Published : 27 Apr 2017 10:02 AM
Last Updated : 27 Apr 2017 10:02 AM
தேவராஜ். இந்தப் பேரைதான் வீட்டுல எனக்கு முதலில் வைக்க நினைச்சிருக்காங்க. அப்புறம் அம்மா அப்பாவே, ‘குடும்பத்தில் எல்லா ருக்கும் ராஜ் ராஜ்னு இருக்கே, அதனால அது வேணாம்’னு முடிவு செஞ்சு, பிரபுதேவான்னு வெச்சிருக்காங்க. அப்படித்தான் நான் பிரபுதேவாஆனேன்! இந்த தேவராஜ் விஷயமே பதிமூணு, பதினாலு வயசுலதான் எனக்குத் தெரிஞ்சுது.
பிரபுதேவாங்கிற பேர்ல இது வரைக்கும் வேற யாரையும் நான் கேள்விப்பட்டதே இல்லை. இப்பவும் மும்பையில், ‘‘நிஜமாவே உங்க பேர் பிரபுதேவாதானா?’’ன்னு சிரிச்சிட்டே கேட்பாங்க. ‘‘ஏன், இந்தப் பேருக்கு என்ன? ’’ன்னு நானும் திருப்பிக் கேட்பேன். ‘‘அப்படியில்லை. பிரபுன்னாலும் கடவுள்; தேவான்னாலும் கடவுள். அது எப்படி ‘கடவுள்… கடவுள்’னு ஒருத்தருக்கே ரெண்டு பேர் வெச்சிருப்பாங்க!’’ன்னு அவங்களுக்கெல்லாம் ஆச்சரியம்! எப்படியோ கடவுள் கிஃப்டால இயல் பாவே சிம்புளா, தனித்துவமா என் பேர் அமைந்தது. அந்தப் பேரே ஒருகட்டத் தில் பிரபலமும் ஆச்சு.
என்னோட அம்மா பெயர்கூட மகாதேவம்மா. ‘என் பேர்ல தேவா இருக்கு. தேவாவோட அம்மாதான் மகாதேவம்மான்னு’ நானே நினைச்சு சந்தோஷப்பட்டுப்பேன். என் பசங்களில் பெரியவன் ரிஷி ராக்வேந்தர் தேவா, சின்னவன் ஆதித் தேவா. பசங்களுக்கு இப்படி பேரு வெச்சதோடு சரி. ஒரு நாள்கூட ரிஷி, ஆதித்னு அவங்களை இந்தப் பேரு சொல்லிக் கூப்பிட்டதே இல்லை.
பெரியவனை ‘கிச்சு’ன்னும்,சின்ன வனை ‘சின்னு’ன்னும்தான் கூப்பிடு வேன். குட்டியா, சின்னதா இருக்கிற தால சின்னு. சின்னுன்னா தங்கம்னு ஒரு அர்த்தம் இருக்கு. பெரியவனை ‘கிச்சு’ன்னு கூப்பிடவும் ஒரு காரணம் இருக்கு. அவன் குழந்தையா இருந்தப்ப, அவனோடு சேர்ந்து விளையாட வந்த பக்கத்து வீட்டு பையன், இவனிடம் ‘‘அண்ணா கிச்சு… அண்ணா கிச்சு’’ன்னு தன்னோட கன்னத்தைக் காட்டி கேட்டான். நான் புரியாமப் பார்த்தேன். ‘கிஸ் கொடு’ன்னு மழலைப் பேச்சில் ‘கிச்சு.. கிச்சு’ன்னு சொல்றான்னு அப்புறம்தான் புரிஞ்சுது. இப்படி ‘கிச்சு’ன்னு சொல்றதுகூட ரொம்ப நல்லா இருக்கேன்னு ‘கிச்சு’ன்னே கூப்பிட ஆரம்பிச்சிட்டோம்.
இப்போ கிச்சுவுக்கு வயசு 13. சார் எட்டுலேர்ந்து ஒன்பதாம் கிளாஸுக்குப் போறாரு. நான் ஒன்பதாம் கிளாஸ் படிக்கிறப்பதான் ‘அக்னி நட்சத்திரம்’ படத்தில் ‘ராஜா... ராஜாதி ராஜா’ பாட்டுக்கு டான்ஸ் ஆடினேன். கிச்சுவுக்கு சின்னதா மீசை வளர ஆரம்பிச்சிட்டுது. ‘‘கிச்சு, மீசையை அப்பாகிட்டே காட்டு பார்க்கலாம்’’ன்னு சொல்வேன். அதை போட்டோ கூட எடுத்து வெச்சிருக்கேன். சின்னப் பையனிடமும் முகத்தை காட்டச் சொல்லி கேட்பேன். அதுக்கு அவன், ‘‘அப்ப்ப்ப்ப்பா… எனக்கு இன்னும் வரலை. நான் குட்டி பேபி’’ன்னு சொல்லி கோச்சிக்கிட்டு தலையைக் குனிஞ்சிப்பான்.
பெரிய பையன் டீன் ஏஜுக்குள்ளே போனது எனக்கு ரொம்பப் புதுசா இருக்கு. எந்த விஷயமா இருந்தாலும் பொறுப்பா நடந்துப்பான். அவனோட இந்த வயசுல நான் பயங்கர உயரமா இருந்தேன். ஆறடிக்குக் கொஞ்சம் கம்மியா இருப்பேன்.‘அக்னி நட்சத் திரம்’ பாட்டை பார்த்தாக்கூட உங்க ளுக்கு அது தெரியும். ‘என்னடா இது? 13 வயசுலேயே இவ்வளவு உயரமா இருக்கோமே’ன்னு எனக்கு கொஞ்சம் பயமாவும் இருந்திச்சு. ஏன்னா, ‘18 வயசு வரைக்கும் வளருவாங்கன்னு சொல்வாங்களே… கார்ல ஏறுறப்ப தலை இடிக்குமோ? நம்ம உயரத் துக்கு பேண்ட் கிடைக்குமா? நம்ம கால் அளவுக்கு ஷூவெல்லாம் கிடைக் குமா?’ன்னு சந்தேகமெல்லாம் எனக்கு இருந்துச்சு.
ஆனா, அந்த உயரம் எனக்கு சினிமா வில் நல்ல ஹெல்ப்பா இருந்துச்சு. என் பேர் எப்படி எனக்கு பலமா இருந்ததோ, அதே மாதிரி என் உயரமும் என் கேரிய ருக்கு பலமா இருக்கு. இந்த வாரம் நான் எழுதுறதுதான், என்னோட ‘முழுமையான சுயசரிதை’ன்னு நினைக்கிறேன். ஏன்னா, என்னோட பேர், உயரம்னு எல்லாத் தையும் எழுதிட்டிருக்கேனே!
இங்கே பேர் பத்தி சொல்றப்ப இன்னொரு விஷயமும் தோணுது. சில பேரை பார்க்கிறப்ப, இந்த முகத்துக்கு இந்தப் பேருதான் பொருத்தமா இருக்கும்னு தோணும். அவங்களுக்கு அந்தப் பேர் வெச்சதுதான் சரின்னும் தோணும். ஒரு படத்துக்கு டைட்டில் கார்டு மாதிரிதான், ஒருத்தருக்கு பேரும் ரொம்ப முக்கியமானது.
உதாரணத்துக்கு அபிதாப் பச்சன், சச்சின் டெண்டுல்கர், எம்.ஜி.ஆர், மைக்கேல் ஜாக்சன்னு இவங்களோட பேருங்களெல்லாம், இப்படியில்லாம வேற பேர்களா இருந்திருந்தா? யோசிச்சுக்கூட பார்க்க முடியலையே! ‘ஆள் பாதி ஆடை பாதி’ன்னு சொல்ற மாதிரி பெயரும் முக்கியம்தான்.
பெரியவங்க பல பேர் சின்னப் பசங் களிடம் பேசுறப்ப, ‘‘நல்ல பிள்ளையா வளர்ந்து, நல்ல பேரு எடுக்கணும்!’’னு சொல்வாங்க. அந்த மாதிரி சின்ன வயசிலேயே டான்ஸ் மாஸ்டராகி நிறைய தெலுங்குப் படங்கள்ல வேலை பார்த்த நேரம். அங்கே நல்ல பேர் எடுக் கணும்னு ஆசையோட உழைச்ச காலம் அது. அதே மாதிரி, அந்த நேரத்தில் நான் கொரியோகிராஃப் செஞ்ச ஒவ்வொரு பாட்டும் பயங்கர ஹிட் ஆகும்.
ஒவ்வொரு வருஷமும் அங்கே ஸ்டேட் விருது அறிவிக்கிறப்ப, நம்ம பாட்டுங்கதான் சூப்பர் ஹிட் ஆயிடுச்சே. நமக்குத்தான் இந்த வருஷம் அவார்டுன்னு நினைச்சிட்டிருப்பேன். ஆனா, இருக்காது. இப்போ வரைக்கும் நான் பெருசா ஸ்டேட் விருதுங்க வாங்கினதே இல்லை. இரண்டு முறை நேஷனல் அவார்டு வாங்கியதோடு சரி. ‘நம்ம கொரியோகிராஃப் செஞ்சப் பாட்டுங்களெல்லாம் ஹிட் ஆகுது. ஆனா, விருதுங்க வர்றதே இல்லையே?’னு ஆரம்பத்தில் கொஞ்ச நாட்கள் எனக்கு தோணியது. சின்ன வயசுங்கிறதால அப்போ அப்படி தோணியிருக்கலாம். இப்போ அப்படியில்லை. கொஞ்சம் மாறிட்டேன்னு தோணுது. மக்களுக்குப் பிடிச்ச மாதிரி செய்றோம். அது போதும்னு மனப்பக்குவம் வந்துடுச் சுன்னு நினைக்கிறேன்.
ஒரு நிகழ்ச்சிக்கு போறப்ப, அங்கே முதல் வரிசையில் உட்கார்றதுக்கு எனக்கு ஒரு மாதிரியாவே இருக்கும். அது ஏன்?
- இன்னும் சொல்வேன்…
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT