Published : 12 Jun 2016 11:50 AM
Last Updated : 12 Jun 2016 11:50 AM
உலகப் புகழ்பெற்ற நாட்குறிப்பு நூலை எழுதிய ஜெர்மன் யூதச் சிறுமி ஆன் ஃபிராங்க் (Anne Frank) பிறந்த தினம் இன்று (ஜூன் 12). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
* ஜெர்மனியின் ஃபிராங்பர்ட் நகரில் (1929) பிறந்தார். தந்தை வியாபாரி. ஹிட்லர் ஆட்சிக்கு வந்ததும் இவர்களைப் போன்ற யூதக் குடும்பங்கள் பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாகின. உயிருக்கு பயந்து, நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாம் தப்பினர்.
* சிறு வயது முதலே புத்தகங்கள் படிப்பதிலும், கதை, கட்டுரைகள் எழுதுவதிலும் ஆர்வம் கொண்டி ருந்தார். நெதர்லாந்தும் ஜெர்மனி யிடம் தோற்ற பிறகு, அங்கும் கொடுமைகள் தொடங்கின. நாஜிக் களிடம் இருந்து தப்பிக்க, தந்தையின் அலுவலகத்தில் உள்ள ரகசிய அறையில் இவர்களது குடும்பமும் மேலும் 4 பேரும் சேர்ந்து வசித்தனர்.
* இவரது 13-வது பிறந்த நாளுக்கு தந்தை ஒரு டைரி பரிசளித்தார். நெருக்கடியான, இருண்ட அறையில் சிறுமியின் ஒரே ஆறுதல் இந்த டைரிதான். தனக்குப் பிடித்த நாவலில் வரும் ‘கிட்டி’ என்ற கதாபாத்திரத்தின் பெயரையே டைரிக்கு சூட்டினார். அதில் நாட்குறிப்புகளை எழுதினார்.
* தன் உறவினர்கள், மனதில் தோன்றும் சிந்தனைகள், சுற்றி நடக்கும் சம்பவங்கள் குறித்து ‘கிட்டி’க்கு எழுதுவதுபோல டைரியில் எழுதினார். ரேடியோ கேட்டு உலக நடப்பை அறிந்துகொள்வார். இந்திய சுதந்திரப் போராட்டம், காந்திஜியின் உண்ணாவிரதப் போராட்டங்கள் குறித்தும் எழுதினார்.
* யாரோ ஒருவர் காட்டிக்கொடுக்க, நாஜிக்களிடம் 1945-ல் சிக்கிக்கொண்டனர். அந்த நெருக்கடியிலும், டைரியை மறைத்து வைத்தார். குடும்பத்தினர் அனைவரும் சித்ரவதை முகாம்களில் அடைக்கப்பட்டனர். அங்கு நிலவிய மோசமான சூழலால் காய்ச்சல் கண்டு, 15-வது வயதில் ஆன் ஃபிராங்க் இறந்தார்.
* தந்தையிடம் வேலை செய்துவந்த பெண்மணி, அந்த டைரியை பொக்கிஷம் போலப் பாதுகாத்து, அவரிடம் ஒப்படைத்தார். 1942 ஜூன் 14-ல் தொடங்கும் அந்த நாட்குறிப்பில் 1944 வரையிலான தலைமறைவு வாழ்க்கை பற்றிய பதிவுகள் இருந்தன.
* ‘மரணத்துக்குப் பின்பும் வாழ வேண்டும்’ என்று அதில் எழுதி யிருந்தார் ஆன் ஃபிராங்க். அந்த டைரியை வெளியிட்டு, தன் மகளின் விருப்பத்தை நிறைவேற்றினார் தந்தை. 1947-ல் இதன் முதல் டச்சு பதிப்பு வந்தது. இதன் ஆங்கிலப் பதிப்புக்கு அமெரிக்க ஜனாதிபதி ரூஸ்வெல்ட்டின் மனைவி முன்னுரை எழுதினார்.
* அமெரிக்கா, ஐரோப்பாவில் புத்தக விற்பனையில் இந்நூல் முதலிடம் பிடித்தது. தனக்கு மிகவும் பிடித்தமான நூல்களில் ஒன்று என ஜான் எஃப்.கென்னடி இதைக் குறிப்பிட்டுள்ளார். தமிழ் உட்பட ஏறக்குறைய 70 மொழிகளில் இது மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. யூதர்கள் தொடர்பான முக்கிய படைப்புகள், ஆவணங்களில் ஒன்றாக இந்த சிறுமியின் டைரி கருதப்படுகிறது.
* ஃபிராங்க் தலைமறைவாக வாழ்ந்த வீடு அருங்காட்சியகமாக மாற்றப்பட்டுள்ளது. அங்கு அவரது சிலையும், டைரியும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. ஃபிராங்க்கின் வயதுக்கு மீறிய அறிவு, படைப்பாற்றல், உணர்வுகளின் ஆழம், சொல்லாற்றல் ஆகியவை பிரமிக்க வைக்கக்கூடியவை.
* மிக இளம் வயதில் உலக அளவில் பேசப்படும் சிறந்த படைப்பாளியாகப் பரிணமித்த ஆன் ஃபிராங்க், தன் டைரி மூலம் இன்றும் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் மனதில் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT