Published : 17 Feb 2017 10:23 AM
Last Updated : 17 Feb 2017 10:23 AM
புத்தகங்கள் படிப்பதில் உங்களுக்குள்ள ஆர்வம் அனைவரும் அறிந்ததே. சாப்பாடு இல்லாமல் இருந்தாலும் புத்தகங்கள் இல்லாமல் உங்களால் இருக்க முடியாது. இந்நிலையில், பலரைப் போல என் மனதில் உள்ள சந்தேகத்தை உங்களிடம் பேசிக் கொண்டிருந்தபோது கேட்டேன். ‘‘அண்ணா நூற்றாண்டு நூலகத்தை உங்கள் அரசு சரியாகப் பராமரிக்கவில்லை என்று விமர்சனங்கள் எழுகின்றனவே. உண்மையில் புத்தகங்கங்களின் மீது அலாதி பிரியம் கொண்ட நீங்கள் இம்மாதிரி விமர்சனங்கள் எழுவதற்கு ஏன் இடம் கொடுத்தீர்கள்?”
இது என் கேள்வி.
உங்களின் நிழல் நண்பன் மற்றும் இலக்கியத்தில் நாட்டம் உள்ளவன் என்கிற உரிமையை அன்றுதான் எடுத்துக்கொண்டேன். ஏதோ மனதில் உள்ளதைக் கேட்டுவிட்டேனே தவிர, உங்களிடம் இதை நான் கேட்டிருக்கக் கூடாதோ என்ற எண்ணம் மனதில் ஓடியது. ஆனால், சிறிதும் கோபம் கொள்ளாமல் அதே நேரம், தீர்க்கமாக என்னைப் பார்த்த படி உறுதியான குரலில் நீண்ட பதில் அளித்தீர்கள். என் கேள்வியை எதிர்பார்த்தவர் போல தெளிவாக விளக்கம் கூறினீர்கள்.
‘‘நான் என்ன அலெக்ஸாண்ட்ரியாவின் லைப்ரரியை சீஸர் எரித்தது போல் நூலகத்தில் உள்ள புத்தகங்களை எரித்துவிட்டேனா?’’ சற்றே ஆதங்கமும் காட்டமும் கலந்த குரலில் இப்படிக் கேட்டீர்கள். மேற்கொண்டு நீங்களே பேச வழிவிட்டு அமைதியாக இருந்தேன். தொடர்ந்தீர்கள்…
‘‘இந்த நூலகம் குறித்து என்னைப் பற்றி எதிர்மறையான விமர்சனங்கள் செய்கின்றனர். இப்படி அவதூறு பிரச்சாரம் செய்வதே, அந்த கட்டிடம் குறித்து மக்களை திசை திருப்பும் எண்ணத்துடன்தான் என்பதை நான் மட்டுமே அறிவேன். அந்த நூலகம் எழுப்பப்பட்டுள்ள 43 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி, புதிய தலைமைச் செயலகம் கட்டுவதற்காக எனது அரசு திட்டம் தீட்டியது. ஆனால், ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, திமுக அரசு அந்த இடத்தில் நூலகத்தை கட்டியது. அண்ணா சாலை, ஓமந்தூரார் தோட்டத்தில் உள்ள மரங்களை அகற்றி, தலைமைச் செயலகம் ஒன்றை திமுக அரசு கட்டியது.
திமுக அரசு கட்டிய கட்டிடங்கள் என்பதற்காக மட்டுமே நான் இவற்றை எதிர்த்தேன் என்றா நினைக்கிறீர்கள்? அந்தக் கட்டிடங்கள் கட்டப்பட்டதில் சில சர்ச்சைகள் உள்ளன.
குறிப்பாக நூலகம்..! கட்டிடம் குறித்து நான் பிரச்சினை ஏற்படுத்துவேனோ என்கிற அச்சத்தில், நான் அந்த நூலகத்துக்கு எதிரானவள் என்று பிரச்சாரம் செய்யப்படுகிறது. ஒருநாள், உண்மைகள் வெளிவரும். அப்போது எனது நிலைப்பாடு மக்களுக்கு புரியவரும்.
நரசிம்மன்... நீங்கள் ஒரு உண்மையை தெரிந்துகொள்ள வேண்டும். திமுக ஆட்சி எழுப்பிய கட்டிடங்களை எல்லாம் நான் புறக்கணிக்கிறேன் என்றால், அன்றாடம் எனது வீடான வேதா நிலையத்திலிருந்து தலைமைச் செயலகம் போகும் வழியில் உள்ள, சவேரா ஹோட்டல் மேம்பாலத்தில் நான் எப்படி பயணிப்பேன்? அதன் இரு பக்கங்களிலும் கீழே உள்ள பாதையில் போகச் சொல்லி, எனது ஓட்டுநரை பணிக்க மாட்டேனா?
நகர் முழுவதும் திமுக ஆட்சியில் கட்டியுள்ள மேம்பாலங்களை நான் புறக்கணித்ததாக எங்காவது செய்திகள் வந்ததா? மேம்பாலங்களை உபயோகப்படுத்தும் நான், எனக்கு பிரியமான புத்தகங்களை புறக்கணிப்பேனா?
நான் கோட்டூர்புரம் பகுதியில் சட்டப்பேரவை வளாகம் கட்டுவதற்கான இடத்தை தேர்ந்தெடுத்ததற்கு காரணம் உண்டு. அதிகம் மக்கள் புழங்காத பகுதி அது. ஆளுநர் மாளிகையும் மிக அருகே உள்ளது. அமைச்சர்கள் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்களின் நடமாட்டத்தால், மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படக் கூடாது என்பதற்காகவே அந்த இடத்தை தேர்ந்தெடுத்தேன்.
தீர்க்க முடியாத பிரச்சினை ஒன்றை எதிர்கொள்ளும்போது, நான் எல்லாவற்றையும் மறந்துவிட்டு, புத்தகம் ஒன்றை படிப்பேன். அநேகமாக புத்தகத்தை முடிக்கும்போது, அந்தப் பிரச்சினைக்கான தீர்வு என்னுள் உதித்திருக்கும். அப்படி புத்தகங்களை நேசிக்கும் நான், எப்படி ஒரு நூலகத்தை புறக்கணிப்பேன்?’’ படபடவென்று சரவெடியாக வெடித்து, பிறகு உங்கள் மனதில் உள்ளதைகொட்டிவிட்ட திருப்தியுடன் அமைதியானீர்கள். தொடர்ந்து உங்களது வீட்டில் உள்ள நூலகத்தைப் பற்றி பெருமையுடன் பேசினீர்கள்.
‘‘இந்த நூலகத்தில் உட்கார்ந்துதான், பொழுதுபோவது தெரியாமல், புத்தகங்களை படித்துக் கொண்டிருப்பேன். பணியாளர்கள் வந்து அழைத்தால்தான் நான் உணவு உண்ணப் போவேன். ஹிட்லரின் ‘மெய்ன் காம்ப்’, மேரி எம் லுக்கின் ‘எ கிரவுன் ஃபார் எலிசபெத்’ போன்ற நூல்கள் எனக்கு அரசியல் ஆர்வத்தினை ஏற்படுத்தின’’ என்றெல்லாம் கூறினீர்கள்.
வெளியுலகத் தொடர்பினை துண்டித்துக் கொண்டு, உங்களது நூலகத்தில் கூட்டுப் புழு வாக மாறி, புத்தகங்களைப் படித்துக்கொண்டி ருந்த உங்களுக்கு திடீரென்று தோன்றியது ஒரு யோசனை... நாம் ஏன் ஒரு பத்திரிகையைத் தொடங்கக்கூடாது? இதுதான் உங்களுக்குத் தோன்றிய யோசனை.
விகடன், குமுதம், கலைமகள் வரிசையில் ஒரு பத்திரிகையை நடத்தி, இலக்கியப் பணி செய்தால் என்ன ? உடனேயே, உங்களது யோச னைக்கு செயல் வடிவம் கொடுக்க நினைத் தீர்கள். தங்களது நூலகத்தைவிட்டு வெளி நடந்த நீங்கள், தொலைபேசியை நோக்கி சென்றீர்கள். நீண்ட காலத்துக்குப் பிறகு, வேதா நிலைய இல்லத்தின் தொலைபேசியி லிருந்து ‘அவுட் கோயிங்’ அழைப்புகள் சென்றன.
இலக்கிய உலகில் கோலோச்சிக் கொண்டி ருந்த முக்கிய பெண் எழுத்தாளர்களின் வீட்டு தொலைபேசிகள் ஒலித்தன. முன்னணி பெண் எழுத்தாளர் ஒருவர், ‘‘நான் ஜெயலலிதா பேசறேன்..’’ என்று ஒலித்த உங்கள் குரலைக் கேட்டதும் மகிழ்ச்சியில் சிலையாகிப் போனார்.
பத்திரிகை என்னும் ஓடத்தை உரு வாக்கி, பேனா துடுப்புடன் இலக்கியக் கடலில் பயணம் செய்யும் தீர்மானத்துடன் இருந்தீர்கள். அந்த பத்திரிகைக்கு பெயர்கூட உங்கள் மனதில் உதித்தாகிவிட்டது. அப்போது...
- தொடர்வேன்… | தொடர்புக்கு: narasimhan.ta@thehindu.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT