Published : 08 Jun 2016 12:02 PM
Last Updated : 08 Jun 2016 12:02 PM

எம்ஜிஆர் 100 | 81 - தொண்டர்கள் நலன்

M.G.R. மக்களிடம் தனக்கு உள்ள செல்வாக்கைக் கொண்டு அரசியலில் உயர்ந்தாரே தவிர, ரசிகர்களையும் தொண்டர்களையும் தனது சுயநலத்துக்காக அவர் பயன்படுத்திக் கொண்டது இல்லை. அவர்களின் நலனில் மிகுந்த அக்கறை கொண்டவர் அவர். தொண்டர்களுக்கு ஒரு ஆபத்து என்றால் துடித்துப் போய்விடுவார். அவர்களது குடும்பம் அதிலிருந்து மீள உதவும்வரை ஓயமாட்டார்.

எம்.ஜி.ஆர். கலந்து கொள்ளும் நிகழ்ச் சிகள் என்றால் அதில் பங்கேற்க வெளியூர்களில் இருந்தும் ஆயிரக் கணக்கான தொண்டர்கள் வருவார்கள். ஒருமுறை மதுரையில் ஒரு கூட்டத்தில் எம்.ஜி.ஆர். கலந்து கொண்டார். கூட்டத் துக்கு வெளியூரில் இருந்து வந்த சில தொண்டர்கள், இரவு திரும்பிச் செல்லும் போது வாகன விபத்தில் பலத்த காய மடைந்து மதுரை அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டிருந்தனர்.

மதுரை நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு எம்.ஜி.ஆர். சென்னை திரும்பு வதாக ஏற்பாடு. ஆனால், விபத்து பற்றி கேள்விப்பட்டு தனது பயணத்தை அவர் ரத்து செய்துவிட்டார். காயமடைந்த தொண்டர்களை சந்திக்க மறுநாள் காலை யில் மதுரை அரசு மருத்துவமனைக்குச் சென்றார். அவர் வருவது முன்கூட்டியே யாருக்கும் தெரியாது. திடீரென மருத்துவமனைக்கு எம்.ஜி.ஆர். வந்ததும் பரபரப்பு ஏற்பட்டது.

பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த தொண்டர் ஒருவர் படுத்திருந்த இடத் துக்கு எம்.ஜி.ஆர். சென்றார். படுக்கை யில் கிடந்த அந்த தொண்டரின் அருகே உதவிக்கு அவரது மனைவி மட்டும் இருந்தார். அந்தப் பெண்மணியின் கோலமே அவர்களது குடும்ப நிலை மைக்கு கட்டியம் கூறியது.

எம்.ஜி.ஆரைப் பார்த்த மகிழ்ச்சி, கண வனின் நிலையால் துயரம், அந்தத் துயரை சமாளிக்க தோள் கிடைத்த நிம்மதி என எல்லாம் கலந்த உணர்ச்சிக் குவியலாய் அந்தப் பெண்மணி அழ ஆரம்பித்துவிட்டார். ‘‘ஐயா, எப்பப் பார்த் தாலும் உங்க பெயரையும் பெருமையை யும் சொல்லிக் கொண்டிருப்பாரய்யா. அவருக்கு இப்படி ஆகிவிட்டதே’’ என்று சொல்லிக் கதறினார். கிழிந்த ஆடை யுடன் பரிதாபமாகக் காட்சி அளித்த அந்தப் பெண்மணியின் கதறலைக் கண்டு எம்.ஜி.ஆரின் கண்கள் கலங்கின.

‘‘கவலைப்படாதே அம்மா. உன் கணவருக்கு ஒன்றும் ஆகாது. எல்லாம் சரியாகிவிடும். நான் இருக்கிறேன்’’ என்று ஆறுதல் கூறினார். அந்த வார்டில் இருந்த டாக்டரிடம் தொண்டரின் உடல் நிலை குறித்து விசாரித்து, அவருக்கு நல்ல முறையில் சிகிச்சை அளிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

டாக்டரிடம் பேசிவிட்டு அந்த தொண்டர் படுத்திருந்த கட்டில் அருகே சென்ற எம்.ஜி.ஆர்., அவரது தலையைத் தடவிக் கொடுத்து கையை இறுகப் பற்றி, ‘‘நீ எதுக்கும் கவலைப்படாதே. டாக்ட ரிடம் சொல்லியிருக்கிறேன். இன்னும் சில நாட்களில் நீ வீடு திரும்பலாம். தைரிய மாய் இரு’’ என்றார். தனது அபிமான தலைவர் தன் கையைப் பிடித்து பேசு வதைப் பார்த்து உணர்ச்சிப் பெருக்கில் பதில்கூட சொல்லமுடியாமல், அந்த தொண்டரின் கண்களில் இருந்து ஆனந் தக் கண்ணீர் அருவியாய் கொட்டியது. அந்தத் தொண்டர் உட்பட காயமடைந்த தொண்டர்களின் உடல்நலம் தேறும் வரை, அவர்களது குடும்பங்களுக்கு தேவையான எல்லா உதவிகளையும் செய்ய எம்.ஜி.ஆர். ஏற்பாடு செய்தார்.

எம்.ஜி.ஆரை மக்கள் தங்கள் வீட்டுப் பிள்ளையாகவே நினைக்கின்றனர் என் பதை விளக்கும் இன்னொரு சம்பவம். எம்.ஜி.ஆர். பேசிய கூட்டத்தில் கலந்து கொண்டுவிட்டு ஊர் திரும்பும்போது மதுரை அருகே வாடிப்பட்டியைச் சேர்ந்த ஒரு தொண்டர் விபத்தில் சிக்கி இறந்து விட்டார். அந்தக் குடும்பத்துக்கு வேண் டிய உதவிகளை செய்யுமாறு கட்சியின ருக்கு எம்.ஜி.ஆர். உத்தரவிட்டார். சில நாட்கள் கழித்து வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து அவர் மதுரை வந்தார்.

முதலில் வாடிப்பட்டிக்கு சென்று, விபத்தில் இறந்த அந்த தொண்டரின் குடும்பத்தை சந்தித்து ஆறுதல் கூற விரும்பினார். அதன்படி, வாடிப்பட்டிக்கு காரில் சென்றார். இறந்துபோன தொண் டர் இருந்த வீடு குறுகிய சந்தில் இருந் தது. அதில் கார் செல்ல முடியாத நிலை. என்ன செய்வது என்று டிரைவர் சில விநாடிகள் குழம்பினார். இதை கவனித்த எம்.ஜி.ஆர். சட்டென காரைவிட்டு இறங்கி விறுவிறுவென நடக்க ஆரம்பித்து விட்டார்.

சில நிமிடங்கள் நடைக்குப் பின், அந்த தொண்டரின் வீட்டை எம்.ஜி.ஆர். அடைந்தார். அது மிகவும் எளிமையான சிறிய வீடு. வாசலில் தனது ஷூவை கழற்றிவிட்டு உள்ளே சென்றார். அங்கே வைக்கப்பட்டிருந்த இறந்து போன தொண்டரின் படத்துக்கு மரியாதை செலுத்திய பின், குடும்பத்தாரை விசாரித்து ஆறுதல் கூறினார். கைக்குழந்தையுடன் இருந்த அந்த ஏழைத் தொண்டரின் மனைவிக்கு தைரியம் சொன்னார்.

அவர் பேசிக் கொண்டிருக்கும்போது, அருகே இருந்த தொண்டரின் தாயாரால் துயரத்தை அடக்க முடியவில்லை. யாரும் எதிர்பாராத வகையில் எம்.ஜி.ஆரின் தோளில் கைபோட்டு அவரை இறுகக் கட்டிப்பிடித்து, ‘‘என் மகன் போயிட்டானேப்பா, நான் என்ன செய்வேன்?’’ என்று குலுங்கி அழ ஆரம்பித்தார்.

எம்.ஜி.ஆர். தோளில் அந்த மூதாட்டி உரிமையுடன் கைபோட்டாலும் அங்கிருந் தவர்களும் உதவியாளர்களும் திகைத்த னர். எம்.ஜி.ஆர். எப்படி எடுத்துக் கொள் வாரோ என்று அவர்கள் நினைத்தனர். ஆனால், அந்த தாயின் உணர்வுகளை அவர் புரிந்து கொண்டார். அந்த மூதாட் டியை விலக்க வந்தவர்களை பார்வையா லேயே தடுத்து நிறுத்தினார் எம்.ஜி.ஆர்.!

அந்த தாயை அணைத்தபடி, ‘‘நானும் உங்க மகன்தான். உங்க குடும்பத்துக்கு வேண்டிய எல்லா உதவிகளையும் செய்யக் காத்திருக்கிறேன். கவலைப் படாதீங்க’’ என்று எம்.ஜி.ஆர். ஆறுதலாய் பேசினார். அந்த தாயின் சோகம் மறைந்து மனம் லேசானது!

எம்.ஜி.ஆர். நடித்த ‘புதியபூமி’ திரைப் படம் 1968-ம் ஆண்டு வெளியானது. அந் தப் படத்தில் எம்.ஜி.ஆர். ரசிகர்களால் பெரிதும் விரும்பப்படும் சூப்பர் ஹிட் பாடல் இது…

‘நான் உங்கள் வீட்டுப் பிள்ளை

இது ஊரறிந்த உண்மை

நான் செல்லுகின்ற பாதை

பேரறிஞர் காட்டும் பாதை!’



அதிமுகவின் முதல் உறுப்பினர் எம்.ஜி.ஆர்.தான். கட்சியின் பெயரி லும் கொடியிலும் தனது தலைவரான பேரறிஞர் அண்ணாவுக்கு முக்கியத் துவம் அளித்தார். கட்சி உறுப்பினர் அட்டையிலும் தனது படத்தைவிட அண்ணாவின் படமே பெரிதாக இருக்கும்படி செய்து, தலைவரை மதிக்கும் தொண்டர் என்பதை எம்.ஜி.ஆர். நிரூபித்தார்!



தொடரும்...
படங்கள் உதவி: செல்வகுமார், எஸ்.எஸ்.ராமகிருஷ்ணன்

முந்தைய தொடர்களை வாசிக்க: >எம்ஜிஆர் 100

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x