Published : 27 Jun 2016 11:56 AM
Last Updated : 27 Jun 2016 11:56 AM

ஹெலன் கெல்லர் 10

ஹெலன் கெல்லர்- அமெரிக்க மாற்றுத்திறன் சாதனையாளர்

பார்வைத்திறன், பேசும் திறன், கேட்கும் திறனை இழந்தாலும், சாதனை படைக்க முடியும் என்பதை நிரூபித்துக் காட்டிய ஹெலன் கெல்லர் (Helen Keller) பிறந்த தினம் இன்று (ஜூன் 27). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

l அமெரிக்காவின் அலபாமா மாநிலம் டஸ்கம்பியா நகரில் (1880) பிறந்தார். ஒன்றரை வயதில் ஏற்பட்ட காய்ச்சலால் கண் பார்வை, கேட்கும் திறன், பேசும் திறன் பறிபோனது. தான் நினைப்பதை மற்றவர்களுக்கு உணர்த்த தெரியாமல் தவித்த குழந்தை, அழுது ஆர்ப்பாட்டம் செய்து, முரட்டுத்தனமாக நடந்துகொண்டது.

l எப்படியாவது கல்வி கற்றுத்தர வேண்டும் என்று பெற்றோர் படாத பாடுபட்டனர். ‘தி மிராக்கிள் ஒர்க்கர்’ என்று உலகம் போற்றிய ஆசிரியை ஆனி சலிவன் 1887-ல் வந்து சேர்ந்தார். இந்த ஆசிரியை மாணவி உறவு அடுத்த 49 ஆண்டுகாலம் நீடித்தது.

l முதலில் பொருட்களை இவரது கைகளில் கொடுத்தும், மரம், செடி கொடிகளைத் தொடச் செய்தும் அவற்றின் பெயர்களை கையில் எழுதியும் காட்டினார் சலிவன். எதையும் வேகமாக கற்கும் ஆற்றல் பெற்றிருந்த ஹெலன், விரைவில் பிரெய்லி முறையைக் கற்றார். உதடுகளில் கைவைத்து அதன் அதிர்வுகள் மூலம் பேசுவதைப் புரிந்துகொள்ளும் கலையைக் கற்றார்.

l பத்து வயது நிறைவதற்குள் பிரெய்லி முறையில் ஆங்கிலம், பிரெஞ்ச், ஜெர்மன், கிரேக்கம், லத்தீன் மொழிகளைக் கற்றார். நண்பர்கள், உறவினர்களுக்கு கடிதங்கள் எழுதினார். பெர்கின்ஸ் பள்ளியில் சேர்ந்து, ஆசிரியர் வாயிலாகவும் பிரெய்லி முறையிலும் பல நூல்களைப் படித்தார்.

l சத்தம்போட்டு அழுது, சிரிக்கிற ஹெலனால் பேசவும் முடியும் என்பதை 13-வது வயதில் தோழிகள் புரிய வைத்தனர். சாராஃபுல்லர் என்ற ஆசிரியரின் உதவியுடன் கொஞ்சம் கொஞ்சமாக பேசக் கற்றுக்கொண்டார். நியூயார்க்கில் உள்ள காது கேளாதோர் ரைட் ஹுமாஸன் பள்ளியில் பயின்றார். தெளிவாகப் பேச முடியா விட்டாலும், பிறர் புரிந்துகொள்ளும் அளவுக்கு பேசும் திறனை வசப்படுத்திக்கொண்டார். சிறந்த பேச்சாளராகவும் திகழ்ந்தார்.

l சுயசரிதையை 23 வயதில் எழுதினார். இது பெண்கள் இதழில் தொடராக வந்து, பிறகு புத்தகமாக வெளிவந்தது. தமிழ் உட்பட உலகம் முழுவதும் 50-க்கும் மேற்பட்ட மொழிகளில் இது மொழிபெயர்க்கப்பட்டது. இதுதவிர, 12 நூல்கள் எழுதியுள்ளார். பத்திரிகைகளில் கட்டுரைகள் எழுதினார்.

l ராட்கிளிஃப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து, 24-வது வயதில் இளங்கலைப் பட்டம் பெற்றார். பார்வையின்றி, காதுகேளாமல் பல்கலைக்கழகத்தில் படித்து பட்டம் பெற்ற முதல் பெண் என்ற பெருமை பெற்றார்.

l பார்வையற்றோர் நலனுக்கான அமைப்பை உருவாக்கினார். வாழ் நாள் முழுவதும் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக அயராமல் பாடுபட்டார். அவர்களுக்கான பள்ளிகளைத் திறக்க வைப்பதற்காக, இந்தியா உட்பட 40-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். பார்வையற்றோருக்காக தேசிய நூலகம் உருவாக்கி னார்.

l இவரது வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட ‘தி மிராக்கிள் ஒர்க்கர்’ திரைப்படத்தில் ஹெலன், ஆனி சலிவனாக நடித்த 2 நடிகைகளும் ஆஸ்கர் விருதை வென்றனர். இவரது சுயசரிதை, நாடகமாகத் தயாரிக்கப்பட்டது.

l உலகம் முழுவதும் பல பல்கலைக்கழகங்கள், அமைப்புகளிடம் பல விருதுகள், கவுரவங்களைப் பெற்றுள்ளார். மாற்றுத்திறனாளிகளின் முன்னேற்றத்துக்காக இறுதிவரை உழைத்த ஹெலன் கெல்லர் 88-வது வயதில் (1968) மறைந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x