Published : 26 Nov 2014 11:02 AM
Last Updated : 26 Nov 2014 11:02 AM
சாமியாடி!
பெரியவர் நல்லாண்டியை முன்னேவிட்டு, ஊர் ஆட்கள் காட்டுக்குள் நுழைந்து நடந்தார்கள். கணக்குப்பிள்ளை ரத்னா பிஷேகமும் உடன் வந்து கொண்டிருந்தார்.
பெருங்குடிக்கு மேற்கே செண்பகத் தோப்பை தாண்டி நடந்தால், காடு. மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரம். மனித நடமாட்டம் அற்ற வனம். யானைகளும் சிறுத்தைப் புலிகளும் காட்டுப் பன்றிகளும் தன் போக்கில் அலையும். பாம்பும், தேளும், பூரானும் கால்களுக்குள் ஊறித் திரியும். மேற்கே மலை ஏறி இறங்கினால், மலையாள மண்.
பெருங்குடி சனம் யாரும் இந்தக் காட்டுக்குள் நுழைந்தது இல்லை. பெரியவர் நல்லாண்டி மட்டும் ஓரிரு முறை உள்ளே போய் வந்திருக்கிறார்.
“காட்டுக்குள் போய் வர வேண்டும்” என ரத்னாபிஷேகம் பிள்ளை சொன்னதும், நல்லாண்டிக்கு மனசு ஒப்பலே.
“காடு, கனத்த காடு. உள்ளே நுழையிறவங்க உயிருக்கு உத்தரவாதம் இல்லே” என்றார்.
“எனக்கும் தெரியும் நல்லாண்டி. என்ன செய்யிறது? அரண்மனை உத்தரவு. உயிருக்குப் பயந்தா ஊழியப் பிசகு வரும். விசுவாசமா… இருந்தே பழகிட்டேன். சரியோ, தப்போ… நம்ம ஆயுசுக்கும் அரண்மனைச் சேவகம்தான் விதி. மேற்கொண்டு, இது குலசாமி காரியமா வேற இருக்கு. சாமியாடி தவசியாண்டி இல்லாம திருவிழா நடத்துறது ஊருக்கு நல்லதில்லே. ஊரு ஆளுகள் பத்துப் பேரைக் கூட்டிக்கிட்டுப் போயிட்டு வருவோம்.”
நல்லாண்டி, கவிழ்ந்தபடி சிரித்துக் கொண்டார். “இந்த ஊரு ஆட்களை கூட்டிக்கிட்டு, எந்த முகத்தோட போயி தவசியாண்டி முன்னாடி நிக்கிறது? தாயில்லாப் பொம்பளைப் பிள்ளை யைத் தூக்கிக்கிட்டு ஊரை வெறுத்து அவன் ஒதுங்கி, இருவது வருஷத்துக்கிட்டே ஆவுது. ‘கோவில் சாமியாடி, கோவிச்சுக்கிட்டுப் போனானே... உயிரோட இருக்கானா, செத் தானா’ன்னு இத்தனை வருஷமாத் தேடாத ஊரு, இப்போ போயி நின்னா எப்பிடி வருவான்?” என்றவர், “உங்களுக்காக வர்றேன் கணக்குப் பிள்ளை” என்று சொல்லிவிட்டுத்தான் கிளம்பியிருந்தார்.
நல்லாண்டிக்கு அடுத்து ரத்னாபிஷேகம் பிள்ளை வந்தார். அடுத்து ‘லோட்டா’. ஊர் இளவட்டங்களில் ‘லோட்டா’ மட்டும்தான் வந்தான். அரண்மனையோடு ஒட்டிக் கொண்டதில் இருந்து, ‘லோட்டா’வுக்கு இளவட்டங்களோடு சேர்க்கையில்லை. தோரணை கூடிப் போச்சு. ‘லோட்டா’வுக்குப் பின்னால் வந்த ஏழெட்டுப் பேரில், முனியாண்டியும் ஒருவர். ‘லோட்டா’வுக்கு சித்தப்பன் முறை. ‘லோட்டா’வை இடக்கு குத்து குத்துறதிலே கெட்டிக்காரர். எல்லோர் கையிலும் கம்பு இருந்தது. கால் தடம் பார்த்து நடந்தார்கள்.
நல்லாண்டிக்கு ஓரடி முன்னால், செடி செத்தைகளோடு கொடுக்கை தூக்கிக் கொண்டு ஒரு நட்டுவாக்களி நின்றது. கால் வைத்திருந்தால் போட்டுத் தள்ளியிருக்கும். கையில் இருந்த கம்பால், நட்டுவாக்களியை ஓரமாய் தள்ளிவிட்டார்.
“கொடுக்கைப் பார்த்தாலே… புல்லரிக்குது! அடிச்சுக் கொல்லாமத் ஓரமா தள்ளிவிடுறீங்களே!” என்றபடி, தன் கையில் இருந்த கம்பால் அடிக்கப் போனான் ‘லோட்டா’.
நல்லாண்டி தடுத்தார். “டேய்… ‘லோட்டா’! காட்டுக்குள்ளே இப்போதானே நுழைஞ்சிருக்கிறே? இன்னும் எத்தனை நட்டுவாக்களி, எத்தனை பாம்பு வருதுன்னு பாரு. கண்ணுலே படுற எல்லாத்தையும் அடிச்சுக் கொல்லணும்னா, ஆயுசு பத்தாது. கடி படாமப் போயிக்கிட்டே இருக்கணும்.” சொல்லி வாய் மூடலே. பாதையின் குறுக்கே போன ஒரு பாம்பு, திரும்பி பார்த்துவிட்டு கடந்து போனது. திகைத்து நின்றார்கள்.
“இதுக்கு பேரு… வெள்ளை நாகம். இது, அருந்தலான சாதிப் பாம்பு. வேற எந்தக் காட்டுலயும் பார்க்க முடியாது. நாகப் பாம்புகள்லேயே விஷம் கூடுன சாதி!” என்றார் நல்லாண்டி.
‘லோட்டா’வுக்குக் கண்ணைக் கட்டியது. “சித்தப்பூ… ஏதாவது பேசிக்கிட்டே நடங்களேன்” என்றவன், எல்லோருக்கும் ஊடே நடந்தான்.
“ஏன்டா… பயந்தாங்கொள்ளிப் பயலே! எலிக்கும் பூனைக்கும் பயப்புடுற பய நீ. எங்க ளோட ஜோடி போட்டுட்டு, ஏன்டா காட்டுக்குள்ள வந்தே?” முனியாண்டி, ‘லோட்டா’வின் தலையில் ஒரு தட்டு தட்டினார்.
கணக்குப் பிள்ளைக்கும் அடிமடியைக் கலக்கியது. வெளிக்காட்டிக் கொள்ளாமல் நடந் தவர், “இந்த வனாந்தரத்துக்குள்ள தவசியாண்டி எப்புடி குடியிருக்கான்?” என்றார்.
“வயசுக்கு வந்த அவன் மகளும் இந்தக் காட்டுக்குள்ளதானே துணிச்சலா இருக்குது!”
“தவசியாண்டிக்கு யாரு மேலே… என்ன கோபம்?”
“ரணசிங்கம் சாகவும், ‘இனி இந்த ஊருலே… குடி இருக்க மாட்டேன்’னு தவசியாண்டி வெளியேறிட்டான்.”
“ரணசிங்கத்தைத் தெய்வமா மதிச்சவன் தவசியாண்டி!”
“தவசியாண்டி மட்டுமா? இந்த ஆப்பநாடேதான் ரணசிங்கத்தைக் ‘குலசாமி’யாக் கும்பிட்டுச்சு!”
“ரணசிங்கம் எப்படி செத்தான்? யாரு கொன்னது?”
“படை படையா வந்த வெள்ளைக்காரப் போலீஸுகளே ரணசிங்கத்தை நெருங்கப் பயந்தானுங்க. எல்லா போலீஸுகளையும் அழிச்சான். அப்படிப்பட்ட ஒரு மாவீரனை, எவன் கொன்னது?”
“யாருக்குத் தெரியும்?”
“அதுலதான் மர்மம் இருக்கு!”
“தவசியாண்டிக்குத் தெரியுமோ?”
“தவசியாண்டிக்குத் தெரி யுமான்னு… நல்லாண்டிக்குத்தான் தெரியும்.”
“நல்லாண்டி... ஒனக்குத் தெரி யுமா?”
“நான்… ரெண்டு தடவை காட்டுக் குள்ளே போயிருந்தப்ப, தவசியாண்டி வாயைக் கிண்டிப் பார்த்தேன். ம்ஹூம்… மூச்சுக் காட்டல. ஆனா, ஏதோ ஒரு வைராக்கியத்தில இருக்கான். அது மோசமான வைராக்கியமா தெரியுது” என்றார் நல்லாண்டி.
“கணக்குப் பிள்ளைக்குத் தெரியும். சொல்ல மாட்டேங்கிறாரு”.
குறுஞ்சிரிப்புச் சிரித்த ரத்னாபிஷேகம் பிள்ளை, “என்னை ஏம்பா இழுக்குறீங்க? நானும் உங்கள மாதிரிதான். ஒரே வித்தியாசம்… நீங்க சம்சாரிங்க, நான் அரண்மனைச் சேவகன். அவ்வளவுதான்”. வாயை இறுக்கிக் கொண்டார்.
“ஏன் சித்தப்பூ… தவசியாண்டி காட்டுக்குள்ள வந்ததுல இம்புட்டு ரகசியம் இருக்கா!” என்றான் ‘லோட்டா’.
“அப்பாடி! தவசியாண்டி குடிசை கண்ணுல தட்டுப்படவும்தான், என் மகன் ‘லோட்டா’வுக்குப் பேச்சு வந்திருக்கு!” என்ற முனியாண்டி, “மகனே… குடிசையில குடி இருக்க நீ வரல. திரும்பி ஊருக் குப் போவணும். போற வழியில… குறுக்கே, யானை வருதோ, புலி வருதோ. உன்னை மாதிரி எளவட்டத்தைதான் காடு ‘காவு’ கேக்குமாம்!”
எல்லோரும் சிரித்தார்கள். ஆனாலும் குடிசை நெருங்க நெருங்க, உள்ளுக்குள் உறுத்தியது. ‘ஊர் ஆளுகளைப் பார்த்து தவசியாண்டி பேசுவானோ, மாட்டானோ?’
ஓடையைக் கடந்து, கையில் கம்புகளோடு கரை ஏறினார்கள்.
அடர்ந்த காடே அதிரும்படி, ஒரு பெண்ணின் அலறல் சத்தம் கேட்டது.
“அப்பா….!”
- குருதி பெருகும்…
எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள: irulappasamy21@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT