Published : 31 Aug 2016 10:14 AM
Last Updated : 31 Aug 2016 10:14 AM
பஞ்சாபி, இந்தி கவிஞர்
பிரபல படைப்பாளியும், சாகித்ய அகாடமி விருது பெற்ற முதல் பெண்மணியுமான அம்ரிதா ப்ரீதம் (Amrita Pritam) பிறந்த தினம் இன்று (ஆகஸ்ட் 31). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
*பாகிஸ்தானின் குஜ்ரன்வாலா நகரில் (1919) பிறந்தவர். இவருக்கு 11 வயதானபோது தாய் இறந்தார். அந்த சோகமும் தனிமை உணர்வும் கவிதைகள் எழுதத் தூண்டின. தந்தை பள்ளி ஆசிரியர், சீக்கிய மதபோதகர், இலக்கிய இதழ் ஆசிரியர் என்பதால், இவரது படைப்பாற்றல் மேலும் பளிச்சிட்டது. l
*பாகிஸ்தான் பிரிவினையின்போது நடந்த வன்முறையால் ஏராளமானோர் அகதிகளாகினர். அதில் இவரது குடும்பமும் அடக்கம். லாகூரில் இருந்து டெல்லிக்கு இவர்களது குடும்பம் குடிபெயர்ந்தது.
*இவரது முதல் கவிதைத் தொகுப்பான ‘அம்ரித் லெஹ்ரான்’ 1936-ல் வெளிவந்தது. ஆரம்பத்தில் காதலும் கற்பனையும் நிறைந்த கவிதைகளைப் படைத்தார். இந்தியா - பாகிஸ்தான் தனித்தனி நாடுகளாகப் பிளவு பட்டபோது நடந்த கலவரங்களும், பல லட்சம் பேர் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வுகளும் இவரது எழுத்துப் போக்கையே மாற்றின.
*மதக் கலவரங்களால் ஏற்பட்ட அவலங்களைத் தன் படைப்புகளில் பதிவு செய்தார். முற்போக்குக் கொள்கைகளும் இவரது படைப்புகளில் அடிநாதமாக விளங்கின. கவிதை, கதைகள், நாவல்கள் தவிர, நாட்டில் நடைபெறும் முக்கியமான நிகழ்வுகளின்போது தன் கருத்துகளை கட்டுரைகள் மூலம் வெளிப்படுத்தினார்.
*தனது சொந்த வாழ்வில் நடந்த கசப்பான அனுபவங்களைக்கூட கவிதைகள், கதைகளாக வடித்தார். பெண்ணிய எழுத்தாளர் என்ற பரிமாணமும் இவருக்கு உண்டு. ‘ரசீதி டிக்கெட்’ என்ற இவரது சுயசரிதை நூல் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது.
*இவரது சில நாவல்கள், திரைப்படங்களாகவும் தயாரிக்கப்பட்டு விருதுகளைப் பெற்றன. ‘நாகமணி’ என்ற இலக்கிய இதழை நடத்தினார். ஓஷோவின் சில நூல்களுக்கு முன்னுரை எழுதியுள்ளார். ஆன்மிகப் படைப்புகளிலும் சிறந்து விளங்கினார்.
*இந்தியிலும் எழுதி, இந்தி இலக்கியத்திலும் தனி முத்திரை பதித்தார். அகில இந்திய வானொலி நிலையத்தில் சில காலம் பணிபுரிந்தார். இந்தியாவில் மட்டுமல்லாது, பாகிஸ்தானிலும் இவரது படைப்புகள் போற்றப்பட்டன.
*பிரபல இசையமைப்பாளர் குல்சார் இவரது கவிதைகளுக்கு இசையமைத்து 2007-ல் ஆல்பம் வெளியிட்டார். இந்தியா, பாகிஸ்தானில் 60 ஆண்டுகளுக்கு மேலாக பஞ்சாபி மொழி இலக்கியத்தில் சிறந்த ஆளுமையாக வலம்வந்தார். இவரது படைப்புகள் ஆங்கிலம், பிரெஞ்ச், ஜப்பான் மற்றும் பல இந்திய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு, பெரும் வரவேற்பை பெற்றன.
*பஞ்சாபி, இந்தி இலக்கியத்தில் இவரது பங்களிப்புக்காக 1982-ல் இந்தியாவின் உயரிய ஞானபீட விருது, பஞ்சாப் ரத்தன் விருது, 1956-ல் சாகித்ய அகாடமி விருது, பத்ம, பத்ம விபூஷண் என பல விருதுகளைப் பெற்றார். டெல்லி, ஜபல்பூர் பல்கலைக்கழகங்கள், விஸ்வ பாரதி அமைப்பு இவருக்கு கவுரவ முனைவர் பட்டம் வழங்கின.
*பல்கேரியா, பிரான்ஸ் நாடுகளின் விருதுகளையும் பெற்றுள்ளர். பஞ்சாபி இலக்கிய விருதை பாகிஸ்தான் அரசு இவருக்கு வழங்கியது. மாநிலங்களவை உறுப்பினராக 1986 முதல் 1992 வரை பதவி வகித்தார். தலைசிறந்த கவிஞரும், பெண்ணியவாதியுமான அம்ரிதா ப்ரீதம் 86-வது வயதில் (2005) மறைந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT