Published : 25 Jun 2017 11:29 AM
Last Updated : 25 Jun 2017 11:29 AM
செடி கொடி சித்தர் ஜெகதீஷ் சந்திரபோஸ் என்று அறுபதுகளில் ஏழாம் வகுப்பிலோ, எட்டாம் வகுப்பிலோ ஒரு பாடம். செடி கொடிகளுக்கு உயிர் மட்டுமல்ல; மனிதர்களைப் போன்றே மகிழ்ச்சி, வருத்தம், எரிச்சல் போன்ற உணர்வுகளும் உண்டு என்பதை ‘க்ரெஸ்கோகிராப்’ என்ற நுண்ணுணர்வுப் பெருக்கிக் கருவி மூலம் நிரூபித்தார் ஜெகதீஷ் சந்திரபோஸ். அவர் மீதான என் ஆர்வத்தைப் புரிந்துகொண்ட அப்பா ஒரு விடுமுறை நாளில் பட்டுக்கோட்டை போகிற வழியில் இருந்த ஒரு குக்கிராமத்துக்கு அழைத்துப் போனார்.
பேருந்து எங்களை ஒரு வனாந்தரப் பகுதியில் இறக்கிவிட்டுச் சென்றது. நல்ல வெயில் வேளையில் ஒரு புழுதிச் சாலையில் நடந்தோம். சற்றுத் தொலைவில் ஒரு தோப்பு, தோப்பின் நடுவில் குடிசை. அதைச் சுற்றி காடாக மண்டிய செடிகள். வேலிப் படலைத் தள்ளிக்கொண்டு உள்ளே நுழைந்தோம். தரையில் ஊன்றிய கம்பில் கட்டிய அட்டையின் வாசகம் எங்களை வரவேற்றது.
“உங்களை வரவேற்பது சித்ராங்கிச் செடியாகிய நான்! என் பூக்களைப் பறிக்காதீர்! பறித்தால் தண்டிக்கப்படுவீர்கள்!”
அப்பா சிரித்துக்கொண்டே முன்னால் போனார். நான் அப்பாவுக்குத் தெரியாமல் ஒரு பூவை வெடுக்கென்று பறித்தேன். திரும்பியதும் சட்டென்று என் சட்டைக் காலரைப் பிடித்து யாரோ இழுத்தார்கள். அந்தச் செடியின் சுருண்ட நுனி நீண்டு தன் கூரிய முட்களால் என் கழுத்தைப் பிராண்டிவிட்டது. நான் உதறிவிட்டு ஓடினேன்.
ஒவ்வொரு செடியின் அருகிலும் அந்தச் செடி பற்றிய வினோதமான குறிப்பு அட்டைகள். அட்டையின் வாசகங்களில் செடி கொடிகளை அவன் இவன் என்றே குறிப்பிட்டிருந்தது. ஒரு செடியிடம் சென்றோம். மருதாணிச் செடி மாதிரி இருந்தது. ஒல்லியாக என் உயரத்துக்கு இருந்தது. அட்டை சொன்னது: இவள் பெயர் தில்லானா. அடிக்கடி தண்ணீர் வேண்டும் இவளுக்கு. திண்ணையில் இருக்கும் மண் பானையிலிருந்து தண்ணீா் கொடுங்கள், நடப்பதைப் பாருங்கள்! நான் ஓடிப்போய் தண்ணீர் எடுத்துவந்து ஊற்றினேன். ஆடு பாம்பே பாட்டுக்கு உடம்பை வளைத்து ஆடுகிற தினுசில் ஆட ஆரம்பித்தது அந்தச் செடி. பிறகு அசையாமல் நின்றது.
மற்றொரு செடி அருகே ஒரு வாசகம். இந்தச் செடி நல்ல மனிதர் அருகில் வந்தால் நறுமணம் வீசும். கெட்டவர் வந்தால் நாற்றம் அடிக்கும். அப்பாவும் நானும் அதை நெருங்கினோம் நறுமணம் வீசியது.
“என்ன... தோட்டம் எப்படி இருக்கு? பயமுறுத்துதா?” என்று கேட்டபடி வந்தார் ஏட்டு ராஜகோபால்.
“தோட்டமா இது? எல்லாம் உயிருள்ள ஜீவராசிகள் மாதிரியில்ல இருக்கு!”
“வாத்யாரய்யா! நகர்ந்து செல்லும் செடியும் இருக்கு. இதப் பாருங்க... இங்கே இருக்கிற இந்தச் செடி சாயங்காலம் வாசல் பக்கம் போயிடும்” உருண்டையாக சின்ன டென்னிஸ் பந்து அளவில் பழுப்பு நிற முடிக்கற்றையால் சுற்றியது போல் கிடந்தது.
“இது நகர்றத நீங்க பாக்க முடியாது. பாத்தா நின்னுடும்!
“நாம பார்க்கறத செடி எப்படிப் பாக்கும்?”
“நம்மள மாதிரி கண்ணு இல்லேன்னா பாக்க முடியாதா? மொதல்ல சயின்ஸ் பாடத்தை எல்லாம் மாத்தி எழுதணும். ஒவ்வொரு செடியும் நம்மள உத்துப் பாக்குது. வாத்யாரய்யா... எல்லாத்துக்கும் ஒரு பேரை வெச்சி அதுக்கு இதுதான் குணம்னு உங்க சயின்ஸ் சொல்லுது. நீங்க வெச்ச பேருக்கும் கற்பிச்சு விட்ட குணத்துக்கும் கட்டுப்படாம எவ்வளவோ நடக்குது” என்றார்.
“சத்தம் கொடுக்குற செடி பாக்கிறீங்களா?” அழைத்துப்போனார். அடர்ந்த பசிய இலைகள் காற்றிலாட அழகாக இருந்தது. அந்தச் செடி, அதிலிருந்து சில்வண்டின் ரீங்காரம் போல் சத்தம்.
“இது சில்வண்டு சத்தம் சார்” என்றார் அப்பா எரிச்சலுடன். ராஜகோபால் அந்தச் செடியைத் தொட்டார். சத்தம் நின்றுவிட்டது.
‘”திகைப்பூண்டு என்று சொல்கிறார்களே அப்படி ஒண்ணு இருக்கா சார்?” அப்பா கேட்டார். “நம்ம தோட்டத்துலயே இருக்கு. மிதிச்சா நம்மை மறந்து சூரியன் மறையும் வரை சுத்திகிட்டே அலைய வெச்சுடும். அது மாந்திரீகச் செடி. இன்னிக்குப் பார்க்கக் கூடாது”.
பேசிக்கொண்டே நடந்தபோது செடியின் நுனியில் செண்டு மாதிரி இருந்த ஒரு பூ மொக்கைப் பறித்தார். அதை விரித்தார். உள்ளே ஏதோ நெளிந்தது. பருந்து வடிவில் சிறு வண்டு போல் ஒன்று எழுந்து சிறகை விரித்துப் பறந்தது.
“பேசாமல் வீட்டுக்கு வெளியேயும் ஒரு அட்டை எழுதி வச்சிடுங்க. என்றார் அப்பா.
“என்ன எழுதணும்?”
“செடிகள் ஜாக்கிரதை!”
இருட்டிவிட்டது.
மெயின் ரோடுக்குப் போகிற வழியில் கும்மிருட்டு. இப்போது ராஜகோபால் கையில் ஒரு கத்தைப் புல். “இதுதான் ஜோதிப் புல்”
முதலில் சாம்பல் நிறமாக இருந்து, பிறகு தீப்பந்தம்போல் வெளிச்சம் வீசியது. பேருந்து வரும்வரை இருந்து ஏற்றிவிட்டுப் போனார் - செடிகளின் சிநேகிதர்!
- தஞ்சாவூர்க் கவிராயர், தொடர்புக்கு: thanjavurkavirayar@gmail.com
ஓவியம்: வெ.சந்திரமோகன்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT