Last Updated : 15 Feb, 2017 09:20 AM

 

Published : 15 Feb 2017 09:20 AM
Last Updated : 15 Feb 2017 09:20 AM

என்னருமை தோழி...!- 33: முந்திரி பகோடா!

என்.டி.ராமாராவுடன் 1972 -ல் நீங்கள் நடித்து வெளிவந்த ‘ஸ்ரீ கிருஷ்ண சத்யா’ என்ற தெலுங்கு படத்தில் சிறப்பாக நடித்ததற்காக தங்களுக்கு ‘பிலிம் ஃபேர்’ விருது வழங்கப்பட்டது. அடுத்த வருடமே, ‘பட்டிக்காடா பட்டணமா’ மற்றும் ‘சூரியகாந்தி’ படங்களில் சிறப்பான நடிப்புக்காக இருமுறை ‘பிலிம் ஃபேர்’ விருதுகளை நீங்கள் வென்றது உங்களை மகிழ்ச்சியில் திக்குமுக்காடச் செய்தது. திரை உலகை விட்டு மெதுவாக நழுவி விட வேண்டும் என்கிற மனநிலையில் இருந்த உங்களுக்கு இது ஒரு எதிர்பாராத திருப்பமாக அமைந்தது!

‘‘I did not expect these awards on the twilight zone of my film career...’’ பின்னர் நடந்த நமது சந்திப்பின்போது இப்படிக் கூறினீர்கள். அப்போதைய உங்கள் மனநிலை குடும்பத்தாருடன் அமைதியாக வாழ வேண்டும் என்பதே. வேதா நிலை யத்திலேயே பெரும்பாலான நேரங்களில் முடங்கிக் கிடந்தீர்கள். அண்ணனின் குழந்தைகளுடன் விளையாடி பொழுதைக் கழித்தீர்கள்.

அந்த அனுபவங்களைப் பற்றி ‘‘I tried to reenact my childhood days in Mysore...’’ என்று பின்னர் கூறினீர்கள். குறிப்பாக, சிறு வயதில் மைசூரில் நீங்கள் வசித்த ‘ஜெயா’ மற்றும் ‘லலிதா’ விலாஸங்களில் உங்கள் குடும்பம் விமரிசை யாக கொண்டாடிய பண்டிகைகளை பற்றி என்னிடம் பகிர்ந்து கொண்டீர்கள்.

கிருஷ்ண ஜெயந்தி மிகச் சிறப்பாக உங்கள் குடும்பத்தில் கொண்டாடப்பட்டு வந்தது. பண்டிகை நாட்களில் உங்க ளுக்குப் பிடித்தபடி பெரிய கோலங்களை போடுவீர்கள். உங்கள் சித்தி குழந்தை களும் சேர்ந்துவிட்டால் ஒரே கும்மாளம் தான். இதிகாச, புராண நாடகங்களை அவர்களுடன் சேர்ந்து நடித்துக் காட்டுவீர்கள்.

எழுபதுகளில், வேதா நிலையத்தில் அனைத்துப் பண்டிகைகளும் விமரிசை யாக கொண்டாடப்பட்டன. மைசூரில் வளர்ந்திருந்ததால், தசரா பண்டிகைக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. படப் பிடிப்பு நாட்களில், நேரமின்மை காரண மாக, பெரிய அளவில் கொலு பொம்மை களை வைக்காவிட்டாலும், தசரா பூஜை உங்கள் இல்லத்தில் மிகச் சிறப்பாக செய்யப்படும். படப்பிடிப்பு இல்லாத நாட்களில் அக்கம்பக்கத்து இல்லங்களில் இருந்து பெண்களை அழைத்து தசராவை கொண்டாடுவது உங்கள் வழக்கம்!

எல்லா கடவுள்களையும் நீங்கள் வழிபட்டாலும், கிருஷ்ணரிடம் உங்களுக்கு கூடுதல் ஈடுபாடு. சிறு வயதில் கிருஷ்ணர் வேடம் போட்டு கொள்வது என்றால் மிகவும் பிடிக்கும். ஒருமுறை, கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாட்டத்தில் நடனமாட வேண்டி மாண்டியா பகுதிக்கு ரயிலில் சென்ற போது, காமிக்ஸ் புத்தகம் ஒன்றை படித்துக் கொண்டிருந்த உங்களை, நாட்டிய நிகழ்ச்சிக்கு ஒத்திகை செய்யாமல் புத்தகம் படித்துக் கொண்டிருந்ததைப் பார்த்து உங்கள் தாய் கண்டிக்க, ஓடும் ரயிலிலேயே நாட்டிய பயிற்சி செய்தவர் நீங்கள்!

கிருஷ்ண ஜெயந்தி பண்டிகையின் போது, வேதா நிலைய வாயிலில் நீங்களே பெரிய கோலம் இடுவீர்கள். மேலும், கிருஷ்ணனின் சின்னஞ்சிறு பாதங்களை வாயிலில் இருந்து பூஜை அறை வரை கோலமாக வரைவது உங்கள் வழக்கம். சீடை, முறுக்கு, அதிரசம் என்று பண்டிகைக்கு உரித்தான அத்தனை தின்பண்டங்களும் தயார் செய்யப்பட்டாலும், உங்களுக்கு பிடித்த முந்திரி கேக் நிச்சயமாக மெனுவில் இருக்கும்படி தாய் சந்தியா பார்த்துக் கொள்வார். உங்களுக்கு முந்திரி தொடர்பான தின்பண்டங்கள் பிடித்ததுதான் என்றாலும், முந்திரி பகோடா என்றால் உயிர். போயஸ் கார்டன் அருகே இருந்த டிரைவ் இன் உட்லண்ட்ஸ் ஹோட்டலின் முந்திரி பகோடா மிகவும் பிரபலம். அதற்கு நீங்களும், பாடகர் பி.பி.னிவாஸும் நிரந்தர வாடிக்கை யாளர்கள். மாலைவேளைகளில் டிரைவ் இன் உட்லண்ட்ஸிலிருந்து உங்களுக் காக ஸ்பெஷலாக முந்திரி பகோடா தருவிக்கப்பட்டு வந்தது.

என்னருமை தோழி...!

2008-ம் ஆண்டில் நமது தொடர் சந்திப்புகளின்போது இதை தாங்கள் குறிப் பிட்டவுடன், நான் கூறிய பதிலை கேட்டு சிரிப்பு தாங்க முடியவில்லை உங்களுக்கு. ‘‘ஒருவேளை, முன்னாள் முதல் மந்திரிக்கு முந்திரி பகோடா கிடைக்கக் கூடாது என்பதற்காகத்தான் டிரைவ் இன் உட்லண்ட்ஸ் ஹோட்டலை இழுத்து மூடிவிட்டு, செம்மொழிப் பூங்கா வாக மாற்றி விட்டார்களோ என்னவோ..’’ என்று நான் அடித்த ஜோக்கை கேட்டு வெகு நேரம் ரசித்து சிரித்தீர்கள்.

‘‘உண்மையில் டிரைவ் இன் உட்லண்ட்ஸ் மூடப்பட்டபோது, நான் வருத்தப் பட்டேன். நடிகையாக இருந்த காலத்தில், படப்பிடிப்பு முடிந்து அகால நேரங்களில் கூட, டிரைவ் இன் உணவுகள் எனக்கு கைகொடுத்துள்ளன..’’ என்று கூறினீர்கள்.

கிருஷ்ண ஜெயந்தி உங்கள் வீட்டில் சிறப்பாக கொண்டாடப்பட்டாலும், தீபாவளி யன்று, புதுப் புடவை சரசரக்க, பட்டாசுகளை வெடிப்பது உங்களுக்குப் பிடிக்கும். சிறு வயதில் நீங்களும், உங்கள் அண்ணனும் சேர்ந்து பட்டாசுகளை வெடித்து தள்ளு வீர்கள். பள்ளி படிப்பு முடிந்து வெளியே வரும்போது, பட்டாசு வெடிப்பது சுற்றுச் சூழலை பாதிக்கும் என்ற உணர்வில், பட்டாசுகளை வெடிப்பதை நிறுத்தி விட்டீர்கள். ஆனால், அரசியலுக்கு வந்தபின், பட்டாசு தொழிற்சாலைகள் எத்தனையோ குடும்பங்களுக்கு வாழ்வாதாரமாக இருப்பதை உணர்ந்து, இவ்வளவு நாள் பட்டாசு வாங்கி வெடிக்காமல் இருந்ததற்கு வருத்தப்பட்டதாகக் கூறினீர்கள்.

ஒவ்வொரு தீபாவளியின்போதும் நெருக்கமானவர்களுக்கு இனிப்புகளை கொடுத்து அனுப்புவது உங்கள் வழக்கம். எனக்கும், ‘உன் குடும்பத்தாருக்கு மட்டும்’ என்கிற எச்சரிக்கையுடன் உங்களது உதவியாளர்கள் மூலமாக தீபாவளி இனிப்புகளை அனுப்பி இருக்கிறீர்கள். எனது சர்க்கரை பிரச்னையை தாங்கள் அறிந்திருந்ததால் இந்த எச்சரிக்கை!

கதையம்சம் மிக்க, கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களில் 1973 முதல் 1975 வரை நடித்து வந்தீர்கள். 1977-ல் ‘உன்னை சுற்றும் உலகம்’ என்ற படத்தின் கதையை கேட்டதும் தங்களது கண்கள் கலங்கின. குடும்பத்துக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணிக்கும் ‘லட்சுமி’ என்ற பெண்ணைப் பற்றிய அந்தக் கதை ஏறக்குறைய உங்களது நிலையை பிரதிபலிப்பதாக தோன்ற, படத்தில் நடிப்பதற்கு உடனே சம்மதம் சொல்லி விட்டீர்கள்.

அமைதியாக சென்று கொண்டிருந்த உங்கள் வாழ்வில் திடீர் திருப்பம் உங்கள் அண்ணியால் ஏற்பட்டது. ‘‘என் குடும்பத் துடன் நான் தனியாக போகிறேன்’’ என்று உங்கள் அண்ணன் ஜெயக்குமார் திடீரென்று ஒரு நாள் உங்களிடம் வந்து சொல்ல, திடுக்கிட்டுப் போனீர்கள். அப்போதுதான், தன் குடும்பம் என்கிற வட்டத்தில் உங்களை அவர் சேர்க்க வில்லை என்பது உங்களுக்குப் புரிந்தது.

அண்ணனின் குடும்பத்துக்குத் தேவை யான பொருட்களை வேதா நிலையத் தில் இருந்து எடுத்துச் செல்ல அனு மதித்தீர்கள். அண்ணன் குடும்பத்துக்கு உதவுகிறோம் என்பதைவிட, அப்படிச் செய்தால் அம்மாவின் ஆத்மா குளிரும் என்கிற உந்துதல் உங்களுக்கு. பிறகு, உங்கள் தாய் விருப்பத்துடன் வாங்கிய தரை விரிப்புகளை, திரைச் சீலைகளை அண்ணன் குடும்பத்துக்கு கொடுத்துவிட்டு, நீங்கள் உங்களைச் சுற்றி ஒரு இரும்புத் திரையை அமைத்துக் கொண்டீர்கள்.

அந்தப் பெரிய வீட்டில் தனியாக வசிக்கத் தொடங்கினீர்கள். கூட்டுப் புழு தன்னை சுற்றி ஒரு கூட்டினை அமைத்து கொள்வது போல், நீங்களும் ஒரு புத்தகப் புழுவாக தங்கள் வீட்டு நூலகத்தில், தங்களை சுற்றி ஒரு கூட்டினை அமைத்துக்கொண்டீர்கள். அந்தக் கூட்டினுள் தன்னையே சிறைப்படுத்திக் கொள்ளும் புத்தகப் புழு, அந்தக் கூட்டை உடைத்துக் கொண்டு ஒரு இரும்பு வண்ணத்து பூச்சியாக எதிர்காலத்தில் வெளிவரும் என்று அப்போது யார்தான் எதிர்பார்த்திருக்க முடியும்?

-தொடர்வேன்… | தொடர்புக்கு: narasimhan.ta@thehindu.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x