Published : 19 Jun 2016 10:36 AM
Last Updated : 19 Jun 2016 10:36 AM

பிளைஸ் பாஸ்கல் 10

உலகப் புகழ்பெற்ற கணிதவியலாளரும், தத்துவஞானியுமான பிளைஸ் பாஸ்கல் (Blaise Pascal) பிறந்த தினம் இன்று (ஜூன் 19). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

* பிரான்ஸின் கிளர்மான்ட் நகரில் (1623) பிறந்தார். 3 வயதில் தாயை இழந்தார். வரி வசூல் அதிகாரியான தந்தை, கணிதத்திலும் அறிவியலி லும் ஈடுபாடு கொண்டவர். அடிக்கடி உடல்நலக் குறைவு ஏற்பட்ட தன் மகனுக்கு வீட்டிலேயே கல்வி கற்றுத் தந்தார். பாரம்பரிய மொழிகளையும் கற்பித்தார்.

* அறிவுக்கூர்மை மிக்க சிறுவன் பாஸ்கலுக்கு கணிதத்தில் அளவுகடந்த ஆர்வம். வடிவியல் குறித்த நூல்களைப் படித்து தானாகவே வடிவியலைக் கற்றுத் தேர்ந்தார். முக்கோணங்கள் குறித்து பல விதிகளை உருவாக்கினார். பல கணித நூல்களை வாங்கிக் கொடுத்து மகனை உற்சாகப்படுத்தினார் தந்தை.

* பிற்காலத்தில் பிரான்ஸ் அறிவியல் அகாடமியாக மாறிய ஃபாதர் மெர்ஸீன் விவாதக் கழகத்தில் 14-வது வயதில் சேர்த்துக்கொள்ளப்பட்டார். தன் கட்டுரைகளைத் தொகுத்து ‘தி ஜெனரேஷன் ஆஃப் கோனிக் செக்சன்ஸ்’ என்ற தனது முதல் ஆராய்ச்சி நூலை 1639-ல் வெளியிட்டார்.

* வடிவியலில் பெரிய சாதனையான கூம்புவெட்டுகள் பற்றி 16-வது வயதில் நீண்ட கட்டுரை எழுதினார். அதில் அவர் விவரித்த புதிய தேற்றம் ‘பாஸ்கல் தேற்றம்’ என்று தற்போதும் பயன்படுத்தப்படுகிறது.

* 1642-ல் தந்தைக்கு அலுவலக கணக்கு போடுவதில் உதவுவதற்காக, 3 ஆண்டுகள் கடுமையாக முயன்று கணக்கு போடும் இயந்திரத்தை உருவாக்கி அவருக்கு பரிசாகத் தந்தார். முதல் கூட்டல் கணினியை உருவாக்கினார். இதற்காக அவர் 50 வேறுபட்ட மாதிரிகளை உருவாக்கி, இறுதியில் வெற்றி கண்டார். அதற்கு அடுத்த பத்தாண்டுகளில் மேலும் 20 கூட்டல் இயந்திரங்களை உருவாக்கினார்.

* திடப் பொருட்களின் கன அளவு, வட்ட வடிவப் பொருட்களின் பண்புகள், அவற்றின் பயன்பாடுகள் பற்றி கட்டுரைகள் எழுதினார். நவீன பொருளாதாரம், சமூக அறிவியல் வளர்ச்சியை கணிக்க நிகழ்தகவு கோட்பாட்டை உருவாக்கினார்.

* எண்கணித முக்கோணங்கள் குறித்து ஆய்வுக் கட்டுரை எழுதினார். நீரின் குணங்கள் பற்றி ஆய்வு மேற்கொண்டார். நீரின் அழுத்தம் மற்றும் வெற்றிடப் பண்புகளை நிரூபித்தார். 1653-ல் நீரின் அழுத்த விதியைக் கண்டறிந்து, வெளியிட்டார். இது ‘பாஸ்கல் விதி’ எனப்படுகிறது.

* வாயு மற்றும் திரவவியலைக் குறிக்கும் பாய்ம இயக்கவியலில் அழுத்தம் பற்றிய இவரது விதி உலகப் புகழ்பெற்றது. இவரது இந்த விதியை அடிப்படையாகக் கொண்டு ஏராளமான கருவிகள் உருவாக்கப்பட்டன. இவர் கண்டறிந்த கணித சாதனங்கள் வணிக ரீதியாகவும் தயாரித்து விற்கப்பட்டன. அழுத்தம் ‘பாஸ்கல்’ என்ற அலகால் குறிக்கப்படுகிறது.

* ஆழ்ந்த இறை நம்பிக்கை கொண்டவர். 1654-ல் ஏற்பட்ட ஆன்மிக அனுபவத்தை தொடர்ந்து விஞ்ஞானம், கணித ஆய்வுகளை விட்டு, தத்துவம், மத விஷயங்களில் கவனம் செலுத்தினார். அதுபற்றியும் பல கட்டுரைகள் எழுதினார்.

* சிறு வயதுமுதலே அடிக்கடி உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டவர், நீண்ட காலமாகவே நோய்வாய்ப்பட்டிருந்தார். எதையும் விடா முயற்சியுடன் செய்து முடிக்கும் உறுதியும் நெஞ்சுரமும் படைத்த பிளைஸ் பாஸ்கல் 39-வது வயதில் (1662) மறைந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x