Published : 01 Nov 2014 04:06 PM
Last Updated : 01 Nov 2014 04:06 PM
போலந்து நாட்டு வானியல் அறிஞர்
போலந்தின் தலைசிறந்த கணிதவியலாளர் ஜான் ப்ரொஸக் பிறந்தநாள் இன்று. அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து…
போலந்து நாட்டைச் சேர்ந்த ஜான் ப்ரொஸக் - கணித வியலாளர், வானியலாளர், மருத்துவர், கவிஞர், எழுத்தாளர், இசைக் கலைஞர் என பன்முகப் பரிமாணம் கொண்டவர்.
தந்தை அளித்த ஊக்கம் இவருக்குள் கற்கும் ஆர்வத்தை பெருக்கெடுக்க வைத்தது. படித்து முடித்த பல்கலைக்கழகத்திலேயே தலைமைப் பொறுப்பு வரை உயர்ந்தார்.
17-ம் நூற்றாண்டின் தலைசிறந்த கணித அறிஞராக புகழ்பெற்றார். எண் கோட்பாடு, குறிப்பாக நிறைவெண் கோட்பாடு, வடிவவியல் குறித்த இவரது ஆய்வுகள் கணிதத் துறையில் முக்கியமான திருப்புமுனைகளாக அமைந்தன.
மருத்துவம், புவி அளவியல், இறையியல் தொடர்பாக பல்வேறு ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டார்.
தேனீக்கள் ஏன் அறுங்கோண வடிவிலேயே தேன் அடை களை உருவாக்குகின்றன என்பதை ஆராய்ந்தார். திறன் வாய்ந்த வகையில் மெழுகைப் பயன்படுத்தவும், தேனை சேமிக்கவும் மிகச் சிறந்த வழி இதுதான் என்பதை தேனீக் கள் தெரிந்துவைத்திருக்கின்றன என்பதை நிரூபித்துக் காட்டினார்.
மருத்துவர்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து இவர் வகுத்த வழிகாட்டி நெறிகள், மருத்துவத் துறையின் முன்னேற்றத்துக்கு பேருதவியாக அமைந்தன. நோய்களைக் கண்டறியும் பரிசோதனை முறைகள், நோய்த் தடுப்பு சிகிச்சை முறைகள் தொடர்பான ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் வெளியிட்டுள்ளார். ஒவ்வாமை குறித்த இவரது ஆய்வுக் கட்டுரைகள் அதற்கான சிகிச்சைகளை கண்டறிவதில் முக்கிய பங்கு வகித்தன.
சிறு வயதில் இருந்தே புத்தகம் சேகரிப்பது இவருக்கு மிகவும் பிடித்தமான விஷயம். ‘‘மேல் அங்கியை விற்றாவது புத்தகம் வாங்கவேண்டும்’’ என்பார். பணத்தை சிறிது சிறிதாக சேமித்து, புத்தகம் வாங்குவார்.
நல்ல புத்தகமா, மோசமான புத்தகமா என்பதை பார்த்த மாத்திரத்திலேயே சொல்லும் திறன் படைத்தவர். இவரது நூலகத்தில் கலிலியோ, கார்டேசியஸ், மார்கடார், நேபர், டீ சார்கோ போஸ்கோ, கோபர்நிகஸ் உட்பட மிகவும் பிரபலமான, முக்கியமானவர்களின் நூல்கள் இடம்பெற்றிருந்தன. இறுதிக் காலத்தில் தன்னிடம் இருந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரிய நூல்களை ஒரு நூலகத்துக்கு நன்கொடையாக வழங்கிவிட்டார்.
வானியலாளர் நிகோலஸ் கோபர்நிகஸின் கோட்பாடு களில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருந்தார். அந்த கோட்பாடுகளின் முக்கியத்துவத்தை உலகம் முழுமையாக அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக பல கட்டுரைகளை வெளியிட்டார். கோபர்நிகஸின் வாழ்க்கை வரலாற்று நூலை எழுத வேண்டும் என்று மிகுந்த ஆர்வத்துடன் இருந்தார். அந்த முயற்சி வெற்றி பெறவில்லை. ஆனாலும் கோபர்நிகஸின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய சைமன் ஸ்டார்வால்ஸ்கி என்ற வரலாற்று ஆசிரியருக்கு அரிய தகவல்களை வழங்கி, அந்த நூலை எழுதி முடிக்க பேருதவி செய்தார்.
வாழ்க்கை முழுவதும் மருத்துவம், கணிதம், வானவியல் உட்பட பல்வேறு துறைகளில் இடைவிடாமல் ஆராய்ச்சி செய்து வந்த ப்ரொஸக் 67-ம் வயதில் காலமானார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT