Published : 25 Feb 2017 10:17 AM
Last Updated : 25 Feb 2017 10:17 AM

போபஸ் லெவினி 10

அமெரிக்க உயிரி வேதியியல் அறிஞர்

அமெரிக்காவைச் சேர்ந்த லிதுவேனிய உயிரி வேதியியலாளர் போபஸ் லெவினி (Phoebus Levene) பிறந்த தினம் இன்று (பிப்ரவரி 25). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

* லிதுவேனியாவின் சகர் பகுதியில் யூதக் குடும்பத்தில் (1869) பிறந்தார். தந்தை ஆடை தயாரிப்பு நிறுவனங்கள் நடத்திவந்தார். குடும்பம் விரைவில் செயின்ட் பீட்டர்ஸ்பர்கில் குடியேறியது. அங்கு பள்ளிப்படிப்பை முடித்தார். இம்பீரியல் மிலிட்டரி மருத்துவ அகாடமியில் மருத்துவம் பயின்றார்.

* மாணவப் பருவத்தின்போது, கரிம வேதியியல் பேராசிரியரின் ஆய்வுக்கூடத்தில் அவருக்கு உதவும் வாய்ப்பு கிடைத்ததால் உயிரி வேதியியலில் ஆர்வம் பிறந்தது. அப்போது, ரஷ்யாவில் யூத எதிர்ப்பு அதிகரித்ததாலும், பல இடங்களில் இனப்படுகொலை நடந்ததாலும், இவரது குடும்பத்தினரும் அங்கிருந்து வெளியேறி அமெரிக்காவில் குடியேறினர்.

* பிறகு, மருத்துவப் படிப்பை முடிப்பதற்காக ரஷ்யா சென்றவர், பட்டம் பெற்றதும் மீண்டும் அமெரிக்கா திரும்பினார். நியூயார்க் நகரில் மருத்துவராக வாழ்க்கையைத் தொடங்கினார். ஓய்வுநேரத்தில், உயிரி வேதியியல் ஆராய்ச்சிகளை மேற்கொள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். சர்க்கரைகளின் வேதியியல் கட்டமைப்பு குறித்து ஆராய்ந்து கட்டுரைகள் வெளியிட்டார்.

* நியூயார்க் மாநில மருத்துவமனையின் நோயியல் அமைப்பில் இணை ஆய்வாளராக நியமனம் பெற்றார். காசநோயால் பாதிக்கப்பட்டதால் பணியைத் தொடர முடியாத நிலை ஏற்பட்டது. ஆனால், இந்தக் காலகட்டத்தில் ஆல்பிரெட் கொஸல், எமில் ஃபிஷர் உள்ளிட்ட உலகப்புகழ் பெற்ற வேதியியலாளர்களுடன் இணைந்து ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார்.

* நன்றாக உடல்நலம் தேறியவர், மருத்துவ ஆராய்ச்சிகளுக்கான ராக்ஃபெல்லர் நிறுவனத்தில் உயிரி வேதியியல் ஆய்வுக்கூடத் தலைவராக 1905-ல் நியமிக்கப்பட்டார். இறுதிவரை அங்கு பணியாற்றினார். நியூக்ளிக் அமிலம் குறித்த தனது பெரும்பாலான ஆய்வுகளை இங்குதான் இவர் மேற்கொண்டார்.

* டிஎன்ஏ-வின் கூறுகள் குறித்து ஆராய்ந்து, அவற்றை அடையாளம் கண்டார். அனைத்து உயிரினங்களிலும் அடிப்படையான வேதிப்பொருளான ரைபோஸை 1909-ல் கண்டறிந்தார். டி.என்ஏ ஆர்என்ஏ இடையிலான வேறுபாடுகளை விளக்கினார். இவைதான் உயிரினத்தை தக்கவைக்கும் முதன்மைக் கூறுகள் என்பதையும் கண்டறிந்தார்.

 நியூக்ளிக் அமிலங்களின் அமைப்பு, செயல்முறை பற்றி ஆய்வு மேற்கொண்டார். டிஎன்ஏ கூறுகளைக் கண்டறிந்ததோடு, இவை அனைத்தும் ஒன்றோடு ஒன்று இணைந்துள்ளதையும் எடுத்துக் கூறினார். இவற்றை ‘நியூக்ளியோடைடு’ என்று குறிப்பிட்டார். இவற்றை தனியே பிரித்தெடுத்தார்.

* டிஎன்ஏ கட்டமைப்பு குறித்த இவரது கூற்று பின்னாளில் தவறு என நிரூபிக்கப்பட்டாலும், டிஎன்ஏவின் கட்டமைப்பு குறித்து தீர்மானிக்க இவரது கூற்றுதான் அடிப்படையாக இருந்தது. நியூக்ளிக் அமிலங்கள் குறித்த ஆராய்ச்சிகளால் புகழ்பெற்றார். உயிரி வேதியியல் கட்டமைப்புகள் குறித்த தனது ஆராய்ச்சிகள் தொடர்பாக 700-க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் எழுதியுள்ளார்.

* அறிவியல் தவிர கலைப்பொருட்களிலும் ஆர்வம் கொண்டிருந்தார். இவரது வீடு முழுவதும் கலைப்பொருட்கள், ஓவியங்கள் நிறைந்திருந்தன. வீட்டிலேயே ஏராளமான நூல்களைச் சேகரித்து வைத்திருந்தார். ரஷ்யன், ஆங்கிலம், ஃபிரெஞ்ச், ஜெர்மன், இத்தாலி, ஸ்பானிய மொழிகளை அறிந்திருந்தார்.

* அனுபவம், அறிவு நிறைந்த இவர் மற்றவர்களை ஊக்குவிக்கும் பண்பாளர். இதனால் சகாக்கள், நண்பர்களால் மிகவும் நேசிக்கப் பட்டார். மாணவர்கள் விரும்பும் ஆசிரியராகப் புகழ்பெற்றார். நியூக்ளிக் அமிலங்கள் குறித்த ஆராய்ச்சிகளின் முன்னோடி எனப் போற்றப்படும் போபஸ் லெவினி 71-வது வயதில் (1940) மறைந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x