Last Updated : 28 Feb, 2014 04:02 PM

 

Published : 28 Feb 2014 04:02 PM
Last Updated : 28 Feb 2014 04:02 PM

உமா மகேஸ்வரிகளை தெரியுமா உங்களுக்கு?- ஐ.டி. இளைஞனின் கடிதம்

'யார் இவர்களை இரவு வரை வேலை பார்க்கச் சொன்னது?'

'காலையில் கிளம்பி நள்ளிரவுதான் வீட்டிற்கு திரும்புகிறாள்... அப்படி என்ன வேலையோ?!

'ஒழுங்கா கல்யாணம் பண்ணிட்டு வீட்டுல உட்கார வேண்டியதுதானே!'

'இவங்க போடற டிரெஸ்ஸை பார்த்தாலே, இவங்க எப்படிப்பட்டவங்கன்னு தெரியது?'

உமா மகேஸ்வரியின் மரணம் தொடர்பான செய்திகள் வெளிவரத் தொடங்கியதும், சமூக வலைத்தளங்களில் ஒரு தரப்பினர் உதிர்த்த கருத்து முத்துகள் இவை.

ஐ.டி. பெண்களைப் பற்றியும், அவர்களது வாழ்க்கை முறையைப் பற்றியும் மேலோட்டமாகக் கூட சரிவரத் தெரிந்துகொள்ளாத இவர்கள், ஏதாவது இப்படி கிளப்பி விடுவது வழக்கமாகிவிட்டது.

எந்தக் குடும்பச் சூழலில் பெண்கள் வேலைக்குப் போகிறார்கள் என்பது இந்த அறிவுஜீவிகளுக்குத் தெரியுமா? 'என் குடும்பத்தின் நிலையை மாற்ற வேண்டும், நான் சுதந்திரமாக நடைபோட வேண்டும்' என்று எண்ணம் கொண்ட பெண்கள் ஒவ்வொரு நாளும் அக்னி பரீட்சையைதான் சந்திக்கின்றனர்.

நைட்டு வரைக்கும் அப்படி என்ன வேலை செய்கிறார்கள்? என்று கேட்கும் அன்பர்கள் சிலருக்கு, நம் இரவு நேரம்தான் அமெரிக்கா முதலான பல நாடுகளின் வர்த்தக நேரம் என்பது தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஐ.டி.யில் தொழில் சேவை சார்ந்த நிறுவனங்கள் (Service based companies) பலவும் இப்படி இங்கு இரவு நேரத்தில் ஆந்தை போல் விழித்து வேலை பார்த்துக் கொண்டிருக்கிறது. காரணம் இவர்கள் செய்வது கஸ்டமர் சர்வீஸ். வெளியூரிலுள்ள பலரிடமும் பேச வேண்டியிருக்கும், நாம் வேலையை செய்து முடித்து விட்டு இரவு எட்டு, எட்டரை மணி அளவில் கிளம்பப் பார்த்தாலும் அவர்கள் கூறும் குறைபாடுகளை தீர்த்து வைத்த பிறகே கிளம்ப முடியும்.

அதிலும் பி.பி.ஓ. இருக்கிறதே - பொதுவாக கால் சென்டர் என்று சொல்லப்படுவது - இதில் வேலை பார்ப்பவர்களின் பொழுது குறைந்த பட்சமாக இரவு ஏழு மணி அளவில்தான் தொடங்குகிறது. அடுத்த நாள் அதிகாலை சுமார் மூன்று நான்கு மணி வரை வேலை நேரம் செல்கிறது. திரைப்படத்தில் காட்டுவது போல் சும்மா ஜாலியாக கும்மாளம் அடிப்பது, ஒகே DUDE, சூப்பர் buddy என்று பீட்டர் விடுவது போல் எல்லாம் இந்த மாதிரி கம்பெனிகளில் கிடையாது.

ஒவ்வொரு நாளும் எப்போது நிறுவனத்தை விட்டு கிளம்புவோம் என்று இங்கு யாருக்கும் தெரியாது. எப்போ என்ன வெடி வெடிக்குமோ என்ற பயம் தான் ஒவ்வொரு நாளும் இங்கு ஆள்கின்றது.

நிறுவனத்தை விட்டு வெளியே செல்லும்போது, ஒவ்வொரு மனிதரும் பல மன உளைச்சல்களை சுமந்துதான் வெளிவருகின்றனர். இதில் பெண்கள் பெறும் மன உளைச்சல் இருக்கிறதே மோசம். இரவு ஒன்பது, பத்து, பதினொன்று, பனிரெண்டு மணி, மூன்றுமணி இப்படி பல வேளைகளில் வீட்டிற்கு செல்ல வேண்டிய சூழல் இவர்களுக்கு நிகழ்கின்றது.

தர்மபுரி, ஈரோடு, சேலம், மதுரை, ஜார்கண்ட், ராஜஸ்தான், கோவை, தேனீ, கொச்சின், நெல்லூர், குண்டூர் இப்படி பல ஊர்களிருந்து பல மாநிலங்களிருந்து பெண்கள் நம்மூரில் வந்து வேலைப் பார்க்கின்றனர். பொருளாதார ரீதியாக இப்பெண்களால் இவர்கள் குடும்பத்தின் வாழ்வாதாரம் மாற்றப்பட்டிருக்கிறது, மாறிக்கொண்டிருக்கிறது. ஆனால் இவர்களும் இவர்கள் குடும்பங்களும் சந்திக்கின்ற வேதனைகள் இருக்கிறதே, அது ஏராளம்.

வேறு ஊரில் வசிக்கும் அப்பாக்கள் தன் மகள் 'ஹாஸ்டலுக்கு வந்துட்டேன்ப்பா' என்ற செய்தி கேட்ட பிறகே உறங்குகிறார்கள், தெருமுனையில் இரவு மூன்று மணிக்கு தன் தங்கைக்காக காத்திருக்கும் அண்ணன்களுக்கும், வீட்டில் சாப்பாட்டை வைத்து கண் விழித்துக் காத்திருக்கும் அம்மாக்களுக்கும் எத்தனை பேர் தெரியுமா? அந்த இரவு நேரத்தில் தன் வீட்டுப் பெண் வீடு திரும்பவில்லை, இனி அவள் வரவே மாட்டாள் என்ற செய்தி வந்தால் இவர்களின் நிலையை கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். இன்னும் பல அம்மாக்கள் தன் பிள்ளையை வீட்டில் உறங்க வைத்து, ஏதோ ஒரு பொழுதில் வீட்டிற்கு சென்று தன் குழந்தைக்குத் தரும் முத்தத்தில் தான் உயிர் வாழ்கிறாள். வேலைக்கு சென்ற அம்மா வீட்டிற்கு திரும்ப மாட்டாள் எனும் செய்தியை அக்குழந்தைக்கு எப்படி கூறப்போகீறீர்கள்?

இரவில் தனிச் சாலையில் ஒரு பெண் நடந்து சென்றாலே அவள் ஒரு போகப்பொருளாகவே பலநேரங்களில் பார்க்கப்படுகிறாள். இன்னும் எத்தனை தூரத்திற்கு நம்மால் பாதுகாப்பு தர முடியும். ஒவ்வொரு பெண்ணும் வீட்டுக்கு செல்லும் வரை அவர் பின்னால் ஒரு காவலாளியை அனுப்ப முடியுமா? ஒவ்வொரு சந்திலும் சீ.சி.டி.வீ கேமராவை இணைக்க முடியுமா? இன்னும் எத்தனை நாட்களுக்கு தான் ஒரு தவறும் செய்யாத பெண்ணை குறை கூறப் போகிறோம்? எப்போது திருந்தப் போகிறோம்? இன்னும் பெண்ணுக்கு எதிராக நடக்கும் இழிபாடுகளுக்கு பெண்களின் ஆடையும், பெண்களின் நடத்தையை மட்டும் குறைகூறுபவர்களே வெட்கமாக இல்லை உங்களுக்கு!

ஒரு பெண் தனியே நடக்கையில் அவள் ஒரு உயிர், வெறும் ஒரு பண்டம் அல்ல என்ற உண்மை ஒவ்வொரு மனிதனுக்கும் உரைக்க வேண்டும். ஒரு பெண் தனியே நடந்த செல்கையில் இவள் என் நாட்டு பொக்கிஷம். இவளுக்கு யார் தீங்கு செய்தாலும், சிதைக்க முயன்றாலும் நான் விட மாட்டேன் என்ற எண்ணம் ஒவ்வொரு ஆண்மகனுக்கும் வர வேண்டும். என் பெண் காணவில்லை என்ற பதறி வரும் அப்பாவிடம் எங்கேயாவது ஓடி இருப்பாள் என்று கூறும் வாய்களை முதலில் சிறையில் அடைக்க வேண்டும்.

பெண்ணைப் பெற்றவருக்கு நெஞ்சு ஒவ்வொரு நாளும் பக் பக் என்று அடிக்கின்றது, வீட்டிலிருந்து வெளியே சென்ற பெண் பத்திரமாக திரும்பி வர வேண்டும் என்று. உங்களின் சதைப் பசிக்கும், வன்மத்திற்கும் அனாவசியமாக ஒரு குடும்பத்தை இரையாக்காதீர்கள்!

அர்த்த ஜாமத்திலே ஒரு பெண் தனியே நடந்து சென்றால், அவள் உங்கள் வீட்டுப் பெண் என்று, உங்கள் தங்கையென்று, உங்கள் சிநேகிதி என்று நினைத்துக் கொள்ளுங்கள். மனிதம் அத்து மீறப்படும்பொழுது அதைக் காக்க வேண்டுவது ஒவ்வொருவரின் கடமை. ஆண்மை தவறேல்!

எங்காவது ;இந்தப் பொண்ணுங்களே இப்படித்தான்' என்று பேசும்பொழுது உங்கள் வீட்டுப் பெண்ணையும் கொஞ்சம் மனதில் வைத்துப் பேசுங்கள்!

உங்களுக்கு இன்னொரு விஷயம் தெரியுமா?

ஐ.டி. நிறுவனங்களின் பணியாற்றும் பெரும்பாலான பெண்கள், பொருளாதார ரீதியில் வசதியான குடும்பங்களைப் பின்னணியாகக் கொண்டவர்கள் அல்ல... கீழ், நடுத்தர நிலையில் உள்ள தங்கள் குடும்பங்களை மேம்படுத்த அர்ப்பணிப்புடன் செயலாற்றும் உமா மகேஸ்வரிகள் அவர்கள்.

ஹரி, ஐ.டி. நிறுவன ஊழியர் - தொடர்புக்கு nanaprabhu5591@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x