Published : 14 Oct 2013 05:32 PM
Last Updated : 14 Oct 2013 05:32 PM
பரபரப்பை மட்டுமே தீனியாக எண்ணி உலா வரும் டிவி செய்தி சேனல்கள் மகிழும் வண்ணம் கிலோ கணக்கில் அவல் மூட்டைகளை அவர்களின் வெறும் வாய்கள் மெல்வதற்கு அள்ளி வீசியிருக்கிறது இயற்கை. அதாவது 'பைலின்' புயல். இரண்டு நாட்களாக, அனைத்து செய்தி சேனல்களும், குறிப்பாக ஆங்கிலச் செய்திச் சேனல்களும் 'பைலின்'பால் கொண்ட பற்று அப்பப்பா..!
இயற்கை சீற்றத்தால் இன்னலுற்றுத் தவிக்கும் ஏராளமான மக்களுக்கு இவர்கள் எந்த வித உதவியும் செய்யவில்லை. மாறாக இவர்கள், 'செய்தி சேகரிப்பு' என்ற பெயரில் நடத்தும் அராஜகத்தை பாருங்கள்... ஒரு சேனலில் மெத்தப் படித்த மேதாவி போல் காட்சி தரும் ஒரு செய்தியாளர், மாவட்ட கலெக்டரை பேட்டி எடுக்கிறார். எப்போது? இன்னும் சில மணி நேரங்களில் புயல் தாக்கும் என்ற நிலையில் ஊர் ஊராக சென்று உஷார் செய்ய வேண்டிய அவசரத்தில் கலெக்டர் இருக்கையில். செய்தியாளரின் கேள்விகள் மெய் சிலிர்க்க வைக்கும்.
“இதற்கு முன் புயல் சூழலில் பணியாற்றிய அனுபவம் உண்டா?” என்கிறார். சினிமா பேட்டி எடுக்கும் அனுபவம் பெற்றவர் போலும் அந்த செய்தியாளர். கலெக்டரும் சற்றும் குறைந்தவரல்ல.. ஒரே நாளில் நாடு முழுவதும் தான் தெரிகிறோம் என்று நினைத்திருப்பார் போலும்.. ஒவ்வொரு கேள்விக்கும் பொறுமையாக பதில் சொன்னார். அல்லது, பதில் சொல்லவில்லையென்றால் 'மக்களைப் பற்றிய பொறுப்பற்ற கலெக்டர்' என்று திரி கொளுத்திப் போட்டு விடும் இந்தச் செய்தி சேனல்கள் என்று பயந்து விட்டாரோ?
இதன் உச்சக்கட்டமாக ஒரு அபத்தம் நிகழ்ந்தது. அந்த கலெக்டர் தான் எப்படியெல்லாம் ஊர் மக்களிடம் புயல் பற்றி விளக்கி அவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றம் செய்து வருகிறேன் என்று சொல்ல, பழம் நழுவி பாலில் (பைலின்?) விழுந்தது போல கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டார் சேனல் நிருபர். சற்று தள்ளியிருந்த வீட்டின் முன் இருந்தோரைக் காட்டி, “நீங்கள் அவர்களிடம் விளக்கி வெளியேற்றுங்களேன் நாங்கள் காட்ட வசதியாக இருக்கும் என்று போட்டாரே ஒரு போடு. கலெக்டரும் முகமெல்லாம் பெருமிதம் பொங்க சேனல்காரர்கள் சொன்னதை செவ்வனே செய்தார்.
“எவ்வளவு வேலை இருக்கிறது இப்படி பொறுப்பில்லாமல் என் நேரத்தை விரயம் செய்கிறீர்களே” என்று கலெக்டர் சேனல்களிடம் பாய்வார் என்று நாம் எதிர்பார்த்தால்.. நாம் பழம் பஞ்சாங்கம் ஆகி விடுவோம். இதெல்லாம் 'பரபரப்பு கவரேஜ்.. அவரவருக்கு மைலேஜ்' காலம்! பாவம்.. இன்னும் அவர் போக வேண்டிய கிராமங்களில் இருக்கும் மக்களெல்லாம் இந்த 'டிவி பணி' முடிந்து தங்கள் ஊருக்கு கலெக்டர் வரும் வரை காத்திருக்க வேண்டும். புயல் காத்திருக்குமா என்ன?
இது போதாதென்று, எங்கு செல்வது என்ன செய்வது என்று திகைப்பில் இருந்த சாதாரண மக்களிடம் “புயல் பற்றி தங்கள் கருத்து என்ன?” என்றெல்லாம் கேட்டு செய்தி ஒளிபரப்பில் புதிய பரிமாணத்தையும் அறிவீனத்தின் புதிய கோட்பாட்டையும் ஒருங்கே செய்து புரட்சி படைத்தன செய்திச் சேனல்கள். எந்த சேனலைத் திருப்பினாலும் இதே கதை தான்.
இந்த லட்சணத்தில், ஒரு சேனல் 'முப்பது பேர் கொண்ட குழு அமைத்திருக்கும் முதல் சேனல்' என்று பெருமையுடன் விளம்பரம் வேறு செய்தது. நிவாரணப் பணியில் ஈடுபடுவதற்கோ என்று நாம் நினைத்து விடக் கூடாது. பறந்து பறந்து புயலைக் காட்டவும், அவசர வேலைகள் செய்வோரையும் தடுத்து நிறுத்தி தங்களுக்கு வேண்டியதை 'கறப்பதற்கும்' தான்!
“உபகாரம் செய்யாவிட்டாலும் உபத்திரவம் செய்யாமல் இரு” என்பார்கள் முன்னோர்கள். இதை யார் இவர்களின் படுபயங்கர மூளைக்கு புரிய வைப்பது?
விட்டால் 'பைலின்' புயலை உங்களுக்கு வழங்கியோர் என்று ஸ்பான்ஸர்கள் பேர்களைச் சொன்னால்கூட ஆச்சரியப்படுவதற்கில்லை.
கட்டுரையாளரின் வலைப்பதிவுத் தளம்:>http://kali-kaalam.blogspot.in
*****
| தி இந்து வலைத்தளத்தின் 'வலைஞர் பக்கம்' பகுதிக்காக கட்டுரைகளை அனுப்ப விரும்புவோர் webadmin@kslmedia.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு படைப்புகளை அனுப்பலாம். உங்களின் முழுப் பெயர், தொடர்பு எண், வலைப்பதிவுத் தள முகவரி அவசியம். ஏற்கெனவே வெளியிடப்படாத கட்டுரைகளுக்கே முன்னுரிமை அளிக்கப்படும் |
*****
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT