Published : 20 Jun 2015 10:29 AM
Last Updated : 20 Jun 2015 10:29 AM

விக்ரம் சேத் 10

கவிஞர், நாவல் ஆசிரியர், வாழ்க்கை வரலாற்று ஆசிரியர் எனப் பன்முகத்திறன் கொண்ட விக்ரம் சேத் (Vikram Seth) பிறந்த நாள் இன்று (ஜூன் 20). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

l கொல்கத்தாவில் (1952) பிறந்தவர். தந்தை ஷூ கம்பெனி நிர்வாக அதிகாரி. தாய் நீதிபதி. புனித சேவியர் பள்ளியில் ஆரம்பக் கல்வி பயின்ற விக்ரம் சேத்தின் இளமைப் பருவம் பாட்னா, தானாப்பூர் உட்பட பல நகரங்களில் கழிந்தது.

l டேராடூனில் உள்ள டூன் பள்ளியில் பயின்றபோது பள்ளி வார இதழின் முதன்மை ஆசிரியராக செயல்பட்டார். பள்ளிக்கல்வி முடித்த பிறகு, இங்கிலாந்து சென்று ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் தத்துவம், பொருளாதாரம், அரசியலில் பட்டம் பெற்றார்.

l பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெறுவதற்காக கலிபோர்னியா ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். படைப்பிலக்கியமும் பயின்றார். ஆங்கில இலக்கியம், சீன மொழியில் ஆர்வம் கொண்டார். கவிதையிலும் ஆர்வம் பிறந்தது. நிறைய கவிதைகள் எழுதி வந்தார்.

l தனது முதல் கவிதைத் தொகுப்பை மாப்பிங்ஸ் (Mappings) என்ற பெயரில் வெளியிட்டார். சுற்றுப்பயணமாகவும் பொருளாதாரத்தில் ஆய்வு மேற்கொள்ளவும் 1982-ல் சீனா சென்றார்.

l நான்ஜிங் (Nanjing) பல்கலைக்கழகத்தில் பண்டைய சீன இலக்கியத்துடன் கவிதையையும் பயின்றார். அவ்வப்போது இந்தியா வந்துபோன அனுபவங்களின் அடிப்படையில் அவர் எழுதிய முதல் பயண நூல் ‘ஃபிரம் ஹெவன் லேக்’ வெளிவந்தது.

l சீனா, இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து என மாறி மாறி உலகப் பயணம் மேற்கொண்டார். வாழ்க்கை அனுபவங்கள், பயணங்களின் அடிப்படையே இவரது படைப்புகளுக்குக் கருவாக அமைந்தன. ஜெர்மன், ஃபிரெஞ்ச் உள்ளிட்ட பல மொழிகளைக் கற்றார்.

l ‘தி கோல்டன் கேட்’, ‘எ சூட்டபிள் பாய்’ உள்ளிட்ட நாவல்கள், ‘மேப்பிங்ஸ்’, ‘பீஸ்ட்லி டேல்ஸ்’, ‘தி டிராவலர்’ உள்ளிட்ட கவிதைகள், குழந்தைகளுக்கான புத்தகங்கள், பயண நூல்கள் என பல துறைகளிலும் அவரது படைப்புகள் வெளிவந்தன. அவரது ‘டூ லைவ்ஸ்’ என்ற புத்தகம் இலக்கிய உலகின் கவனத்தை வெகுவாக கவர்ந்ததோடு, சர்ச்சையையும் கிளப்பியது. இவர் சிறந்த மொழிபெயர்ப்பாளரும்கூட.

l இங்கிலாந்தின் சாலிபரி அருகே உள்ள வீட்டிலும், டெல்லியில் உள்ள பெற்றோர் வீட்டிலுமாக மாறி மாறி வசித்து வருகிறார். பெரிய நூலகம் ஒன்றை பராமரித்து வருகிறார். புல்லாங்குழல், செலோ (cello) ஆகியவற்றை வாசிக்கும் திறன் பெற்றவர். ஜெர்மன் பாடல்களை விரும்பிப் பாடுவார்.

l இதுவரை இவரது 5 கவிதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன. தாமஸ் குக் பயண நூல் விருது, காமன்வெல்த் கவிதை விருது (ஆசியா), சாகித்ய அகாடமி (ஆங்கிலம்), ஐரிஷ் டைம்ஸ் இன்டர்நேஷனல் ஃபிக்‌ஷன் பரிசு, பத்ம உட்பட ஏராளமான விருதுகள், பரிசுகளைப் பெற்றுள்ளார்.

l தன்பாலினச் சேர்க்கைக்கு அனுமதி மறுக்கும் இந்திய குற்றவியல் சட்டப் பிரிவுக்கு எதிராக வலுவாகக் குரல் கொடுத்தவர். 63 வயதாகும் இவர் தொடர்ந்து பல படைப்புகளை எழுதியும் வெளியிட்டும் வருகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x