Published : 29 Nov 2013 08:19 PM
Last Updated : 29 Nov 2013 08:19 PM
மகிழ்ச்சி என்பதன் வரையறை மனதில் இருக்கிறது. பிறந்தநாள் பார்ட்டி என்ற பெயரில் மூன்று வேளையும் வகை வகையாய் உணவு உண்பவர்களை விருந்துக்கு அழைத்து, உணவை பாதிக்குமேல் வீணாக்குவதை விட, ஒரு வேளைக்கு சாப்பிட தேவைப்பட்டவர்களுக்கு அளித்தால் அவர்களுக்கும் மகிழ்ச்சி. நமக்கும் திருப்தி.
என் மகனின் பிறந்தநாளுக்கு உணவை சேர்ந்து உண்ண பெங்களூருவில் இருக்கும் சேவை மையங்களை பற்றி விசாரிக்கும்பொழுது, இந்திராகாந்தி இன்டர்நேஷனல் பள்ளி, ஜக்கூரில் இருப்பதாகவும் அங்கு புலம் பெயர்ந்த தமிழ் அகதிகளின் குழந்தைகள் இருநூறு பேர் படிப்பதாகவும் கேள்விப்பட்டேன்.
உள்ளே நுழையும்போதே நிறைவாக இருந்தது. காரணம், பள்ளி மிகச் சுத்தமாக இருந்தது. ஒழுக்கமான மாணவர்கள். இப்பள்ளி முழுக்க முழுக்க நன்கொடைகளால் மட்டுமே நடத்தபடுகிறது. தொன்னூறுகளின் துவக்கத்தில் தொடங்கப்பட்ட பள்ளி இது. பத்தாம் வகுப்பு வரை இங்கு சொல்லி கொடுக்கப்படுகிறது. மேலே படிக்க, வெளியே இருக்கும் பள்ளிகளுக்கு அனுப்புகிறார்கள். உணவு, உடை, இருப்பிடம் அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகிறது.
நாம் வாழ்கையை மிக எளிதாகக் கடந்துவிடுகிறோம். சிறிய விஷயங்களுக்கு அலட்டி கொள்கிறோம். அதுவும் போர், போராட்ட குணம், உயிருக்கு அஞ்சுதல் எதையும் பல தலைமுறைகளாக பார்க்காத தென்னிந்தியர்களுக்கு அந்த வலிகள் புதிதாக இருக்கும். அகதிகளாய் வந்தவர்கள் பட்ட கஷ்டங்களைக் கேள்விபட்டு மனம் குமைவதோடு உணர்வுகளை கடந்து போகப் பழகி கொண்டோம். அவர்களுக்கான விடியலை பற்றி அதற்கு மேல் யோசிப்பதில்லை.
அங்கு இருக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் பின்னால் பல பயங்கர கதைகள் இருக்கின்றன.
படகில் வந்தால் அதிகபட்சம் 60 கி.மீ இருக்கும் இந்தியாவுக்குக்கும், இலங்கைக்கும். பஸ், ரயில் மூன்று மணி தாமதம் என்றாலே தவித்து போகிறோம் நாம். ஆனால் இங்கு வர மூன்று மாதங்கள் ஆகி இருக்கின்றன ஒரு குடும்பத்துக்கு.
ஒரு தாய், தந்தை ஓரளவு வசதியான குடும்பம். தொன்னூறுகளில், ஐந்து குழந்தைகளை எப்படியாவது காப்பாற்றிவிடவேண்டும் என்ற இயற்கையான உயிர் தவிப்பில் சொத்து, சுகங்களை விட்டுவிட்டு கிளி நொச்சியில் இருந்து புறப்பட்டு இருகின்றனர். கையில் உணவும், கொஞ்சம் உடைகளும். குழந்தையின் கைகளில் கூட பைகள். முதல் குழந்தைக்கே வயது ஏழுதான். பிரதான சாலைகள் வழியாக தப்ப முடியாது. எந்த சாலைக்கு திரும்பினாலும் மனிதர்கள் கொத்து கொத்தாக வெட்டப்பட்டனர். எப்படியோ சிரமப்பட்டு எல்லாவற்றையும் கடந்து, மிக கடுமையாக பிரயாணம் செய்து ஒரு இடத்தை அடைந்தால் அங்கு மனிதர்கள் மூன்று பாகங்களாக வெட்டப்பட்டு பெட்ரோல் ஊற்றி எரியூட்டப்பட்ட செய்திகள், காட்சிகள்.
கடற்கரை ஓரமாக பயணம். செருப்புகள் கூட இல்லாமல் சங்கு, சிப்பிகள் முள்ளாகக் குத்த கடும் பிரயாணம். குழந்தைகளின் கால்கள் புண்ணாக ஆரம்பித்தன. படகில் வர அதிக பணம் கொடுத்து வந்தாலும், அதிகப்படியான மக்களை ஏற்றிக் கொண்ட படகில் பாதுகாப்பற்ற பயணம். ஒவ்வொரு அலையும் படகின் மேலே நீரை வார்க்க, ஆண்கள் ஓரத்தில் உக்கார்ந்துகொண்டு வாளிகளால் அவசர அவசரமாக தண்ணீரை வெளியேற்றினர். பெண்கள் குழந்தைகளை இடுக்கி கொண்டு மத்தியில் ஈரத்தில் அமர்ந்து இருந்தனர். படகு தள்ளாட்டத்தில் அங்கேயே பல உயிர்கள் இழப்பதும் நடந்திருக்கிறது. ஒவ்வொரு புலம் பெயர்ந்தவரின் பின்னாலும் சாகச பயணமும், மரணத்தை நெருங்கிய நிமிடங்களும் ஏராளமாய் இருக்கும். தப்பியோடி வர நினைத்தவர்களில், உயிர் தப்பியவர்களை விட உயிர் இழந்தவர்கள் தான் அதிகம். உலகின் பல மூலைகளில் உள்ள பல நாடுகளுக்கும் எப்படியோ தப்பிச் சென்று இருக்கின்றனர்.
வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்த தமிழர்கள் தம் கடும் உழைப்பால் மேலே வந்து கொண்டு இருக்கின்றனர். அவர்களின் அடுத்த தலைமுறையும் ஓரளவு கல்வி கற்று வசதியாக வாழுகின்றனர். ஆனால் இந்தியாவில் அகதிகள் முகாம் என்ற பெயரில் எட்டுக்கு எட்டு ஒரு அறையில் தங்க வைக்கப்படுகின்றனர். ஒவ்வொரு அறைக்கும் சிறு தடுப்புதான் சுவர். தனிமை என்பதற்கு வாய்ப்பே இல்லாமல் வாழும் குடும்பங்கள். ஏனோ ’எரியும் பனிக்காடு’ புத்தகத்தில் படித்த, கொடுமையான ஆங்கிலேய முதலாளிகளால் தேயிலை தொழிலாளர்களுக்கு அளிக்கப்பட்ட மோசமான வீடுகள் நினைவுக்கு வந்து சென்றது.
தமிழ்நாட்டில் இப்படி 150-க்கும் மேலான அகதிகள் முகாம்கள் இருக்கிறது. இங்கு இருக்கும் சூழலால் குழந்தைகளுக்கு மூச்சு மூட்டி வெளியேற துடிக்கின்றனர். முக்கியமாக பெண் குழந்தைகள்.. யாரையாவது பார்த்து, பெற்றோர்களின் பேச்சையும் மீறி 14 வயதிலேயே திருமணம் செய்து கொள்வது சகஜமாக இருக்கிறது. நாலைந்து வருடங்களுக்குப் பிறகு கைக்குழந்தையோடு நிர்கதியில் கைவிடப்படுவது சகஜம். அகதிகளாக வாழ வந்து அபலைகளாக மாறும் கொடுமை.
அப்படியே கஷ்டப்பட்டு படித்தாலும் பாஸ்போர்ட் பிரச்சினைகளால் கார்பரெட் கம்பெனிகளில் வேலை கிடைப்பது மிகக் கஷ்டமாக இருக்கிறதாம். ஆனாலும் குழந்தைகளுக்கு கல்வி அறிவு வேண்டும் என்று இந்த (இந்திரா காந்தி இண்டர்நேஷனல் பள்ளி) பள்ளிக்கு அனுப்பி வைக்கின்றனர். அது மட்டுமில்லாமல் இங்கு இருக்கும் புலம் பெயர்ந்தவர்களுக்கு தங்கள் நாட்டைப் பற்றிய கனவும் உண்டு.
திரும்ப நாட்டுக்குப் போனால், இழந்த சொத்தை மீட்பது பெரும் போராட்டம். ஐந்து தமிழர்கள் கூடி நின்று பேசும் வாய்ப்பு இல்லை. திருமண நிகழ்ச்சிகளில் தமிழர்களைக் கண்காணிக்க பலத்த ஏற்பாடு. சீனா உள்ளே நுழைந்து, இலங்கையில் போடும் ரோடுகள், கட்டுமானங்களில் கூலி வேலைக்கு மட்டுமே தமிழர்கள் என்ற நிலை.
அந்த நிலை மாற கல்வி மிக அவசியத் தேவை. கண்ணுக்குத் தெரிந்து இங்கு இலங்கையைச் சேர்ந்த இருநூறு குழந்தைகள் இருக்கின்றன. இங்கு வாழும் ஒவ்வொரு ஈழ உணர்வாளர்களும் கொஞ்சம் வீரத்தை ஒதுக்கி வைத்துவிட்டு விவேகமாக புலம் பெயர்ந்த குழந்தைகளுக்கு கல்வி அறிவை கொடுத்தால் அவர்களும் முன்னேறி, அவர்கள் இருக்கும் இடத்தையும் முன்னேற்றிக் கொள்வார்கள். இதுதான் தற்பொழுது அவர்களுக்கு நாம் செய்யும் பெரிய உதவியாக இருக்கும்.
இந்த பள்ளிக்கும் சரியான ஆசிரியர்கள் இல்லாமல் அவதிப்படுகிறார்கள். அறிவியல் பாடத்துக்கு ஆள் இல்லாமல் பரிட்சையில் தோல்வி அடைவதும் நடக்கிறது. நன்கொடைகள் மூலம் என்பதால் மருந்துகள் கூட ஸ்டாக் தீர்ந்துவிட்டதாம். முழுக்க அசைவ உணவு பழக்கம் உள்ள குழந்தைகள் 'அசைவ உணவை சாப்பிட்டு மாதங்கள் ஆயிற்று' என கூறியபொழுது கொஞ்சம் கலங்கித்தான் போனேன். நமக்கு பிடித்த உணவை மாத கணக்கில் பார்க்காதது போல ஒரு வலி.
இவர்களுக்கு தற்போதைய தேவை போராட்டமோ, உண்ணாவிரதமோ இல்லை. புரட்சிகள் தற்பொழுது அவர்களுக்கு தேவை இல்லை. தேவையானது ஓரளவு நியாமான வாழ்க்கை மற்றும் கல்வி. அதைக் கொடுக்க ஒவ்வொரு சகோதர தமிழனுக்கும் கடமை உண்டு. நம் குற்ற உணர்வை போக்கிக்கொள்ள வேண்டும் என்றால் அவர்கள் வாழ்க்கைக்கு அடிப்படையான கல்வியை அளித்தல் நம் கடமையாகும். ஒவ்வொரு குழந்தையின் உரிமை அடிப்படை கல்வி. அது புலம் பெயர்ந்த குழந்தைக்குமான உரிமையாகும்.
"அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்
ஆலயம் பதினாயிரம் நாட்டல்
அன்னயாவினும் புண்ணியம் கோடி
ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்" என்றார் பாரதியார்.
ஏழைகளுக்கு எழுத்தறிவிக்க நம்மால் ஆனதைச் செய்வோம்.
கிருத்திகா தரண் - தொடர்புக்கு kirthikatharan@gmail.com
| தி இந்து வலைத்தளத்தின் 'வலைஞர் பக்கம்' பகுதிக்காக கட்டுரைகளை அனுப்ப விரும்புவோர் webadmin@kslmedia.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு படைப்புகளை அனுப்பலாம். உங்களின் முழுப் பெயர், தொடர்பு எண், வலைப்பதிவுத் தள முகவரி அவசியம். ஏற்கெனவே வெளியிடப்படாத கட்டுரைகளுக்கே முன்னுரிமை அளிக்கப்படும் |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT