Published : 16 Jul 2016 10:09 AM
Last Updated : 16 Jul 2016 10:09 AM

ஃபிரிட்ஸ் ஜெர்னிகி 10

ஃபிரிட்ஸ் ஜெர்னிகி - நோபல் பெற்ற டச்சு விஞ்ஞானி

இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற டச்சு விஞ்ஞானி ஃபிரிட்ஸ் ஜெர்னிகி (Frits Zernike) பிறந்த தினம் இன்று (ஜூலை 16). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

* நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாம் நகரில் (1888) பிறந்தார். தந்தை, தாய் இருவரும் கணித ஆசிரியர்கள். தந்தையை போலவே இவருக்கும் இயற்பியலில் ஆர்வம் பிறந்தது. பள்ளிப் படிப்பை சொந்த ஊரில் முடித்தார். ஓய்வு நேரத்தை பரிசோதனைகளிலேயே செலவிட்டார்.

* பல இயற்பியல் கருவிகளை தன் சேமிப்பில் இருந்து வாங்கி, பரிசோதித்து அவை குறித்து அறிந்துகொண்டார். கண்ணாடி, கண்ணாடி கற்கள், வண்ணங்கள் குறித்த ஆய்வில் மிகவும் ஆர்வம் கொண்டிருந்தார். வண்ணப் புகைப்படக் கள ஆராய்ச்சியிலும் ஈடுபட்டார். அதற்கு பண வசதி இல்லாததால், புகைப்பட சோதனைகளுக்குத் தேவையான ஈதரை தானாகவே உருவாக்கிக்கொண்டார்.

* தனது ஆராய்ச்சிகள் மூலம் புகைப்பட கேமரா, சிறிய வானியல் கண்காணிப்பு கருவி உள்ளிட்டவற்றை உருவாக்கினார். பெற்றோருடன் இணைந்து மிகவும் சிக்கலான கணக்குகளுக்கு தீர்வு கண்டார். பள்ளியில் வரலாறு, மொழி உள்ளிட்ட மற்ற பாடங்களில் அவருக்கு சிறிதும் ஈடுபாடு இல்லை. ஆனால், அறிவியல் பாடங்களில் வெளுத்துக் கட்டுவார்.

* ஆம்ஸ்டர்டாம் பல்கலைக்கழகத்தில் வேதியியல், கணிதம், இயற்பியல் பயின்றார். நிகழ்தகவு கோட்பாடுகள் குறித்த ஆய்வுக் கட்டுரைக்காக 1908-ல் தங்கப் பதக்கம் வென்றார்.

* அதே ஆண்டில் பால்மிளிர்வு (Opalescence) குறித்த விரிவான ஆராய்ச்சிக்காக டச்சு அறிவியல் சங்கம் இவருக்கு தங்கப் பதக்கம் அறிவித்தது. தங்கப் பதக்கம் வேண்டுமா, பணம் வேண்டுமா என்று கேட்டதற்கு, பணம்தான் வேண்டும் என்றார். அத்தொகையை தனது பரிசோதனைகளுக்கும், முனைவர் பட்ட ஆராய்ச்சிகளுக்கும் செலவிட்டார்.

* கிரானிங்கன் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஒருவரது அழைப்பை ஏற்று அவருக்கு உதவியாளராகப் பணியாற்றினார். அங்கு கணித இயற்பியல் விரிவுரையாளராக நியமிக்கப்பட்டார். டெலஸ்கோப் கண்ணாடிகளின் பிழைகள் குறித்து ஆராய்ந்தார். ஆம்ஸ்டர்டாம் பல்கலைக்கழகத்தில் 1915-ல் முனைவர் பட்டம் பெற்றார்.

* பார்வைத் திறன் குறித்த ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார். நிறமாலை வரிகள் குறித்து ஆராய்ச்சி மேற்கொண்டார். இதன் அடிப்படையில் ‘பேஸ் கான்ட்ராஸ்ட் மைக்ரோஸ்கோப்’ கருவியை மேம்படுத்தினார்.

* வேஜெனிங்கன் நகரில் 1933-ல் நடந்த இயற்பியல், மருத்துவ மாநாட்டில் இதன் தொழில்நுட்பத்தை விளக்கிக் கூறினார். இதே முறையை குழிலென்ஸ்களின் திறனை சோதிக்கவும் பயன்படுத்தி னார். தன் மாணவர்களுடன் இணைந்து, லென்ஸ் முறைகளின் பிறழ்ச்சிகளால் ஏற்படும் பிரச்சினைக்குத் தீர்வு கண்டார்.

* இவரது பேஸ் கான்ட்ராஸ்ட் மைக்ரோஸ்கோப் என்ற மகத்தான கண்டு பிடிப்பு உடனடியாக வரவேற்போ, அங்கீகாரமோ பெறவில்லை. பல ஆண்டுகளுக்குப் பிறகு, 1941-ல் இரண்டாம் உலகப் போருக்காக ஜெர்மனியில் அதிக எண்ணிக்கையில் உற்பத்தி செய்யப்பட்டன. அதன் பிறகுதான் இவரது புகழ் பரவியது. இந்த கண்டுபிடிப்புக்காக 1953-ல் இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்றார்.

* லண்டன் ராயல் சொசைட்டியின் ராம்ஃபோர்ட் பதக்கம், நெதர்லாந்து கலை, அறிவியலுக்கான ராயல் அகாடமி, ராயல் சொசைட்டி உள்ளிட்ட பல அமைப்புகளின் உறுப்பினராக இருந்தார். இறுதிவரை பல்வேறு ஆராய்ச்சிகளில் ஈடுபட்ட ஃபிரிட்ஸ் ஜெர்னிகி 78-வது வயதில் (1966) மறைந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x