Published : 28 Sep 2013 09:31 PM
Last Updated : 28 Sep 2013 09:31 PM
இயற்கை சுத்தமாய்க் கைவிட்டதில் காய்ந்து பொட்டல் காடுகளாய் கிடந்த நிலத்தை கர்நாடகக் காடுகள் கறந்து, அணை நிரப்பி வாய்க்கால் வழியனுப்பிய நீரில் நனைந்து உயிர் பிடிக்கின்றன. இந்த முறை ஊருக்குப் போகும்போதே கவனித்தேன். வாய்க்கால் நீர் எட்டும் இடங்கள் கூடுதல் பசுமையாகவோ, சேற்று வயலாகவோ கிடந்தன.
பெரும்பாலும் கரும்பும் மஞ்சளுமாக போர்த்திக் கிடக்கும் ஒரு சாலையோர செழிப்பான நிலம் அது. மிகமிக சமீபத்தில் தென்னை மரங்கள் பிடுங்கப்பட்டு, சமன் செய்யப்பட்டு, வீட்டுமனைகளாக கல் நடப்பட்டு, எல்லைகளில் வண்ணக்கொடிகள் பறக்கவிடப்பட்டு கர்வமாய் நின்றுகொண்டிருந்த அந்த நிலத்தில் இப்போது தண்ணீர் தளும்பிக் கொண்டிருக்கின்றது.
மூன்று மாதங்களுக்கு முன்பு ஆயிரம் அடி துளைத்தும் சொட்டுத் தண்ணீர் இல்லையென்றிருந்த நிலம் அது. இப்போது சுற்றிலும் நீர் நிரம்பி ஒறம்பெடுத்துக் கிடக்க, வீடு கட்டுகிறேன் என யார் அஸ்திவாரம் பறித்தாலும் நீர் சுரக்கும் என்பது புரிந்தது.
மெயின் ரோட்டிலிருந்து 1 கி.மீ தூரம் உள்ளே சென்றால் வரும் நாலு ஏக்கர் பூமியை “ஏக்கரா 40 லட்சத்துக்கு வெலை சொல்றாங்க, பேசிட்டிருக்கோம், வாங்கினா ப்ளாட் போடலாம் இல்லைனா ஃபார்ம் ஹவுஸ் கட்டிடலாம்” என நண்பர் ஒருவர்
என்னிடம் சொல்லிக்கொண்டிருந்தார். அந்த நிலத்தைப் பார்த்தேன். அதைச்சுற்றிலும் இருந்த வயல்கள் சேற்று வயல்களாக இருந்தன. இப்போதைக்கு அந்த நிலத்தில் சேற்று உழவுக்கு டிராக்டர் இறக்குவதைத் தவிர வேறு எதையும் செய்ய முடியாது எனப் புரிந்தது.
ஒவ்வொரு வறட்சியிலும் தண்ணீர் பற்றாக்குறையில் பூமி காய்ந்து போகும்போது இதுதான் சாக்கென ரியல் எஸ்டேட் அரக்கன் அதிவேகமாக தன் கால்களை பூமி அதிர ஊன்றி பசிக்கு இரையெடுத்து விடுகிறான். தப்பிப் பிழைப்பது அவ்வளவு எளிதல்ல.
எதற்கு, எப்படி என்று தெரியவில்லை, எனினும் எவர் நிலத்தையும் வாங்கும் அளவுக்கு காசு வைத்துக்கொண்டு வேட்டை மனோபாவத்தோடு பலர் இருக்கத்தான் செய்கின்றனர்.
தன் நிலத்தை வீட்டுமனைத் திட்டத்திற்கு விற்கும் விவசாயிகள் மீது, மேம்போக்காக, வெறுமெனக் கோபம் கொள்வது வெட்ககரமானது.
கிணற்றில் தண்ணீர் இருந்தாலும் இல்லாவிட்டாலும், மின்சாரம் கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும், மழை பொய்த்து எல்லாம் காய்ந்து போனாலும், பேய் மழை கொட்டி எல்லாம் அழுகிப் போனாலும், விதைபோட்டு, உரம் போட்டு, வெட்டிப்பார்க்கையில் மண்ணோடு மண்ணாக மட்கிக் கிடந்தாலும், பூச்சிகள் வந்து அரித்துத் தின்றாலும், புழுக்கள் வந்து கொறித்துத் தின்றாலும், மயில்கள் வந்து துவம்சம் செய்தாலும், தன் வயிற்றுக்கு ஒழுங்கா தின்னும் தின்னாமலும், சுவாசித்தும் சுவாசிக்காமலும் போராடும் விவசாயிகளின் வாழ்க்கைப் போராட்டம் சாதாரணமல்ல.
கிலோ 2 ரூபாய்க்கு வெங்காயம் விற்கும்போதும், 3 ரூபாய்க்கு தக்காளி விற்கும்போதும் விவசாயிகள் படும் வேதனையைச் சொல்ல வலிச் சாயம் பூசிய வார்த்தைகள் எந்த இலக்கியத்திலும் இல்லை. அதே வெங்காயம் கிலோ 60 ரூபாய்க்கு விற்கும்போதும், அதே தக்காளி கிலோ 45 ரூபாய்க்கு விற்கும்போது, தத்தம் நிலத்தில் மட்டும் வெங்காயமும் தக்காளியும் இல்லாமல் போகும் வரலாற்றை எழுதவும் வார்த்தைகள் கிடைப்பதில்லை.
கடன்பட்டு, உடன்பட்டு, உடலை உருக்கி, மண்ணுக்குள் போட்டது முளைக்குமா?, பூச்சிக்கு தப்புமா?, நோயைத் தாங்குமா?, அறுவடை வரை தண்ணீர் தாட்டுமா? எனப் பல போராட்டங்களைத் தாக்குப்பிடித்து ஒரு விவசாயி விளைவித்ததை, விலை பேசி வாங்கும் வியாபாரி எல்லாக் காலகட்டத்திலும் செழிப்பாகவே இருக்கின்றார்.
வியாபாரிக்கும், வியாபாரியிடம் வாங்கிச் சாப்பிடுவோருக்கும் நகக்கண்ணில் என்ன, நகத்தில் கூட அழுக்குப்படுவது ஆச்சரியமான ஒன்று. விவசாயிக்கு நகக்கண்ணில் அழுக்குப் படுவது மட்டுமல்ல, நகமே கூட நைந்துபோவதோ அழுகிப் போவதோ உண்டு.
ஆறு மாதத்திற்கு முன்பு கிலோ 2 ரூபாய்க்கு வாங்கியதை, இப்போது கிலோ 60 ரூபாய் கொடுத்து வாங்கி உண்ணும் நிலையில் இருக்கும் மனிதர்கள் எதையும் சமாளிக்கும் திறன் பெற்றவர்களாக இருக்கின்றனர். இப்போது கிலோ 60 ரூபாய்க்கு போகிறதே என்று வெங்காயத்தை பயிர் செய்யும் விவசாயி, விளைந்து அறுவடை செய்யும் போது, கிலோ 4 ரூபாய்க்கே கேட்கப்படாத சூழல் வரும்போது அதை தாங்கும் திராணியற்றுப் போகிறான்.
எவரும் சந்திக்காத போராட்டங்களைச் சந்தித்து மூட்டைகட்டி, சந்தைக்கு வரும் விவசாயி ஒரு ரூபாய், ரெண்டு ரூபாய் என கணக்குப் பார்த்து, காபி டீ குடிக்க கணக்குப் பார்த்து சிரமப்பட மட்டும் உரிமையுண்டே தவிர, தன் பொருளுக்கு தான் விலை நிர்ணயிக்கும் உரிமை ஒருபோதும் இருப்பதில்லை.
வாரக்கணக்கில், மாதக்கணக்கில், வருடக்கணக்கில் என சிரமப்பட்டு, விற்று நிமிரலாமேயேன வருபவனின் பொருளுக்கு வியாபாரி மட்டுமே எப்போதும் விலை நிர்ணயம் செய்கிறார், அவரே அந்தப் பொருளுக்கு லாபமும் தீர்மானிக்கிறார். வேறு வழியின்றி, வக்கின்றி வியாபாரி கொடுக்கும் காசை ஓரிரு சமயங்களில் மகிழ்வாகவும், பெரும்பாலான சமயங்களில் கசப்போடும் மட்டுமே பெற்றுச் செல்கிறான் விவசாயி.
விவசாயி என்பதற்கான அடையாளத்தோடு கசங்கிய வேட்டி, சட்டை, துண்டுமாய் வருபவன் பேருந்தில் ஏறும்போதுகூட, “யோவ் சில்லறை இருந்தா ஏறு இல்லாட்டி எறங்கு!” என்றே அதட்டுகிறார்கள்.
தாலுக்கா ஆபீசில் ஒரு சான்றிதழ் வாங்கவோ, போஸ்ட் ஆபீசில் ஒரு மணி ஆர்டர் அனுப்பவோ, வங்கியில் நகை அடகு வைக்கவோ, பயிர்க்கடன் வாங்கவோ செல்லும்போது அவனுக்கு புரியாத மொழியில், பழக்கப்படாத வரிகளில் மட்டுமே கேள்வி கேட்கிறார்கள், பதில் சொல்லும்போது அது தவணையாக தரப்படும் என்கிறார்கள். நகரத்தின் அகலமான நெரிசல் மிகுந்த
சாலையில் தடுமாற்றமாய்க் கடக்கையில் “ஏய்யா என் தாலியை அறுக்கிறே!” எனக் கேவலப்படுத்துகின்றனர். கோவிலுக்கு போனால் கூட பளபளக்கும் வெள்ளையில் வருபவர்களைக் காண்கையில் “எல்லாரும் கொஞ்சம் ஓரமா ஒதுங்கி நில்லுங்க” என்றே பூசாரி கற்பூரம் போல் எரிந்து விழுகிறார். இவ்வளவு ஏன், எத்தனை ஏக்கர் நிலம் வைத்திருந்தாலும், எத்தனையோ சம்பாதித்தாலும் விவசாயத்தை மட்டுமே செய்பவனுக்கு, திருமணத்திற்குப் பெண் தர உள்ளூர் விவசாயி, உறவுக்கார விவசாயிகளே கூட ஒப்புக்கொள்ளாத முரணும் இங்கு மட்டுமே சாத்தியம்.
துன்பப்பட்டு, அவமானப்பட்டு, ஒதுக்கப்பட்டு ஏன் விவசாயத்தில் இருக்க வேண்டும் என்ற எண்ணம் விவசாயிகளுக்கு எழாமல் இல்லை. “யாரோ சம்பாதிக்க, யாரோ தின்ன நான் மட்டுமே நாயாப்பேயா காலம் முழுதும் அல்லாடிக்கொண்டேயிருக்க வேண்டுமா!?” என்ற அலுப்பு எழாமல் இல்லை.
இரண்டு திட்டங்களைக் கையில் எடுத்தார்கள். ஒன்று தம் பிள்ளைகளை விவசாய நிலத்தை விட்டு வெளியேற்றுவது. “இந்தா நல்லா படி, எங்களை மாதிரி கஷ்டப்படாதே, எங்காச்சும் வேலைக்குப் போயிடு.. அல்லது தொழில் செய்து பிழைத்துக்கொள்” என்று.
அடுத்து, சாலையோரம் இருக்கும் நிலங்களை நல்ல விலைக்கு விற்றார்கள் அல்லது அவர்களே கூட்டணி அமைத்து, வீட்டுமனைகளாகப் பிரித்துப்போட்டு கல் நட்டு வண்ணம் பூசி, மையத்தில் ஒரு குடிசை போட்டு வியாபாரம் செய்து முதலாளியாக உயர்கிறார்கள்.
அதன்பின் சில்லறை வைத்துக்கொண்டு பேருந்தில் ஏறவேண்டிய அவசியம் இருப்பதில்லை. பளபளக்கும் உடையில் பொலிரோ காரில் சென்று இறங்கும் முன்னாள் விவசாயி என்கின்ற இன்னாள் முதலாளிக்கு சமூகம் கூடுதல் மரியாதை கொடுக்கத் துவங்குகிறது.
உள்ளூர் வார்டுச் செயலாளரோ, வட்டமோ எதிரில் பார்க்கும்போது வணக்கம் வைக்கிறார். தாலுக்கா ஆபீஸில் சிறப்புக் கவனிப்பில் அதனதன் முறையில் வேலை நடக்கிறது. வங்கி மேலாளர் வரவேற்று, குளிர்பானம் வாங்கிக் கொடுக்கிறார்.
அடுத்த கட்டமாய் அக்கம்பக்க ஊரில் சாலையோரம் இருக்கும் நிலங்களை விலை பேசுகிறார்கள், வீட்டுமனையாக்கி சின்னத்திரை பிரபலங்களை வைத்து விளம்பரப் படமெடுத்து சுழல் நாற்காலிகளில் செல்போன் பிடித்த படி “எங்க வீட்டுமனைத் திட்டத்திலே பார்த்தீங்கனா.” என மோதிரத்தில் வைரக்கல் மினுமினுக்கப் பேசுகிறார்கள்.
வியாபாரிபோல், நகரத்துவாசிபோல் எந்தக் கவலையுமின்றி 60 ரூபாய் கொடுத்து வெங்காயம் வாங்குகிறார்கள். பிள்ளைகளுக்கு 3000 பத்திரிக்கை அடித்து, நாலாயிரம் பேருக்குச் சோறுபோட்டு பெரிய அளவில் திருமணம் நடத்துகிறார்கள். புதிதாக ஷூ அணிந்து வாக்கிங் செல்கிறார்கள். வருடத்திற்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை செய்து கொள்கிறார்கள்.
இன்னும் மூன்று நான்கு மாதங்களுக்கு நிலமெங்கும் தண்ணீர் செழித்திருக்கும். காலம்காலமாக செய்த விவசாயம் எல்லோரையும் தன்னுள் சுழற்றி இழுத்துப் போட்டுக்கொள்ளும். கனிந்த மடியில் பால் சுரப்பது போல, எந்த நிலத்தையும் கூறுபோட்டு கல் நடமுடியாது. வண்ணக் கொடிகள் நடமுடியாது. விவசாயம் செய்வதில்லை என விட்டிருந்த நிலத்தை கூலிவேலைக்குச் சென்று வந்த எவரேனும், குத்தகைக்கு உழுது விவசாயம் செய்வார்கள்.
எந்த ஒரு விவசாயியும் வியாபாரிகளுக்கோ, சமூகத்திற்கு அவ்வளவு எளிதில் அஞ்சி தன் முதுகெலும்பை உடைத்துக் கொள்வதில்லை. சூழலும் இயற்கையும் சேர்ந்து சதி செய்யும்போது சூழும் புழுக்கத்தில் தடுமாறிப் போகிறான், கூடவே தடம் மாறியும்.
என்னதான் செய்வான் அவனும், என்னைப்போல, உங்களைப்போல எல்லா ஆசாபாசங்கள் கொண்ட, ரத்தமும் சதையுமான மனிதன்தானே!
ஈரோடு கதிர் - தொடர்புக்கு kathir7@gmail.com
கட்டுரையாளரின் வலைப்பதிவுத் தளம் >http://www.maaruthal.blogspot.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT