Published : 03 Jun 2016 11:01 AM
Last Updated : 03 Jun 2016 11:01 AM

ஓட்டோ லேவி 10

நோபல் பரிசு பெற்ற ஜெர்மன் மருந்தியலாளர்

மருத்துவத்துக்கான நோபல் பரிசு பெற்ற ஜெர்மன் நாட்டின் மருந்தியலாளர் ஓட்டோ லேவி (Otto Loewi) பிறந்த தினம் இன்று (ஜுன் 3). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

# ஜெர்மனியின் ஃபிராங்க்பர்ட் நகரில் யூதக் குடும்பத்தில் (1873) பிறந் தார். தந்தை, வியாபாரி. பள்ளிக் கல்விக்குப் பிறகு, மூனிச் மற்றும் ஸ்ட்ராஸ்பர்க் பல்கலைக்கழகங் களில் மருத்துவம் பயின்றார். தத்துவத் துறையிலும் மிகுந்த ஆர்வம் காட்டினார்.

# கனிம பகுப்பாய்வு வேதியியல் பயின்று, ஸ்ட்ராஸ்பர்கில் உயிரி வேதியியல் நிறுவனத்தில் பணியாற்றினார். பிராங்க்பர்ட்டில் ஒரு மருத்துவமனையில் ஓராண்டு காலம் மருத்துவராகப் பணிபுரிந் தார். காசநோய், நிமோனியா காய்ச்சலுக்கு முறையான மருந்துகள், சிகிச்சை இல்லாமல் இறப்பு விகிதம் அதிகரித்ததால் வேதனை யடைந்தார்.

# மருத்துவராக இருப்பதை கைவிட்டு, மருந்தியலில் ஆராய்ச்சிகள் மேற்கொள்ள முடிவெடுத்தார். பிரபல மருந்தியலாளர் ஹான்ஸ் மெயரின் ஆய்வுக்கூடத்தில் உதவியாளராகப் பணியாற்றினார். வளர்சிதை மாற்றம் குறித்து ஆய்வு மேற்கொண்டார். வியன்னாவில் உள்ள பல்கலைக்கழகத்தில் மருந்தியல் பேராசிரியராக 1904-ல் நியமிக்கப்பட்டார்.

# விலங்குகள் உடலின் புரதத் தொகுப்பு குறித்த ஆய்வுக் கட்டுரையை வெளியிட்டார். சிறுநீரக செயல்பாட்டின் உடலியல், மருந்தியல் சோதனைகள் குறித்து தொடர்ச்சியாக கட்டுரைகள் வெளியிட்டார்.

# லண்டன் எர்னஸ்ட் ஸ்டார்லிங் ஆய்வுக்கூடத்தில் சில மாதங்கள் பணிபுரிந்தார். இங்கு ஹென்றி டேலை சந்தித்தார். அவர்கள் நெருங்கிய நண்பர்களாகினர். இருவரும் இணைந்து ஆய்வுகளை மேற்கொண்டனர். மீண்டும் நாடு திரும்பியவர், சிறுநீரக இயக்கம் குறித்த ஆய்வுகளைத் தொடர்ந்தார்.

# கார்போஹைட்ரேட் வளர்சிதை மாற்றங்களோடு தொடர்புடைய பிரச்சினைகளை ஆராய்ந்து தனது கண்டுபிடிப்புகள் குறித்த கட்டுரைகளை வெளியிட்டார். 1905-ல் மெயர்ஸ் ஆய்வுக்கூடத்தில் அசோசியேட் பேராசிரியராகப் பொறுப்பேற்றார். ஆஸ்திரியாவில் உள்ள கிராஸ் பல்கலைக்கழகத்தில் மருந்தியல் துறை தலைமைப் பொறுப்பில் 1909-ல் நியமிக்கப்பட்டார்.

# நரம்புத் தூண்டுதல்களின் ரசாயனத் தாக்கங்கள், நரம்புநொதிகள் குறித்து கண்டறிந்தார். இதன் தொடர்ச்சியாக மனிதர்கள் உள்ளிட்ட உயிரினங்களின் மத்திய நரம்பு மண்டலத்திலும் அதன் புற எல்லையிலும் காணப்படும் நியூரோ டிரான்ஸ்மிட்டர், அசிட்டைல்கோலைனை கண்டறிந்தார். இதய பாதிப்புகள் குறித்த ஆய்வுகளுக்கு இது மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. இதற்காக இவரது நண்பர் சர் ஹென்றி டேலுடன் இணைந்து இவருக்கு 1936-ல் நோபல் பரிசு வழங்கப்பட்டது.

# ஆஸ்திரியாவில் ஜெர்மன் படைகள் ஊடுருவலால், இவரது நோபல் பரிசு, பரிசுத் தொகை உட்பட அனைத்து உடைமைகளும் 1938-ல் பறிமுதல் செய்யப்பட்டு, வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டார்.

# நியூயார்க் பல்கலைக்கழக அழைப்பை ஏற்று 1940-ல் அங்கு சென்றார். அங்கு மருந்தியல் துறை ஆராய்ச்சி பேராசிரியராக நியமிக்கப்பட்டார். 1946-ல் அமெரிக்க குடியுரிமை பெற்றார். மனிதநேயம் மிக்கவர். இசை, கட்டிடக் கலை, ஓவியம் ஆகியவற்றிலும் ஆர்வம் கொண்டவர். கண்காட்சி, அருங்காட்சியகங்களை விரும்பிச் சென்று பார்ப்பார்.

# உலகம் முழுவதும் உள்ள பல்வேறு அறிவியல் அமைப்புகளிடம் இருந்து ஏராளமான பட்டங்கள், பரிசுகள், பதக்கங்களைப் பெற்றுள்ளார். ‘நரம்பியல் அறிவியலின் தந்தை’ என போற்றப்படும் ஓட்டோ லேவி 88-வது வயதில் (1961) மறைந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x