மட்டுமே அதிகாரிகள் பார்க்கிறார்கள். கண்மாய்க்குள் இறங்கி வண்டல் மண் எடுப்பதுகூட குற்றம் என்கிற அளவுக்கு, விவசாயிகளுக்கும் நீர்நிலைகளுக்குமான உறவு அறுபட்டுப்போனதுதான் சீரழிவுக்குக் காரணம். அதிகாரங்களைக் குவிக்காமல், விவசாயிகளுக்கும், கிராமத்தினருக்கும் அதைப் பகிர்ந்தளிப்பதன் மூலம்தான் நீர்நிலைகளைப் பாதுகாக்க முடியும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT