Published : 23 Sep 2013 04:07 PM
Last Updated : 23 Sep 2013 04:07 PM
ஒரு கணவனுக்காகப் பெண்கள் இருவர் சண்டையிட்டுக்கொள்கிறார்கள். அந்தச் சாமானியனிடம் பண்பாட்டைப் பிரஸ்தாபித்துக் கொண்டிருக்கிறார் நிகழ்ச்சித் தொகுப்பாளர். அடுத்த சேனலைத் திருப்பினால் ஓய்வுபெற்ற நடிகை ஒருவர், தகாத உறவிலிருப்பதாகச் சொல்லப்படும் பெண்ணொருத்தியிடம் பெண்களுக்கான இலக்கணங்கள் குறித்து விவரிக்கிறார். மற்றொரு சேனலில், பிரம்மாண்டமான குரல் தேர்வில் தோற்றுப்போனதற்காக ஒரு சின்னக் குழந்தை அழுதுகொண்டிருக்கிறாள். இடையிடையே விளம்பரங்கள். நுகர்வோர் கலாச்சாரத்தின் ஒரு துண்டு இது.
நீங்கள் பார்ப்பது ஒரு பெண்ணின் அழுகையாக இருக்கலாம்; சாக்லேட் மழையில் நனையும் ஒரு குழந்தையாக இருக்கலாம்; நிகழ்ச்சித் தொகுப்பாளருக்கு எதிரிலேயே மனைவியை அடிக்க ஓடும் கணவனாக இருக்கலாம்... எதுவுமே இயல்பான உண்மை அல்ல என்பதுதான் உண்மை. நாடகத்தனமான - அதீத உணர்ச்சிகள் கொப்பளிக்கும் சம்பவங்களையும் அப்படியான சம்பவங்களைப் பலருக்கு முன் அரங்கேற்றத் தயாராக இருக்கும் நபர்களையும்தான் தேடி ஓடிக்கொண்டிருக்கின்றன இன்றைய தொலைக்காட்சிகள்.
தனியார் தொலைக்காட்சிகளின் தொழில் போட்டியில் இன்றைக்கு முக்கிய இடத்தில் இருப்பது குழந்தைகளுக்கான வாய்ப்பாட்டுப் போட்டி. இதற்குத் தேர்வுசெய்யப்படும் குழந்தைகள் எப்படித் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் தெரியுமா? “இறுதிச் சுற்றுக்கு முன்னேறுபவர்களில் ஒருவருக்காவது உருக்கமான பின்னணி இருக்க வேண்டியது அவசியம் என்னும் அடிப்படையில்தான் தேடலே தொடங்கும்” என்கிறார் தனியார் தொலைக்காட்சித் தேர்வுக் குழுவில் இருக்கும் நண்பர் ஒருவர்.
ஆரம்பமே இப்படி என்றால், முடிவு எப்படி இருக்கும்? எல்லாமே நாடகம். இந்த நாடகத்தின் சில காட்சிகள் பங்கேற்பாளர்களுக்குத் தெரிந்து நடக்கும்; பல காட்சிகள் அவர்களுக்குத் தெரியாமலே நடக்கும்.
வெற்றிபெறும் குழந்தைகளுக்குக் கணிசமான பணம் கிடைக்கிறது; விளம்பரம் கிடைக்கிறது; சினிமா வாய்ப்பு கிடைக்கிறது... இப்படி எல்லாம் உருவாக்கப்படும் பிம்பங்களை நம்பி வீட்டுக்கு வீடு குழந்தைகளை வாய்ப்பாட்டுக்கு அனுப்பும் பெற்றோர்களை இப்போது வீதிகள்தோறும் பார்க்க முடிகிறது. ஆனால், பல நூறு குழந்தைகளின் அழுகைக்கு நடுவிலிருந்து அவர்களின் வியாபாரத்துக்கு ஏற்ற பின்னணியுள்ள குழந்தைகள்தான் தொலைக்காட்சி நிறுவனங்களின் படியேறுகிறார்கள் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?
“இந்தியாவில் மக்களுடைய எண்ணங்களைத் தீர்மானிப்பதில் தொலைக்காட்சிகளுக்கு முக்கியமான பங்கு இருக்கிறது” என்கிறது ‘இடல்மேன் மக்கள் தொடர்பு நிறுவனம்’ மேற்கொண்ட ஆய்வின் முடிவு. தொலைக்காட்சிகள் நம்மிடம் எத்தகைய எண்ணங்களை வடிவமைத்துக்கொண்டிருக்கின்றன என்பதற்கு, அவற்றின் அடிப்படையில் உருவாகிவரும் பாவனைகளே சாட்சி!
மண்குதிரை - தொடர்புக்கு: mankuthirai@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT