Published : 11 Jan 2017 02:16 PM
Last Updated : 11 Jan 2017 02:16 PM
மதியம் 3 மணியிருக்கும் பள்ளி சீருடை அணிந்த மாணவர்கள் பலர், வரிசையாக ஒவ்வொரு புத்தக கடையாகச் சென்று பார்வையிட்டுக் கொணடிருந்தார்கள். என்ன புத்தகம் வாங்கலாம் என்று தங்கள் நண்பர்களுக்குள் முணுமுணுத்து கொண்டிருந்த காட்சியை பார்த்ததில் மகிழ்ச்சி.
பரப்பரப்பாக இயங்கிக் கொண்டிருந்த சென்னை புத்தகக் கண்காட்சியில் வம்சி பதிப்பகத்தின் நிறுவனரும், எழுத்தாளருமான கே.வி. ஷைலஜா அன்போடு வாசகர்களை வரவேற்றுக் கொண்டிருந்தார்.
கே.வி ஷைலஜா மொழிபெயர்ப்பாளர், பதிப்பாளர் என பல்வேறு அடையாளங்களைக் கொண்டவர். 'சிதம்பர நினைவுகள்', 'மூன்றாம் பிறை', 'சூர்ப்பனகை' போன்ற பல நூல்களை மொழிபெயர்த்துள்ளார்.
ஷைலஜாவின் 'சிதம்பர நினைவுகள்' 2003-ம் ஆண்டு வெளிவந்த மொழிபெயர்ப்பு நூல். ஆனால் இன்றும் பலரால் பாராட்டப்பட்டு வருகிறது. இந்த நூல் மூலமே இலக்கிய உலகில் தனக்கான அடையாளத்தை ஷைலஜா பெற்றிருக்கிறார்.
எழுத்தாளர்கே.வி. ஷைலாஜவுடனான நேர்காணல்,
தொடர்ந்து மலையாளம் சார்ந்த நூல்களையே மொழிபெயர்த்து வர சிறப்புக் காரணம் ஏதாவது இருக்கிறதா?
'சிறப்புக் காரணம்' என்று சொன்னால் அடிப்படையில் நான் ஒரு மலையாளி. பெற்றோர்கள் தமிழ் நாட்டுக்கு குடிபெயர்ந்து விட்டனர். அதனால் எனக்கு மலையாளம் சுத்தமாக தெரியாது. வீட்டில் எல்லோரும் மலையாளம் பேசியதால் பேச கற்றுக் கொண்டேன். ஆனால் நான் ஒரு மலையாளி என்று இலக்கிய உலகில் யாருக்கும் தெரியாது. என் மொழிநடையும் அவ்வாறு இருக்காது. என்னுடைய முதல் புத்தகமான 'சிதம்பர நினைவுகள்'தான் என் தாய் மொழியாகிய மலையாளத்தை கற்றுக் கொள்ள வைத்தது என்றே கூற வேண்டும்.
மலையாளக் கவிஞர் பாலசந்திரன் சுள்ளிக்காடு எழுதிய 'சிதம்பர நினைவுகளை' நீங்கள் மொழிபெயர்க்கக் காரணம் என்ன?
'சிதம்பர நினைவுகள்' புத்தகம் எனக்கு கிடைக்கும்போது, மொழி அறியாமல் இருந்த காரணத்தால் நீண்ட நாட்களாக வாசிக்காமல் இருந்தேன். ஒரு கட்டத்தில் இதை எப்படியாவது வாசித்துவிட வேண்டும் என்று எனது ஐந்து வயது அக்கா மகள் உதவியுடன் மலையாளம் கற்று அந்த புத்தகத்தைப் படித்தேன். அது என்னுள் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. அந்த புத்தகத்தின் ஒரு பகுதியை எப்படியாவது மொழிபெயர்த்துவிட வேண்டும் என்று எண்ணினேன். அப்படி வந்ததுதான் 'சிதம்பர நினைவுகள்'. அது எல்லோரிடத்திலும் வரவேற்பு பெற்றது, தொடர்ந்து எழுதினேன். அந்த புத்தகம் வந்து 13 வருடங்கள் கடந்து விட்டது. எனினும் அனைவரும் என்னை 'சிதம்பர நினைவுகள்' ஷைலஜா என்றுதான் நினைவு கொள்கிறார்கள்.
'சிதம்பர நினைவுகள்' நூலுக்காக இன்றளவும் உங்களை நினைவு கொண்டிருக்கிறார்கள், இந்த நூலின் மூலம் உங்களுக்குக் கிடைத்த பாராட்டுப் பற்றி...
நிறைய இருக்கிறது. சொல்வதற்கு ஒரு நாள் போதாது, என்னுடைய புத்தகம் என்பதற்காக சொல்லவில்லை. அதில் முக்கியமாக நான் கருதுவது, அதில் வரும் கதாபாத்திரம் ஒன்றுக்கு சென்னையிலிருந்து ஒரு நண்பர் பணம் அனுப்பியிருந்தார்.அந்த நூலில் வரும் கவிஞர் இன்னும் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தால் ''அவருக்கு உதவ நான் தயாராக இருக்கிறேன்'' என்று கூறினார். உடனே நாங்கள் பாலசந்திரன் சுள்ளிக்காடு அவர்களை தொடர்பு கொண்டு இதுபற்றி கூறினோம். அவர் கேரளாவில் மாத்ருபூமி பத்திரிகைக்கு இதுபற்றி கூறினார், உடனே 'மலையாளக் கவியை தேடுது தமிழகம்' என்ற தலைப்பில் கால்பக்கத்துக்கு பெரிய செய்தி வெளிவந்தது. இதனைக் கண்ட அந்த கவிஞர் மாத்ருபூமி அலுவலகத்துக்கு வந்தார். தான் இன்னமும் கஷ்டபடுவதாகக் கூறினார். சென்னையைச் சேர்ந்த ஆயுர்வேத மருத்துவர் ஒருவர் அவருக்கு வீடெல்லாம் கட்டிக் கொடுத்தார். இதிலிருந்து இலக்கியம் என்னவெல்லாம் செய்யும் என்று எனது முதல் நூலான 'சிதம்பர நினைவுகள்' மூலம் தெரிந்தது.
இலக்கியத் துறையில் பெண்களுக்கான அங்கீகாரம் பற்றி?
ஆண்களைவிட பெண்களுக்கு நிறையவே அங்கீகாரம் கிடைத்துள்ளது என்று நம்புகிறேன். ஆனால் அதற்கான வழிதான் எனக்கு விருப்பமில்லை. 'அய்யோ பொம்பள பிள்ளை எழுதுது' என்று பச்சாதபப்பட்டு தரும் அங்கீகாரம் வேண்டாம் . அவர்களின் படைப்புகளுக்கான அங்கீகாரம்தான் வேண்டும். அது தற்போது அதிகம் கிடைக்கிறது என்றுதான் கூற வேண்டும்.
பிடித்த பெண் எழுத்தாளர்கள் ?
எனக்கு பிடித்த பெண் எழுத்தாளர் அம்பை. அம்பைதான் வணிக எழுத்திலிருந்து ஆழமான களத்துக்கு மாறியபோது என்னை ஆதரித்தவர். அதன்பிறகு வாஸந்தி எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர். சமகாலத்தில் எழுதிக் கொண்டிருக்கும் என்னுடைய தோழிகளான குட்டி ரேவதி, பரமேஸ்வரி, தமிழ் நதி, சந்திரா ஆகியோர் பிடித்த பெண் படைப்பாளர்கள்.
ஏன் தொடர்ந்து மொழிபெயர்ப்பு நூல்களாக உருவாக்கி வருகிறீர்கள், உங்களுடைய ஆஸ்தான படைப்பு வெளி வருவதற்கு தாமதம் ஏன்?
எனக்கு என்ன தோன்றியது என்றால் படைப்பு என்பது செய்யக் கூடியது அல்ல. அது தானாக உருவாகுவது அதனால் காத்திருத்தேன். தற்போது 'முத்தியம்மா' என்ற கட்டுரைத் தொகுப்பை உருவாக்கியுள்ளேன். இதுதான் என்னுடைய முதல் கட்டுரைத் தொகுப்பு. எதிர்காலத்தில் புனைவு நூல்கள் படைக்க வேண்டும் என்ற தீ எரிந்து கொண்டிருக்கிறது. அந்த காலத்துகாகத்தான் நான் காத்துக் கொண்டிருகிறேன்.
இளம் பெண் எழுத்தாளர்களுக்கு நீங்கள் கூறுவது?
அச்சுத் தேவைக்காக யாரும் எழுத வேண்டாம் என்று எனக்கு தோன்றுகிறது. நான் பதிப்பகம் வைத்திருப்பதால் நிறைய பெண் பிள்ளைகள் என்னிடம் இந்தக் கவிதைத் தொகுப்பு போட்டுக் கொடுங்கள் என்பார்கள் அப்படி அச்சுத் தேவைக்காக எதுவும் எழுத வேண்டாம். உங்களுடைய புத்தகங்கள் புதுமைப் பித்தன், சுந்தர ராமசாமி, அழகிரிசாமி பக்கத்தில் வைக்கப்படுகிற காலம் உருவாகி உங்கள் எழுத்து நீண்டு நிற்க வேண்டும தவிர ஒரு புத்தகம் எழுதிவிட்டோம் நாம் எழுத்தாளர் ஆகி விட்டோம் என்று அந்த நேரத்துக்கு வந்து செல்கிற மின்மினிப் பூச்சியாய் இருக்காமல் காலம் கடந்து நிற்க வேண்டும். சுண்ட காய்ச்சியப் பாலாக நம்முடைய படைப்புகள் இருக்க வேண்டும் என்று நான் கருதுகிறேன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment