Published : 05 Jan 2016 10:41 AM
Last Updated : 05 Jan 2016 10:41 AM

பரமஹம்ச யோகானந்தா 10

மகா அவதார் பாபாஜி குரு பரம்பரையில் தோன்றியவரும், இந்திய ஆன்மிக ஞானச் சுடரொளியை உலகெங்கும் பரவச் செய்தவருமான பரமஹம்ச யோகானந்தா (Paramahamsa Yogananda) பிறந்த தினம் இன்று (ஜனவரி 5). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

l உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரில் (1893) பிறந்தவர். இயற்பெயர் முகுந்தலால் கோஷ். தந்தை ரயில்வே அதிகாரி. பெற்றோரின் குருவான லாகிரி மகாசய மகான் மீது சிறு வயதில் இருந்தே பக்தி கொண்டிருந்தார். உயர்நிலைப் பள்ளியில் படித்த போது, துறவியாகும் ஆசையில் வீட்டைவிட்டு வெளியேறினார். நண்பனுடன் இமயமலைக்குப் புறப்பட்டார்.

l இருவரையும் இவரது அண்ணன் தேடிக் கண்டுபிடித்து வீட்டுக்கு அழைத்துவந்தார். உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த தந்தையிடம், ‘உயர்நிலைப் பள்ளிக் கல்வியை முடிப்பேன்’ என வாக்களித்தார். ஆனாலும் கல்வியைவிட ஆன்மிகத்திலேயே நாட்டம் சென்றது.

l உள்ளூரில் தங்கியிருந்த பாதுரி மஹாசயர் என்ற ஞானியை அடிக்கடி சந்தித்தார். பள்ளித் தேர்வில் வெற்றி பெற்ற பிறகு, தந்தையின் அனுமதியுடன் காசிக்கு சென்றார். அங்கு சுவாமி யுக்தேஸ்வர் கிரியின் தரிசனம் கிடைத்தது. அவரது சீடரானார்.

l குருவின் கட்டளைப்படி குடும்பத்தினர் வசித்துவந்த கல்கத்தாவுக்கு திரும்பினார். ஒரு மாதத்துக்கு பிறகு, செராம்பூரில் உள்ள யுக்தேஸ்வர் கிரியின் ஆசிரமம் சென்று திரும்பினார். மகன் திரும்பியதால் மகிழ்ச்சி அடைந்த தந்தை மறுநாளே கல்கத்தா அருகே உள்ள ஸ்காட்டிஷ் சர்ச் கல்லூரியில் சேர்த்துவிட்டார்.

l பட்டப் படிப்பை முடித்தவர் 1915-ல் சந்நியாசம் ஏற்றார். தனக்கு ‘யோகானந்தா’ என்ற பெயரை தேர்ந்தெடுத்தார். திஹிகா நகரில் ஆண்களுக்கான பள்ளியை 1917-ல் தொடங்கினார். இங்கு பாடங்களோடு, யோகமுறைகளும் கற்றுத்தரப்பட்டன. பின்னாளில் இது ‘யோகதா சத்சங்க சொசைட்டி’யாக மாறியது.

l இந்திய சமயத் தூதராக 1920-ல் அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டார். அங்கு தங்கி பல இடங்களில் சொற்பொழிவு ஆற்றினார். ‘செல்ஃப் ரியலைசேஷன் ஃபெலோஷிப்’ என்ற அமைப்பைத் தொடங்கினார். லாஸ் ஏஞ்சல்ஸை தலைமையகமாகக் கொண்ட இந்த அமைப்பு 175-க்கும் மேற்பட்ட நாடுகளில் பல லட்சம் உறுப்பினர்கள், 500-க் கும் மேற்பட்ட கோயில்கள், மையங்களுடன் செயல்படுகிறது.

l 1935-ல் இந்தியா திரும்பினார். நாடு முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு சொற்பொழிவுகள் நடத்தினார். இந்தியாவில் தொடங்கப்பட்ட சத்சங்கம் 100-க்கும் மேற்பட்ட தியான மையங்கள், ஆசிரமங்களுடன் ஆன்மிக, அறப்பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

l ‘பரமஹம்சர்’ பட்டம் 1936-ல் சூட்டப்பட்டது. மீண்டும் அமெரிக்கா சென்றவர், தொடர்ந்து எழுதியும், ஆன்மிக சொற்பொழிவுகள் ஆற்றியும் வந்தார். ‘ஆட்டோபயாகிராபி ஆஃப் எ யோகி’ என்ற பெயரில் சுயசரிதை எழுதினார். க்ரியா யோக நிலைகளை எடுத்துரைக்கும் நூலாக இது அமைந்துள்ளது.

l இந்நூல் வேத, உபநிடதங்களின் சாரமாக, நவீனகால ஆன்மிக காவியமாகவும் கருதப்படுகிறது. தமிழ் உட்பட 34 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

l லாஸ்ஏஞ்சல்ஸில் 59-வது வயதில் (1952) மகா சமாதி அடைந்தார். இந்தியாவுக்கு கொண்டுசெல்வதற்காக அவரது உடல் வைக்கப்பட்டிருந்தது. 20 நாட்களாகியும் உடலில் இருந்து துர்நாற்றம் வீசவில்லை. தோல் சுருங்கவில்லை. இது அமெரிக்க, ஐரோப்பிய பத்திரிகைகளில் அதிசய செய்தியாக வெளியானது. இவரது நினைவைப் போற்றும் வகையில் இந்திய அரசு 1977-ல் அஞ்சல் தலை வெளியிட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x