Published : 14 Apr 2017 10:45 AM
Last Updated : 14 Apr 2017 10:45 AM
தாழ்த்தப்பட்டோர் உரிமைக்காகப் போராடியவரும், இந்திய அரசியல் சாசன சிற்பி என்று போற்றப்படுபவருமான பாபா சாஹேப் பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் (Bhimrao Ramji Ambedkar) பிறந்த தினம் இன்று (ஏப்ரல் 14). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
* மத்தியப் பிரதேசத்தின் மஹூ பகுதியில் உள்ள அம்பாவாதே கிராமத்தில் (1891) பிறந்தார். தந்தை ராணுவப் பள்ளி தலைமை ஆசிரியராகப் பணி யாற்றியவர். சத்தாராவில் கல்வி பயின் றார். தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் பள்ளியிலும், சமூகத்திலும் பல்வேறு கொடுமை களை அனுபவிக்க நேர்ந்தது.
* பள்ளியில் தன்னை ஊக்குவித்து அன்பு காட்டி உதவிய ஆசிரியர் மகாதேவ் அம்பேத்கர் நினைவாகத் தன் பெயரை பீம்ராவ் அம்பேத்கர் என மாற்றிக்கொண்டார். குடும்பம் 1904-ல் பம்பாய் சென்றது. இவர் ஆர்வத்துடன் கல்வி கற்றதால், வறுமையிலும் குடும்பத்தினர் அனைவரும் அதற்கு ஆதரவாக இருந்தனர்.
* பரோடா மன்னரின் உதவியால் கல்லூரியில் சேர்ந்தார். கருமமே கண்ணாக இருந்து படித்து பி.ஏ. பட்டம் பெற்றார். சிறிது காலம் பரோடா மன்னரின் அரண்மனையில் பணியாற்றினார். அங்கும் சாதிக் கொடுமைகள் தொடர்ந்ததால் மனம்நொந்து வீடு திரும்பினார். இதைக் கேள்விப்பட்ட மன்னர் அவரை அழைத்து தவறுக்கு வருந்தினார்.
* தலைசிறந்த மாணவரான இவரை கொலம்பியா பல்கலைக் கழகத்தில் எம்.ஏ. படிக்க அனுப்பிவைத்தார். உயர்கல்வி பெற அமெரிக்கா சென்ற முதல் இந்தியர் என்ற பெருமை பெற்றார். அங்கு பொருளாதாரம், அரசியல், தத்துவம், சமூகவியல் பயின்றார். ‘பண்டைய இந்தியாவில் வாணிபம்’ என்ற தலைப்பில் ஆய்வுக் கட்டுரை எழுதி முதுகலைப் பட்டம் பெற்றார்.
* ‘இந்தியாவில் சாதிகள்’ என்ற கட்டுரையை எழுதினார். இந்தியப் பொருளாதாரம் குறித்து எழுதிய ஆய்வுக் கட்டுரைக்கு கொலம்பியா பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கியது. பிரிட்டிஷ் இந்தியாவில் அரசு நிதியைப் பரவலாக்குதல் என்ற ஆய்வுக் கட்டுரைக்கு முது அறிவியல் பட்டமும், ரூபாயின் பிரச்சினை என்ற ஆய்வுரைக்கு டி.எஸ்.சி பட்டமும் பெற்றார்.
* நாடு திரும்பியவர், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்கு எதிரான போராட்டங்களில் பங்கேற்றார். பம்பாய் சிடென்ஹாம் கல் லூரியில் பொருளாதாரத் துறை பேராசிரியராக சிறிது காலம் பணியாற்றினார். பின்னர் லண்டன் சென்று சட்டம் பயின்றார். பம்பாய் உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றினார்.
* ஒடுக்கப்பட்டவர்களுக்கு அதிகாரம் கிடைக்க பல்வேறு போராட்டங்களை நடத்தினார். மகத் என்ற இடத்தில் இவர் நடத்திய சத்தியாக்கிரகப் போராட்டத்தால், நாடு முழுவதும் பிரபல மானார். தாழ்த்தப்பட்டோர் உரிமைகளுக்குப் போராடுவதற்காக ‘பஹிஷ்கிருத் ஹிதகாரிணி சபா’ என்ற அமைப்பைத் தொடங்கினார். பல நூல்களை எழுதினார்.
* அரசியல் சாசன சபையில் பங்கேற்று, அரசியல் சாசனத்தை உருவாக்குவதில் தலைசிறந்த பங்களிப்பை வழங்கினார். நாடு விடுதலை பெற்ற பிறகு உருவாக்கப்பட்ட அரசியல் சாசனக் குழுவுக்குத் தலைவராக நியமிக்கப்பட்டார். நாட்டின் முதல் சட்ட அமைச்சராகவும் பதவியேற்றார்.
* இந்து மத சாதி அமைப்பை கடுமையாக விமர்சித்தவர், ஆதரவாளர்களுடன் புத்த மதத்துக்கு மாறினார். தாழ்த்தப்பட்டோர், கல்வி மூலமாகவே தங்களை வளர்த்துக்கொள்ள வேண் டும் என்பதை வலியுறுத்தினார். ஒடுக்கப்பட்டவர்களின் விடிவெள்ளியாகத் திகழ்ந்தார்.
* ஆசிரியர், இதழியலாளர், எழுத்தாளர், சமூகநீதிப் போராளி என பன்முகப் பரிமாணம் கொண்ட பி.ஆர்.அம்பேத்கர் 65-வது வயதில் (1956) மறைந்தார். இவருக்கு 1990-ல் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT