Published : 09 Apr 2017 07:21 AM
Last Updated : 09 Apr 2017 07:21 AM
இங்கிலாந்து நாட்டை சேர்ந்த உலகப் புகழ்பெற்ற புகைப்படக் கலைஞரும், புகைப்படத் துறையில் பல புரட்சிகரமான கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியவருமான எட்வர்டு மைபிரிட்ஜ் (Eadweard Muybridge) பிறந்த தினம் இன்று (ஏப்ரல் 9). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
* லண்டனின் கிங்ஸ்டன் பகுதியில் (1830) பிறந்தார். இயற்பெயர் எட்வர்டு ஜேம்ஸ் மாக்ரிட்ஜ். கல்வி கற்ற பிறகு அமெரிக்காவில் குடியேறி னார். தொடக்கத்தில் ஒரு வெளியீட் டாளரிடம் முகவராகவும், புத்தக விற்பனையாளராகவும் பணியாற்றினார்.
* அப்போது, புகைப்படத் துறையில் இவருக்கு ஈடுபாடு ஏற்பட்டது. அவ்வளவாக தொழில் நுணுக்கங்கள் தெரியாவிட்டாலும்கூட, ஆர்வத்தோடு ஏராளமான புகைப்படங்கள் எடுத்து வெளியிட்டார். விரைவில் புத்திசாலி புகைப்படக் கலைஞர் என்று பெயர் பெற்றார். இவர் ‘ஃபோட்டோ கார்ட்ஸ்’ என்ற பெயரில் வெளியிட்ட புகைப்படங்கள் நல்ல விலைக்கு விற்றன.
* வர்த்தகரீதியாக வெற்றிகரமான புகைப்படக் கலைஞராக மாறினார். வடக்கு கலிபோர்னியா மலைப்பகுதியை ஒட்டியுள்ள யோசெமிட்டி பள்ளத்தாக்கின் அழகை பல்வேறு விதமான கோணங்களில் படம்பிடித்தார். 1868-ல் பிரம்மாண்ட அளவில் வெளியான இந்த புகைப்படங்கள் இவரை உலக அளவில் புகழடைய வைத்தன.
* அதுவரை ஸ்டில் புகைப்படங்கள் எடுத்துவந்தவர், 1872 முதல் மோஷன் புகைப்படங்கள் எடுக்கத் தொடங்கினார். இதற்காக பல கேமராக்களை பயன்படுத்தி பலவிதமான பரிசோதனையில் ஈடுபட்டார். 4 கால்களையும் உயர்த்திய நிலையில் குதிரை பாய்ந்தோடுவதை படம் பிடிக்கும் முயற்சியில் இறங்கினார். இவரது கேமராவில் சில வசதிகள் இல்லாததால் அந்த முயற்சி முதலில் வெற்றிபெறவில்லை.
* யூனியன் பசிபிக் ரயில்ரோடு நிறுவனத்துக்காக பல விளம்பரப் புகைப்படங்களை எடுத்தார். 1877-ல் கலிபோர்னியா சென்றவர், மோஷன் போட்டோகிராபி குறித்த ஆராய்ச்சிகளைத் தொடங்கினார். சிறப்பு ஷட்டர் ஒன்றை வடிவமைத்து, பல்வேறு சோதனைகளில் ஈடுபட்டார்.
* இவர் எடுத்த அனைத்து புகைப்படங்களும் பல இதழ்களில் வெளிவந்தன. தனது பிரத்யேக ஷட்டர் உதவியுடன், 4 கால்களும் அந்தரத்தில் இருக்கும் குதிரையைப் படம்பிடிக்கும் சவாலை நிறைவேற்றினார். இது சில சர்ச்சைகளை ஏற்படுத்தியபோதிலும், இவருக்கு மேலும் புகழைப் பெற்றுத் தந்தது.
* புகைப்படத் துறையில் தொடர்ந்து பல்வேறு ஆய்வுகளை நிகழ்த்தினார். நகரும் அல்லது சலனம் கொள்ளும் படத்தை அறிமுகம் செய்தார். விலங்குகளின் லோகோமோஷன் குறித்து அமெரிக்கா, ஐரோப்பா முழுவதும் விரிவுரை நிகழ்த்தினார். 1883 முதல் 1886-க்குள் தன் கேமராவில் 10,000 இமேஜ்களை பதிவு செய்திருந்தார்.
* பென்சில்வேனியா பல்கலைக்கழக ஆதரவுடன் சலனப்படங்கள் குறித்த முக்கிய ஆய்வுகளை மேற்கொண்டார். இந்த ஆய்வுகள் மனித உருவங்களின் பல்வேறு செயல்பாடுகளை உள்ளடக்கியிருந் தன. இது கலைஞர்களுக்கு மட்டுமல்லாது, விஞ்ஞானிகள், மருத்துவர்களுக்கும் பயனுள்ளதாக அமைந்தது. இந்தப் புகைப் படங்களை உள்ளடக்கிய நூல் ஒன்று 1887-ல் வெளியிடப்பட்டது.
* விலங்குகள், மனிதர்களின் அசைவுகள் குறித்த ஆராய்ச்சிகளையும் மேற்கொண்டார். இதுகுறித்து பல நூல்கள் எழுதினார். அந்தக் காலகட்டத்தில் அசாத்தியமாக கருதப்பட்ட பல அற்புதப் புகைப்படங்களை எடுத்தார். இயற்கை, நிலப்பரப்பு, விலங்குகள், மனிதர்கள் என அனைத்தையும் படமெடுத்தார்.
* சலனப்படங்களின் முன்னோடியாக இருந்து, ஒளிப்படங்களில் பல்வேறு புதுமைகள் புரிந்து, புகைப்படத் துறைக்கு மகத்தான பங்களிப்பை வழங்கிய எட்வர்டு மைபிரிட்ஜ் 74-வது வயதில் (1904) மறைந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT