Last Updated : 23 Jul, 2016 05:28 PM

 

Published : 23 Jul 2016 05:28 PM
Last Updated : 23 Jul 2016 05:28 PM

தமிழக பாரம்பரிய கலைகளை மீட்டெடுக்கும் சென்னைப் பல்கலை. மாணவர்கள்

ஹிப்பாப், சால்சா, ஜாஸ் போன்ற மேற்கத்திய நடனங்களை நோக்கி சில மாணவர்கள் ஓடிக் கொண்டிருக்க, தமிழர்களின் பாரம்பரியக் கலைகளை விரும்பி கற்று வருகின்றனர் சென்னைப் பல்கலைக்கழக இதழியல் மாணவர்கள்.

சென்னைப் பல்கலைகழகத்தில் 'முற்றம்' என்ற மாணவர் கலைக்குழு கடந்த ஆறு ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இதழியல் மற்றும் தொடர்பியல் துறையின் துறைத் தலைவர் கோ.ரவீந்திரன் இம்மாணவக் கலைக் குழுவிற்கு அடித்தளமிட்டுள்ளார்.

'முற்றம்' கலை குழுவைச் சார்ந்த மாணவர்களுக்கு தமிழர்களின் பாரம்பரியக் கலைகளான பறையாட்டம், கும்மியாட்டம், ஒயிலாட்டம் மற்றும் தெருக்கூத்து நாடகங்களின் பரிணாம வளர்ச்சியான வீதி நாடகங்கள் போன்றவைகளை முறையான பயிற்சியாளர்கள் மூலம் பயிற்றுவிக்கப்படுகிறது.

இம்மாணவர்கள் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மூலம் மக்களிடம் தங்களது கலையை கொண்டு செல்கின்றனர்.

வகுப்பு முடிந்ததும் பறையாட்டம் பயிற்சியில் ஈடுபடும் மாணவர்கள் 'முற்றம்' கலைக்குழு மாணவர்கள்.

இம் 'முற்றம்' மாணவ கலைக் குழுவைப் பற்றி கேள்வியுற்று அவர்களின் ரசிகர்களாக மாறி தங்கள் நாடகத்தில் இம்மாணவர்களை எப்படியாவது நடிக்க வைத்துவிட வேண்டும் என்ற விருப்பத்தில் கண்டம் விட்டு கண்டம் பறந்து வந்துள்ளனர் கண்ணன் மேனன், லின் ஃபாஸ்டர் என்ற அமெரிக்க தம்பதியினர்.

கண்ணன் மேனன் அமெரிக்காவில் புகழ் பெற்ற நாடக அரங்கின் அரங்கக் கலைஞராகவும், அவரது மனைவி லின் ஃபாஸ்டர் வரைகலை தொடர்பியலில் இணை பேராசிரியராகவும் உள்ளார்.

சுமார் ஒருவாரம் சென்னையில் தங்கி மாணவர்களோடு மாணவர்களாக கலந்து நாடகப் பயிற்சி அளித்துள்ளனர் கண்ணனும் அவரது மனைவி லின்னும். இவர்களுக்கு துணையாக மலேசியாவைச் சேர்ந்த அரங்கக் கலைஞர் நளினா சாமிநாதனும் நாடகப் பயிலரங்க பயிற்சியில் பங்கேற்றார்.

மாணவர்களுக்கு நாடக பயிற்சி அளிக்கும் கண்ணன் மேனன்.

கண்ணன் மேனனும் அவரது மனைவி லின் ஃபாஸ்டரும் இணைந்து ரவீந்திரநாத் தாகூரின் ‘சித்ரா’ நாடகத்தை கான்சோ ஜர்னலிசம் (அகப்பார்வையியல் இதழியல்) பார்வையில் மாணவர்களிடம் கொண்டு செல்லும் சோதனை முயற்சியில் வெற்றியும் பெற்றுள்ளனர்.

இவர்களின் பயிற்சியால் கடந்த திங்கட் கிழமை சென்னைப் பல்கலைக்கழகத்தில் உள்ள 'கிளாக் டவர்' வளாகத்தில் நடைபெற்ற 'முற்றம்' காட்சி மற்றும் அரங்க தொடர்பியல் கலை விழாவில் 'கன்சோ ஜர்னலிசம்' எப்படி ரவீந்திரநாத் தாகூரின் நாடகம் வழியே வெளிப்பட்டதைக் காண முடிந்தது.

'சித்ரா' நாடகத்தில் பங்கேற்ற மாணவர்களுடன் சென்னை பல்கலைகழகத்தின் இதழியல் துறைத் தலைவர் கோபாலன் ரவிந்தரன் உடன் கண்ணன் மேனனும், அவரது மனைவி லின் ஃபாஸ்டரும்.

அதென்ன கான்சோ ஜர்னலிசம் என்று முணு முணுக்கிறீர்களா.... கான்சோ ஜர்னலிசம் என்பது தனிப்பட்ட நபரை பற்றிய செய்திகளை வெளியிடும் போது புறநிலை ஆய்வுக் கூற்றுகள் (கிசு கிசுக்கள்) இல்லாமல் வாசகர்களிடம் கொண்டு செல்லும் செய்தி வகையாகும்.

கலை நிகழ்ச்சியின் இடைவேளையில் மது ஒழிப்புப் பற்றி 'முற்றம்' குழுவினர் நடத்திய நாடகம் அனைவரது பாராட்டை பெறத் தவறவில்லை.

'மது ஒழிப்பு' நாடகத்தின் ஒரு பகுதி

மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளோடு மட்டும் நில்லாமல் நிகழ்ச்சியின் முக்கிய அம்சமாக மூத்த கிராமிய கலைஞர்களான வில்லுப்பாட்டு கலைஞர்கள் த.பூங்கனியும், தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்ற வில்லிசை கலைஞர் த. முத்துசாமியும் கவுரவபடுத்தப்பட்டனர்.

மூத்த கிராமிய வில்லுப்பாட்டு கலைஞர்கள்: த. பூங்கனி, த.முத்துசாமி

நிகழ்ச்சியின் முடிவில் முற்றம் கலைக்குழு மாணவர்களிடம் நீங்கள் பெற்ற மிகப்பெரிய பாராட்டு எதுவென கேட்டபோது, ''முற்றம் கலைக்குழு நிகழ்ச்சியைக் காண்பதற்காகவே பல்கலைக்கழகத்தின் மதிற்சுவரில் மக்கள் கூட்டம் கூடி விடுகின்றனர். அம்மக்களின் கைத்தட்டல்கள்தான் எங்களுக்கு கிடைக்கும் மிகப் பெரிய பாராட்டு அதுவே போதும்" என்று நம்மை கடந்து செல்லும் இம்மாணவர்கள் நிச்சயம் இதழியல் துறையின் புதிய நம்பிக்கை நாயகர்களாகவே பார்க்கப்படுகிறார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x