Published : 22 Jan 2017 02:27 PM
Last Updated : 22 Jan 2017 02:27 PM
தலைசிறந்த மெய்யியலாளர், அறிவியலாளர், வழக்கறிஞர், சட்ட நிபுணர் என பன்முகப் பரிமாணம் கொண்ட பிரான்சிஸ் பேக்கன் (Francis Bacon) பிறந்த தினம் இன்று (ஜனவரி 22). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
* லண்டனில் பிறந்தார் (1561). தந்தை, எலிசெபத் ராணியின் உயர் அதிகாரிகளுள் ஒருவர். மிகவும் பலவீனமான குழந்தை யாக இருந்ததால் வீட்டிலேயே பாடம் சொல்லிக் கொடுக்கப்பட்டது. பின்னர் ட்ரினிட்டி கல்லூரியில் பயின்றார். படிப்பைப் பாதியிலேயே நிறுத்தினார்.
* பிரிட்டன் தூதரகத்தில் ஊழியராகச் சிலகாலம் பணியாற்றினார். இவரது 18-வது வயதில் தந்தை மரணமடைந்தார். சிரமத்துக் கிடையே பாய்டியர்ஸ் பல்கலைக்கழகத்தில் பயின்று, 21-வது வயதில் வழக்கறிஞர் பட்டம் பெற்றார்.
* வழக்கறிஞர் தொழிலுடன் தீவிர அரசியலிலும் ஈடுபட்டார். 28-வது வயதில் இங்கிலாந்து மக்கள் பேரவை உறுப்பினராகத் தேர்ந் தெடுக்கப்பட்டார். சட்டங்களை மாற்றுவதற்கும், திருத்துவதற்கும், எளிமைப்படுத்துவதற்கும் உறுதுணையாகச் செயல்பட்டார்.
* உயர் பதவியில் இருக்கும் பலர் இவரது நெருங்கிய உறவினர்கள் அல்லது நண்பர்களாக இருந்தனர். இருந்தாலும் அரசியின் நிலப்பிரபுத்துவச் சலுகைச் சட்டங்களையும், சர்வாதிகாரத்தனமான சில சட்டங்களையும் எதிர்த்ததால் எந்த உயர்ந்த பதவியும் கிடைக்காமல் போனது.
* ஆனால், அரசியின் மரணத்துக்குப் பிறகு முதலாம் ஜேம்ஸ் மன்னரின் ஆலோசகராகச் செயல்பட்டார். இத்தாலி, ஸ்பெயின் மற்றும் பல்வேறு நாடுகளுக்கு பயணங்கள் மேற்கொண்டார். பல மொழிகளைக் கற்றார்.
* உண்மையைத் தேடுவது, நாட்டுக்குச் சேவையாற்றுவது, தேவாலய முன்னேற்றத்துக்கு உழைப்பது ஆகிய மூன்று இலக்குகளைக் கொண்டிருந்ததாகக் கூறியுள்ளார். 1607-ம் ஆண்டு, அரசு வழக்கறிஞராகப் பதவி ஏற்றார். ஆனாலும் அரசியல் சாரா செயல்பாடுகள், படைப்புகள், மெய்விளக்கத் தத்துவக் கோட்பாடுகள் காரணமாகவே இவர் பிரபலமடைந்தார்.
* இவர் படைத்த ‘சர்டெய்ன் அப்சர்வேஷன்ஸ் மேட் அபான் ஏ லிபல்’ என்ற நூல் 1592-ம் ஆண்டில் வெளியானது. இதில் அறிவியல், அரசியல், சமூகம், அறிவுச் செல்வத்தின் அன்றைய நிலை, அறிவியல் ஆராய்ச்சிக்கான புதிய முறைகள், செயலறிவால் அறிந்துகொள்ளக்கூடிய தகவல்கள் உள்ளிட்ட பல விஷயங்கள் இடம்பெற்றுள்ளன. ஆறு தொகுதிகளாக வெளிவந்த இந்த நூல் உலகம் முழுவதும் வரவேற்பைப் பெற்றது. ‘மெடிசின்’, ‘ஹிஸ்டரி ஆஃப் லைஃப் அன்ட் டெத்’ ஆகிய நூல்களையும் எழுதியுள்ளார்.
* ‘புதிய முறை ஆவணம்’ என்ற நூல் இவரது மாஸ்டர் பீஸ் எனக் கருதப்படுகிறது. அறிவு என்பது ஏதோ ஒன்றில் தொடங்கி அனுமானிக் கப்பட்ட முடிவுகள் அல்ல; நாம் கண்டறியும் ஒன்றுதான் அறிவு. முதலில் உண்மைகளைச் சேகரியுங்கள், பின்பு அதிலிருந்து முடிவுகளைப் பெறுங்கள்; அனுபவத்தால் அறிந்துகொள்ளும் ஆராய்ச்சி முறைகளைப் பின்பற்றுவதுதான் சரியானது என்பது இவரது கருத்து. இது பேக்கன் முறை என்று குறிப்பிடப்படுகிறது.
* இவரது இலக்கியப் படைப்புகள் அறிவியல், மதம் மற்றும் இலக்கியம், சட்டம், நீதி தொடர்பானவை என மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டன. உலகின் முதல் நவீன தத்துவ அறிஞராகப் போற்றப்படுபவர். அனுபவவாதத்தின் (empiricism) தந்தை என்ற தனிப் பெருமை பெற்றவர்.
* தலைசிறந்த மெய்விளக்க வல்லுநர் எனப் போற்றப்பட்டார். இந்த உலகை அறிவியலும் தொழில் நுட்பமும் அடியோடு மாற்றிவிடும் என்பதை உணர்ந்த முதலாவது தத்துவவாதி இவர். அறிவியல் ஆராய்ச்சிகளைத் தீவிரமாக ஆதரித்த முதல் தத்துவஞானியுமான பிரான்சிஸ் பேக்கன் 1626-ம் ஆண்டு 65-வது வயதில் மறைந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT