Published : 29 Jun 2016 10:25 AM
Last Updated : 29 Jun 2016 10:25 AM
தமிழ் நாடக உலகில் புரட்சியை ஏற்படுத்தி, 'நாடகக் காவலர்' என்று போற்றப்பட்ட நடிகர் ஆர்.எஸ்.மனோகர் (R.S.Manohar) பிறந்த தினம் இன்று (ஜூன் 29). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
* நாமக்கல்லில் (1925) பிறந்தவர். தந்தை சுப்பிரமணியன் அஞ்சல் துறையில் பணியாற்றியவர். அவரது பணிமாற்றம் காரணமாக குடும்பம் கர்நாடகாவின் பெல் லாரிக்கு குடிபெயர்ந்தது. அங்கு ஷேக்ஸ்பியர் நாடகங்கள் நடத்தி வந்த இயக்குநரும், நடிகருமான ராகவாச்சாரியின் நடிப்பும், வசன உச்சரிப்பும்தான் இவருக்கு உத்வேக சக்தியாக இருந்தது.
* சென்னை பச்சையப்பா கல்லூரியில் பி.ஏ. சமஸ்கிருதம் படித்தார். அப்போது, 'மிருச்சகடிகா' என்ற சமஸ்கிருத நாடகத்தில் கதாநாயகனாக நடித்து, அனைவரையும் கவர்ந்தார். நாடகக் களத்தில் அடியெடுத்து வைத்தவர், சுகுண விலாஸ் சபாவின் 'தோட்டக்காரன்' நாடகத்தில் நடித்தார். 'நாடகத் தந்தை' பம்மல் சம்பந்த முதலியார் நாடகத்தைப் பார்த்து இவரைப் பாராட்டினார்.
* பட்டம் பெற்று, அஞ்சல் துறையில் சேர்ந்தார். 'கானல் நீர்' படத்தில் பட்டதாரி இளைஞனாக நடிக்க நிஜ பட்டதாரியான இவரே தேர்ந்தெடுக்கப்பட்டார். கல்லூரி நாடகத்தில் 'மனோகர்' கதாபாத்திரத்தில் நடித்ததால், அதையே தன் பெயராக மாற்றிக்கொண்டு, 'ராமசாமி சுப்பிரமணிய மனோகர்' ஆனார்.
* பல படங்களில் கதாநாயகனாக நடித்தார். ஆனாலும், நாடகத்தின் மீதான காதலால் 'நேஷனல் தியேட்டர்ஸ்' நாடக நிறுவனத்தை 1954-ல் தொடங்கினார். 'இன்ப நாள்', 'உலகம் சிரிக்கிறது' ஆகிய சமூக நாடகங்களை அரங்கேற்றினார். பின்னர் பிரம்மாண்ட இதிகாச, வரலாற்று நாடகங்களை அரங்கேற்றினார்.
* ராவணன், சூரபத்மன் உள்ளிட்ட எதிர்மறைக் கதாபாத்திரங்களின் மறுபக்கமான ஆக்கபூர்வ அம்சங்களை அற்புதமாகப் படம் பிடித்துக்காட்டும் வகையில் நாடகங்களைப் படைத்தார். சிறப்பான மேடை அமைப்பும், தந்திரக் காட்சிகளும் மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றன.
* பிரம்மாண்டமாக தயாராகியிருந்த 'இலங்கேஸ்வரன்' நாடகம், மக்களிடம் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தி நஷ்டமாகிவிடுமோ என்று பயந்த மனோகர், காஞ்சி பரமாச்சாரியாரை சந்தித்தார். அவர் ''கவலைப்படாதே'' என்று கூறி ஆசீர்வதித்து அனுப்பினார்.
* விரைவிலேயே, இலங்கையில் இந்த நாடகத்தை தொடர்ந்து 21 நாட்கள் நடத்தும் வாய்ப்பு தேடி வந்தது. நாடகத்தைப் பார்த்து வியந்த மக்கள், இவருக்கு 'இலங்கேஸ்வரன்' என்ற பட்டத்தைக் கொடுத்து கவுரவித்தனர். இவரது நாடகங்களிலேயே அதிக முறை (1,800-க்கு தடவைக்கு மேல்) மேடையேறியதும் இந்த நாடகம்தான்.
* 'சாணக்கிய சபதம்', 'சூரபத்மன்', 'சிசுபாலன்', 'இந்திரஜித்', 'நரகா சுரன்', 'சுக்ராச்சாரியார்' உள்ளிட்ட நாடகங்களும் குறிப்பிடத்தக்கவை. சொன்ன நேரத்துக்கு நாடகம் தொடங்கிவிட வேண்டும்; அனைத்தும் துல்லியமாக இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருப்பார். ஒவ்வொரு நாடகத்துக்கும் 30 நாட்கள் ஒத்திகை பார்ப்பாராம்.
* சினிமா உலகில் கதாநாயகனாக அறிமுகமான பத்து, பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு வில்லன் கதாபாத்திரத்தில் முத்திரை பதித்தவர். 'வண்ணக்கிளி', 'கைதி கண்ணாயிரம்', 'வல்லவனுக்கு வல்லவன்', 'ஆயிரத்தில் ஒருவன்', 'அடிமைப்பெண்', 'இதயக்கனி' உட்பட 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவர்.
* இசைப்பேரறிஞர், நாடகக் காவலர் உட்பட பல விருதுகள், பட்டங்கள் பெற்றவர். தமிழ் நாடகத் துறையில் ஒரு திருப்புமுனையை உருவாக்கிய ஆர்.எஸ்.மனோகர் 81-வது வயதில் (2006) மறைந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT