Last Updated : 22 Jan, 2014 12:00 AM

 

Published : 22 Jan 2014 12:00 AM
Last Updated : 22 Jan 2014 12:00 AM

விளம்பர இடைவேளைக்கு சற்று முன்னர்...

அடுத்தவர்கள் மீது அழுத்தம் தருவதை ‘ட்ரெண்ட்’ ஆக்கிவிட்டோம் போலிருக்கிறது. முன்பெல்லாம் அதிகபட்சமாக குழந்தைகள் மீதுதான் அழுத்தம் தருவார்கள். ‘அந்தப்பையன் நல்லா படிக்கிறான்’ ‘இவன் மெடல் வாங்குறான்’ ‘நீ ஏன் படிக்கவே மாட்டேங்குற?’ என்பார்கள். குழந்தைகள் செத்துச் சுண்ணாம் பானார்கள்.

பிறகு சம்பளம் குறித்தான அழுத்தம் வரத் தொடங்கியது. அதுவும் இந்த ஐ.டி. வந்த பிறகு ‘அவன் ஒரு லட்சம் சம்பளம் வாங்குறானாம்’ என்று கழுத்தறுத்தார்கள். பத்தாயிரம், பதினைந்தாயிரம் வாங்கிய வனையெல்லாம் கொலைக் குற்றவாளியாக்கி கூண்டில் ஏற்றினார்கள். ஊரை விட்டு வெளியே போனவனெல்லாம் தற்காலிகமாகத் தப்பித்துக் கொண்டான். உள்ளூரிலேயே இருப்போம் என்று கடை நடத்துபவன், தனியார் பள்ளியில் வாத்தியார் வேலைக்குப் போனவன், பனியன் கம்பெனியில் அக்கவுண்டன்டாகச் சேர்ந்தவன் நிலைமையெல்லாம் பரிதாபம்தான். உள்ளூர் பெரிய மனுஷர்களும், சக புண்ணியவான்களும் நொங்கெடுத்தார்கள்.

வேலையைப் பார்த்துக்க...

எங்களது மாமாவுக்கு எனது சம்பளத்தில் எந்தக் காலத்திலும் திருப்தியே இருந்ததில்லை. அம்மாவின் தம்பி அவர். புரோமோஷன், சம்பள உயர்வு என்ற எந்தத் தகவலை அவரிடம் சொன்னாலும் அதைவிடவும் அதிகமான சம்பளம் வாங்குபவர்களைப் பற்றி அவருக்குத் தெரிந்திருந்தது. ‘அவனுக்கு மட்டும் ஏன் அவ்வளவு கொடுக்குறாங்க...ஒரே கெரகமா இருக்குது’ என்பார். அவர் ஒரு வெள்ளந்தியான மனிதர். பெருமைக்காக ‘என் பையனுக்கு ஒரு லட்சம் சம்பளம்’ ‘எண்பதாயிரம் சம்பளம்’ என்று யார் சொன்னாலும் நம்பிக் கொள்வார். அதை அப்படியே எங்களிடமும் கேட்பார்.

சமீபத்தில் அவரிடம் ‘மாமா, என்னோட கதைகள் புத்தகமா வருது’ என்றேன்.

‘சந்தோஷம். ஆனா வேலையை பார்த்துக்க. அதுதான் முக்கியம்’ என்றார். அவர் கவலை அவருக்கு.

ஐம்பது வருடங்கள் முன்பு வரை கூட இப்பொழுதிருக்கும் அழுத்தங்கள் இருந்திருக்காது. படிப்பு, வேலை, வருமானம் என்ற ரீதியிலான அழுத்தங்கள் யாவும் சமீபமாகத்தான் நம்மை போட்டு அழுத்துகின்றன. வேலை செய்யும் இடத்தில் எத்தனை பிரஷர்? வேலையே செய்யாதவனெல்லாம் மேலே இருப்பவனுக்கு ‘சோப்பு’ போட்டு நகர்ந்து கொண்டிருக்கிறான். நான் வளைய மாட்டேன், குழைய மாட்டேன் என்று பேசினால் முளைத்த குழிக்குள்ளேயே கிடக்க வேண்டியதுதான்.

இருக்கும் வேலையைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டுமானால் நாய்படாத பாடு பட வேண்டியிருக்கிறது. ‘இரண்டு ஆள் வேலையை நான் செய்வேன்’ என்று சொல்லிவிட்டு கொடுக்கிற சம்பளத்தை வாங்கிக் கொண்டிருக்கும் செக்கு மாடுகளின் எண்ணிக்கையை மிக எளிதாக அதிகரித்து வைத்திருக்கிறார்கள் பன்னாட்டு நிறுவனங்கள். இது ஐ.டி.க்கு மட்டும் என்றில்லை. நம்மைச் சுற்றி எல்லா இடத்திலுமே அழுத்தம்தான்.

எத்தனை அழுத்தம்?

ஒரு பிஸினஸ்மேனுக்கு எத்தனை அழுத்தம்? ஒரு சினிமாக் காரனுக்கு எத்தனை அழுத்தம்? இங்கு அமைச்சர்களுக்கும் கூட ‘monthly target' உண்டாம்.

அதையெல்லாம் விடுங்கள்.

எழுத்தாளனைக் கூட இங்கு சாவடிக்கிறார்கள். ‘ஆன்ம திருப்திக்காக எழுதுகிறேன்’ என்று சொல்லும் எழுத்தாள இனம் அருகிவிட்டது. அப்படியே எழுதினால் புத்தகங்களைப் பெட்டிக்குள் போட்டு மூடி வைத்துக்கொள்ள வேண்டும் போலிருக்கிறது. இந்த விளம்பர எழுத்தாளர்கள் செய்யும் அட்ராசிட்டியில் ஏகப்பட்ட புத்தகங்கள் overshadow செய்யப்படுகின்றன.

எளிமையான கேள்வி ஒன்று. இந்த புத்தகக் கண்காட்சிக்கு மட்டும் எத்தனை புத்தகங்கள் வெளிவரக் கூடும் என்று நினைக்கிறீர்கள்? குறைந்தபட்சம் ஆயிரம் டைட்டில்களாவது வரும் என்று நம்புகிறேன். ஆனால் கண்களை மூடி யோசித்துப் பார்த் தால் எத்தனை புத்தகங்களின் பெயர்கள் உங்களுக்கும் எனக்கும் ஞாபகத்தில் வருகின்றன? அதிகபட்சம் நான்கு அல்லது ஐந்துதான். விளம்பரம் செய்யப்பட்ட புத்தகங்கள் மட்டும்தான். வெறும் விளம்பரங்கள்.

‘நீ மட்டும் யோக்கியமா’ என்று கேட்டு விடாதீர்கள். இல்லை. நான் யோக்கியம் இல்லை. ஆனால் வேறு வழியில்லை. இதைத்தான் அழுத்தம் என்று சொல்கிறேன். இந்த கூச்சல்களிலும், விளம்பர வெளிச்சத்திலும் நமது புத்தகத்தை எப்படிக் கரையேற்றுவது என்ற அழுத்தத்தை உருவாக்கு கிறார்கள் அல்லவா? அதைத்தான் சாவடிக்கிறார்கள் என்கிறேன். இயலும் எழுத்தாளர்கள் போட்டி போடுகிறார்கள். சலித்துப் போனவர்களோ அல்லது இந்த சங்காத்தமே வேண்டாம் என்னும் எழுத்தாளர்களோ ‘எப்படியோ தொலையட்டும்’என்று ஒதுங்குகிறார்கள்.

நாவல் என்ற பெயரில் நிரம்பும் மற்ற எல்லாக் குப்பை களைவிடவும் சுகுமாரனின் ‘வெலிங்டன்’ ஒரு படி உசத்தியாக இருக்கும் என நம்புகிறேன். சிறுகதைகள் என நிரம்பும் கூச்சல்களைவிடவும் கே.என்.செந்திலின் ‘அரூப நெருப்பு’ துளியாவது மேலே இருக்கும். ஆனால் இவையெல்லாம் வெளிவரும் செய்தி ஒரு சிறுவட்டத்துக்கு மட்டும்தான் தெரிந்திருக்கிறது என்பதுதான் வேதனை.

உலகத்தின் போக்கு...

வெளிச்சத்திலும் கூச்சலிலும் நூறு பிரதிகளை அதிகமாக விற்பது பெரிய காரியமில்லை. ‘இன்னைக்கே கடைசி...நாளைக்கு கிடைக்காது’ என்று கூவி விற்றால் சிட்டுக்குருவி லேகியமும் கூடத்தான் நான்கு பாட்டில் அதிகமாக விற்கும். அது முக்கியமில்லை. புத்தகம் வெளியான பிறகு உண்மையான வாசகன் புத்தகத்தைப் பற்றி நல்ல வார்த்தை நான்கு பேசுவதுதான் பெரிய காரியம். அதை எந்த விளம்பரத்தினாலும் உருவாக்கிவிட முடியாது.

இதையெல்லாம் அறச்சீற்றம் என்று யாரும் எடுத்துக் கொள்ளத் தேவையில்லை. இது உலகத்தின் போக்கு. இனிமேல் இப்படித்தான் இருக்கும். இன்னமும் கூட நிலைமை மோசமாகக் கூடும். ஆனால் பெரிதாக டென்ஷாக வேண்டியதில்லை.

இத்தனை கலவரங்களுக்கு இடையிலும் சப்தமில்லாமல் எழுத்து பற்றி மட்டும் பேசும் கூட்டங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்து கொண்டுதான் இருக்கும். அதைத் தேடிக் கொண்டு போகலாம். அவ்வளவுதான்.

http://www.nisaptham.com/2014/01/blog-post_4.html

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x