Published : 22 Apr 2017 10:54 AM
Last Updated : 22 Apr 2017 10:54 AM
பிரிட்டன் அறிவியலாளர்
பிரிட்டனைச் சேர்ந்த அறிவியலாளரும் அறிவியலின் பல்வேறு களங்களிலும் கணிதத்திலும் குறிப்பிடத்தக்கப் பங்களிப்புகளை வழங்கியவருமான சர் ஹரோல்டு ஜெஃப்ரீஸ் (Sir Harold Jeffreys) பிறந்த தினம் இன்று (ஏப்ரல் 22). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
* இங்கிலாந்தின் பேட்பீல்ட் என்ற இடத்தில் பிறந்தார் (1891). தந்தை பள்ளித் தலைமை ஆசிரியர். தந்தை பணியாற்றிய பள்ளியில் கல்வி கற்றார். பின்னர் தர்காம் பல்கலைக்கழகத்தின் நியுசேசிலில் இருந்த ஆர்ம்ஸ்டிராங் கல்லூரியில் பயின்றார்.
* 1914-ல் கேம்பிரிட்ஜ் புனித ஜான் கல்லூரியில் ஆய்வு உறுப்பினராக சேர்ந்தார். அங்கு படித்துக்கொண்டி ருந்த போதே வேதியியல் மற்றும் புகைப்படக்கலை குறித்து ஆய்வுகள் மேற்கொண்டு பல பரிசுகளையும் வென்றார்.
* பின்னர் அங்கு வானியல் பேராசிரியராக நியமிக்கப்பட்டார். பல்வேறு கணித ஆராய்ச்சிகளில் ஈடுபடத் தொடங்கினார். இவரது வாழ்நாளில் ஒரு கணித வல்லுநராக அங்கீகரிக்கப்படவில்லை என்றாலும் அதன்பிறகு இவரது நூல்கள், கட்டுரைகளால் இவரது மகத்துவம் வெளிப்பட்டது.
* இயற்பியல், கணிதம் மட்டுமல்லாமல், பல்வேறு நூல்களைப் படித்து பல துறைகளிலும் அறிவைப் பெருக்கிக்கொண்டார். வானியல் ஆராய்ச்சிகளில் ஈடுபட்ட இவர், நான்கு பெரிய கிரகங்களின் வெளிப்புறப் பண்புகளையும் அவற்றின் கட்டமைப்புகளையும் விவரித்தார்.
* சூரியக் குடும்பத்தின் தோற்றம் மற்றும் அட்சரேகை மாறுபாடு குறித்த கோட்பாடுகளையும் உருவாக்கினார். தனது மனைவியுடன் இணைந்து ‘மெத்தட்ஸ் ஆஃப் மேதமெடிக்கல் ஃபிசிக்ஸ்’ என்ற நூலை 1940-ல் எழுதினார். மேலும், ‘எர்த்’, ‘இட்ஸ் ஆரிஜின்’, ‘ஹிஸ்டரி அன்ட் ஃபிசிகல் கன்ஸ்ட்டிட்யூஷன்’, ‘தி ஃப்யூச்சர் ஆஃப் தி எர்த்’, ‘சயின்டிஃபிக் இன்ஃபெரென்ஸ்’ உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார்.
* பல்வேறு இதழ்களில் வெளிவந்த இவரது புவியியல், அறிவியல் கட்டுரைகள் தொகுக்கப்பட்டு 1971 முதல் தொடர்ந்து 6 ஆண்டு காலம் ஆறு தொகுதிகளாக ‘தி கலெக்டட் பேப்பர்ஸ் ஆஃப் சர் ஹரோல்டு ஜெஃப்ரீஸ்’ என்ற தலைப்பில் நூலாக வெளியிடப்பட்டன.
* நீர்மநிலையில் புவி அகடு (planetary core) அமைகிறது என்ற கருத்துருவை முதலில் எடுத்துக் கூறியவர் இவர்தான். பருவகாலங்களின் தோற்றம் மற்றும் கடற்காற்று ஆகியவற்றையும் விளக்கினார். மேலும் சூறாவளிகள் வளிமண்டலத்தின் பொதுவான சுழற்சிக்கு எவ்வாறு இன்றியமையானவை என்பதையும் எடுத்துக் கூறினார்.
* அதிர்வு அலை பரவல் கோட்பாடுகள், புவி அச்சின் பிறழ்வுகள் மற்றும் வெப்பச்சலனம் குறித்தும் விளக்கினார். இவரது நிகழ்தகவு கோட்பாடு குறித்த நூல் இன்றும் கணிதவியலாளர்களால் பயன்படுத்தப்படுகிறது. இது பாயேசியன் கண்ணோட்டத்துக்கு (Bayesian view) புத்துயிர் அளிப்பதில் பெரும்பங்காற்றியது.
* மேலும், 1924-ல் ஷ்ரோடிங்கர் சமன்பாடு உட்பட இரண்டாவது வரிசை நுண்ணெண் சமன்பாடு, நேரியல் சமன்பாடு ஆகியவற்றுக்கான தீர்வுகளைத் தோராயமாக்கும் பொதுவான ஒரு வழிமுறையை வகுத்துத் தந்தது. 1953-ல் சர் பட்டம் பெற்றார். ராயல் வானியல் கழகத்தின் தங்கப் பதக்கம், ராயல் சொசைட்டியின் காப்ளே பதக்கம், ராயல் ஸ்டாடிஸ்டிகல் சொசைட்டியின் தங்கப் பதக்கம் உள்ளிட்ட பல பரிசுகளைப் பெற்றார்.
* சர்வதேச நில அதிர்வு பதிவுத்தகவல் மையத்தின் தலைவராகவும் செயல்பட்டார். இறுதிவரை ஆராய்ச்சிகளில் ஈடுபட்டும், எழுதியும் வந்த பல்துறை வல்லுநரான சர் ஹரோல்டு ஜெஃப்ரீஸ் 1989-ம் ஆண்டு 98-வது வயதில் மறைந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT