Published : 20 Jan 2017 04:09 PM
Last Updated : 20 Jan 2017 04:09 PM
ஜல்லிக்கட்டு என்றால் என்ன? நாட்டு மாடுகள் என்றால் என்ன? அதை எதிர்க்கும் அமைப்புகளின் பின்னணி என்ன? இதை எதைப்பற்றியுமே தெரியாதவர்கள் செய்யும் விமர்சனங்கள் எவ்வளவு புரிதல்லற்றவை? போன்ற பல கேள்விகளுக்கு பதில் அல்ல இந்த அறிமுகம்.
அதை நீங்கள் காணப்போகும் இந்த வீடியோ உங்களுக்கு பாடலாகவும் நேர்காணல்களாகவும் சொல்லப்போகிறது.
தமிழகமெங்கும் ஜல்லிக்கட்டு அனுமதி கேட்டு உருவாகியுள்ள மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் கலந்த அலைகளின் எழுச்சி என்பது உண்மையில் ஜல்லிக்கட்டுக்கு மட்டுமான எழுச்சி இல்லை. தமிழகத்தின் அரசியல் எதிர்பார்ப்பு சார்ந்த எழுச்சியும்தான்.
இதுவரை, தமிழகம் அரசியல்வாதிகளாலும் சினிமா கவர்ச்சிகளாலும் அமுக்கி வைக்கப்பட்ட உணர்ச்சிகளின் எழுச்சியாகவே பார்க்கமுடிகிறது.
ஆனால், இப்போது ஏற்பட்டுள்ள மாற்றம் மாநிலம் முற்றிலும் புதிய திசையைநோக்கி செல்லவேண்டுமென்ற வேட்கையையே காட்டுவதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
மக்கள் போராட்டங்களின் வழியாகத்தான் பல்வேறு நாடுகளின் உண்மையான தலைவர்கள் உருவாகியுள்ளனர். நிழல்வீரர்களின் காலம் முடிவுக்கு வந்துகொண்டிருப்பதையும் தமிழகத்திலும் ஒரு புது பாதை உருவாகும் நல்லகாலம் தென்படுவதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்து வருகின்றனர்.
ஜல்லிக்கட்டை நடத்த அவசர சட்டம் இயற்றுவது மட்டுமல்ல இவர்களின் நோக்கம், ''இனி எங்களை யாரும் ஏமாற்றமுடியாது இதோ நாங்கள் விழித்துக்கொண்டோம். பெரிய தலைகள் சற்று தள்ளியிருங்கள்'' என்ற குரலையும் கேட்க முடிகிறது.
''இல்லை சார் இது காட்டாற்று வெள்ளம் கடலோடு போய் கலந்துவிடும்... மறுநாள் வேறுவேலையைப் பார்ப்பார்கள் என்கிறார்கள் வேறுசிலர். எது உண்மை?
'காலம் மாறிக்கொண்டிருக்கிறது, கருத்துகளும் மாறிக்கொண்டிருக்கின்றன' என்பதை அறியாதவர்களோ அவர்கள் என்று நீர்த்துப்போக வைக்கும் கருத்தாளர்களைப் பற்றி எண்ணத் தோன்றுகிறது.
தான் கேட்டு, பார்த்து பிரமித்த இந்த 20 ஜல்லிக்கட்டு பாடல்களை யூடியூப்க்காக தொகுத்திருக்கும் பத்திரிகையாளர் தளவாய் சுந்தரம் தனது முகநூலிலும் அதை வெளியிட்டுள்ளார். ஹிப்ஹாப் தமிழா ஆதி, ஜி.வி.பிரகாஷ்குமார் உள்ளிட்ட பல இசையமைப்பாளர்களின் இந்த பாடல்கள், காட்சிரீதியாகவும் அதில் இடம்பெற்றுள்ள கருத்துகள் வாயிலாகவும் தமிழரின் சங்ககால விளையாட்டைத் தெரிந்துகொள்ளும் உற்சாகமும் உத்வேகமும் அளிக்கக்கூடியவை.
இடைஇடையே சில நேர்காணல்கள், ''காளையை தண்ணியடிக்க விட்டா என்னாகும்? படுத்து தூங்கிடுங்க..! மாட்டைப் பத்தியே தெரியாதவங்கெல்லாம் மட்டையே தூக்கியடிக்கறவங்கலாம் கையெழுத்து போட்டா இது சாத்தியமாகுமா?'' என்று இந்த நாட்டுமனிதர்களின் வார்த்தைகள் சத்தியம்.
நாட்டு மாடுகளை அழிச்சிட்டா உலகின் மிகப்பெரிய நுகர்வுப் பிரதேசமான இந்தியாவில் சர்வதேச நிறுவனங்கள் தங்கள் பண்டங்களை விற்பதற்காக, களம் இறங்க நேரம்பார்த்துக்கொண்டிருக்கின்றன. நாட்டு மாடு இனவிருத்திக்குக் காரணமான ஜல்லிக்கட்டுக் காளைகளை முதலில் அழிக்கவேண்டும் என்பதுதான் அதன் குறிக்கோள். வேறு வார்த்தைகள் தேவையின்றி சற்றே ஒதுங்குகிறேன். இனி நீங்களே 20 பாடல்கள் அடங்கிய வீடியோக்களைப் பாருங்கள்... தமிழ் நிலப்பரப்பின் தனித்துவத்தை உணருங்கள்...
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT