Published : 19 May 2017 09:38 AM
Last Updated : 19 May 2017 09:38 AM
வங்க எழுத்தாளர், இலக்கியவாதி
வங்க மொழியில் மிக முக்கியமான இலக்கிய ஆளுமைகளுள் ஒருவரான மாணிக் பந்தோபாத்யாய (Manik Bandopadhyay) பிறந்த தினம் இன்று (மே 19). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
* பிரிக்கப்படாத மேற்கு வங்கத்தில் சந்தால் பர்கானா என்ற பகுதியில் பிறந்தார் (1908). தந்தை அரசு ஊழியராக இருந்ததால் பல்வேறு இடங்களுக்கும் பணியிட மாற்றம் பெற்றார். இதனால், போகும் இடங்களில் கல்வி கற்றார்.
* இவரது இயற்பெயர் பிரபோத் குமார் பந்தோபாத்யாய. மாணிக் என்பது இவரது செல்லப் பெயர். பின்னாளில் எழுத ஆரம்பிக்கும்போது, அதையே தன் புனைப்பெயராக மாற்றிக்கொண்டார். மிதனாபுர் ஜில்லா பள்ளியிலும் காந்தி மாடல் பள்ளியிலும் பயின்றார்.
* வெல்லெஸ்லியன் மிஷன் கல்லூரியில் இன்டர்மீடியட் தேறினார். கல்கத்தாவில் உள்ள பிரெசிடன்சி கல்லூரியில் பி.எஸ்சி. சேர்ந்தார். ஆனால் படிப்பை முடிக்காமலேயே வேலை பார்க்கத் தொடங்கினார். மைமென்சிங் ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் தலைமை ஆசிரியராகத் தன் தொழில் வாழ்வைத் தொடங்கினார்.
* ஒன்றிரண்டு இலக்கிய இதழ்களில் எழுதி வந்தார். முதன் முதலாக 1943-ல் நண்பர் ஒருவர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, அன்றைய முன்னணி இதழான பிச்சித்ரவாஸ் இதழுக்கு ‘அடாஷிமாணி’ என்ற கதையை எழுதித் தந்தார். முன்னணிப் படைப்பாளிகளின் கதைகள் மட்டுமே இடம்பெற்றுவந்த இந்த இதழில் இவரது கதை வெளிவந்து நல்ல வரவேற்பைப் பெற்றது.
* 4 மாதங்களுக்குப் பிறகு வெளிவந்த இவரது அடுத்த கதை வங்க மொழி இலக்கிய வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. அதற்கு வரவேற்பு கிடைக்கவே, எழுத்தையே தன் முழுநேரத் தொழிலாகக் கொண்டார். பங்க , புர்பாஷா, ஆனந்த பாஸார் பத்ரிகா, ஜுகாந்தர், சத்யஜுக் உள்ளிட்ட முன்னணி வங்காள மொழி இதழ்களிலும் இவரது படைப்புகள் இடம்பெறத் தொடங்கின.
* இவரது படைப்புகள் 57 தொகுப்புகளாக வெளிவந்தன. சிக்கல் நிறைந்த மனித மனம், கிராமங்களில் நிலவும் வாழ்க்கையின் உண்மை நிலவரம், சாதாரண மக்களின் வாழ்க்கை ஆகியவை இவரது படைப்புகளில் காணப்பட்டன. மனித உளவியல், கட்டுப்பாடு இல்லாத மனம் ஆகியவற்றைக் குறித்த இவரது கண்ணோட்டங்களும் இவரது படைப்புகளில் எதிரொலித்தன.
* ‘பத்மா நதிர் மஞ்சில்’, ‘புதுல் நாசேர் இதிகதா’, ‘சிஹ்னா’, ‘ஆரோக்யா’, ‘ஷஹார்தலி’, ‘சதுஷ்கோன்’ உள்ளிட்ட நாவல்கள், ‘பிரகைதிஹாசிக்’, ‘சமுத்ரெர் ஸ்வத்’, ‘ஹலவுத் பொடா’, ‘பேரிவாலா’ உள்ளிட்ட சிறுகதைத் தொகுப்புகள் குறிப்பிடத்தக்கவை.
* இவரது யதார்த்தமான சரளமான நடை, மனித மனங்களோடு தொடர்புகொள்ளும் எழுத்துக்கள், வட்டாரப் பேச்சு வழக்கைக் கொண்ட மொழி நடை, நேர்த்தியான கதைசொல்லும் பாணி ஆகியவை இன்றும் வாசகர்களை வசீகரித்து வருகின்றன.
* இவரது ‘நாசேர் இதிகதா’ நாவல் மாஸ்டர் பீசாகக் கருதப்படுகிறது. 1949-ல் இந்தக் கதையைத் தழுவித் திரைப்படமும் தயாரிக்கப்பட்டது. மொத்தம் 36 நாவல்கள், 177 சிறுகதைகளை எழுதியுள்ளார். கார்ல் மார்க்ஸ், ஏங்கல்ஸ் ஆகியோரது நூல்களைப் படித்து மார்க்சியக் கோட்பாடுகளால் கவரப்பட்ட இவர், இந்திய கம்யூனிசக் கட்சியில் இணைந்து துடிப்புடன் செயல்பட்டார்.
* உடல்நலப் பிரச்சினைகளால் தொடர்ந்து அவதியுற்று வந்தாலும் எழுதுவதை நிறுத்தாமல் வங்கமொழியின் குறிப்பிடத்தக்க ஆளுமைகளுள் ஒருவராக உயர்ந்த மாணிக் பந்தோபாத்யாய, 1956-ம் ஆண்டு 48-வது வயதில் மறைந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT