Published : 19 Nov 2014 11:47 AM
Last Updated : 19 Nov 2014 11:47 AM
1969… இதேநாள். பிரேசிலின் ரியோடி ஜெனிரோ நகரில் உள்ள மரக்கானா கால்பந்து மைதானம் ரசிகர்களின் உற்சாகக் குரலில் துள்ளுகிறது. சான்டோஸ் அணியைச் சேர்ந்த அந்தக் கருப்பு மனிதரை கேமராக்களும் கண் களும் விடாமல் பின்தொடர்கின்றன. வாஸ் கோடகாமா அணிக்கு எதிரான ஆட்டத்தில் அந்த வரலாற்று அற்புதத்தை நிகழ்த்துகிறார் கால்பந்தாட்டத்தின் கருப்பு முத்து பீலே.
1000-வது கோல்!
பிரேசிலின் ட்ரேஸ் கோரகாஸ் நகரில் 1940-ல் பிறந்தவர் பீலே. இயற்பெயர் எட்சன் ஆரண்டெஸ் டோ நாஸிமெண்டோ. அமெரிக்க அறிவியலாளர் தாமஸ் ஆல்வா எடிசனின் நினைவாக இந்தப் பெயர் வைக்கப்பட்டது. பள்ளி நாட்களில்தான் செல்லப் பெயராக பீலே ஒட்டிக்கொண்டது. உண்மையில், போர்த்துக்கீசிய மொழியில் பீலே என்ற வார்த்தைக்கு எந்த அர்த்தமும் இல்லை. இளம் வயதிலிருந்தே கால்பந்தில் பேரார்வம் காட்டிய பீலே, சாவோ பாவ்லோ நகரில் பாரு கால்பந்து கிளப் ஒன்றில் விளையாடினார். 1956-ல் சான்டோஸ் என்ற கால்பந்து கிளப் பில் சேர்ந்தார். 2 ஆண்டுகள் கழித்து, உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியில் பிரேசிலுக்குத் தலைமை தாங்கினார். உலகக் கோப்பை முதல்முறையாக பிரேசில் வசம் வந்தது. 1962, 1970-ம் ஆண்டுகளில் நடந்த உலகக் கோப்பைப் போட்டிகளிலும் பிரேசில் சாம்பிய னாக, பீலேதான் முதுகெலும்பாக இருந்தார்.
பீலேயின் 1000-வது கோல், பெனால்ட்டி கிக் மூலம் அடிக்கப்பட்டது. இந்தச் சாதனையை ரசிகர்கள் மட்டும் அல்லாமல், வாஸ்கோடகாமா அணி வீரர்களும் கொண்டாடினர்.
1974-ல் கால்பந்து விளையாட்டில் இருந்து ஓய்வு
பெறுவதாக அறிவித்தார். எனினும், அடுத்த ஆண்டே, நியூயார்க் காஸ்மாஸ் அணியில் விளையாட அன்றைய மதிப்பில் ரூ. 5 கோடி பெற்றார். அமெரிக்காவில் கால் பந்து விளையாட்டு வளர்ந்ததற்கு பீலேயின் பங்கு மகத்தானது. 1977 அக்டோபர் 1-ல் அமெரிக்காவின் ஜெயன்ட்ஸ் மைதானத்தில் காஸ்மாஸ் அணிக்கும், பீலே முன்பு விளை யாடிய சான்டோஸ் அணிக்கும் இடையே நடந்த போட்டியுடன் பீலே ஓய்வுபெற்றார். தான் விளையாடிய 1,363 போட்டிகளில் மொத்தம் 1,282 கோல்களை அடித்து அவர் நிகழ்த்திக் காட்டிய சாதனை இன்றும் முறியடிக்கப்படாதது தனி சாதனை!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT