Published : 27 Aug 2016 11:46 AM
Last Updated : 27 Aug 2016 11:46 AM
சூரியன் எழும்புகின்ற நிலம்’ என்ற பெருமையைக் கொண்டது ஜப்பான். கிழக்கு ஆசியாவின், தீவு நாடான இது பசிபிக் பெருங்கடலில் அமைந்திருக்கிறது. ‘உலகப் போரில் பேரழிவைச் சந்தித்த நாடா இது?’ என்று பார்ப்போரை குழப்பத்தில் ஆழ்த்தும். இரண்டாம் உலகப் போரின்போது அமெரிக்கா ஜப்பானை ஒடுக்க, போரில் தோல்வியைத் தழுவச் செய்ய அந்நாட்டின் முக்கிய நகரங்களில் ஒன்றான ஹிரோஷிமா மீது அணுகுண்டை வீசி சர்வ நாசத்தை விளைவித்தது. பல ஆயிரக்கணக் கான கட்டிடங்கள் தரைமட்டமாயின. கண் இமைக்கும் நேரத்தில் மக்கள் பஸ்பமாகி, சாம்பல் குவியல்களாக மாறினர்.
கலங்கியதா ஜப்பான்? ஃபீனிக்ஸ் பறவையாக மீண்டும் உயிர்த்தெழுந்தது. எப்படி? தேனீக்களைப் போல, கால நேர அளவு கோடுகளைத் தாண்டி உழைத்து, தானும் நிமிர்ந்து, ஊரையும் உயிர்ப்பித்து, நாட்டின் மானத்தையும் உலகளவில் காத்திட்ட ஜப்பானிய மக்கள் இருக்கிறார்களே, வேறு என்ன வேண்டும்! உழைப்பு, உழைப்பு, உழைப்பு இதுதான் ஜப்பானிய மக் களின் தாரக மந்திரமாக இன்றளவும் இருக்கிறது.
ஜப்பானின் தலைநகரமான டோக் கியோவில் காலடி எடுத்து வைத்த மறுநொடியில் இருந்து அந்த நாட்டின் வளர்ச்சியைக் கண்டு அசந்துபோனேன். வானுயர்ந்த கட்டிடங்கள், மோனோ ரயில்கள், புல்லட் டிரெயின்கள், மக்கள் நடந்து செல்லும் சாதாரண நடை பாதைகள் கூட கிரானைட் கற்களை ஆடையாக அணிந்திருந்தன.
ஜப்பானில் நான் கண்டவற்றைப் பற்றி சொல்ல ஏராளமான விஷயங்கள் இருந்தாலும், ஜப்பானியர்களின் உண வுப் பழக்கங்களைப் பற்றி முதலில் சொல்லப் போகிறேன். உலகிலேயே மிக நீண்ட ஆயுள் உடையவர்களாக ஜப்பானியர்கள் திகழ்கிறார்கள். புரோட்டீன் சத்துமிக்க மீன் வகைகளை அவர்கள் அதிகளவில் உண்பது இதற்கு முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது. அலுவலகத்துக்குச் செல்பவர்கள், பள்ளிக் கூடங்களுக்குச் செல்லும் பிள்ளைகள் என அனைவரும் பகல் உணவுக்காக (Bento) பென்டோவைச் சுமந்துகொண்டு போவார்கள். பென் டோக்கள் என்பது டிபன் பாக்ஸ்களாகும். இவற்றில் அரிசி சாதம், மீன் மற்றும் வேக வைத்த அல்லது ஊறு காயாகப் போடப்பட்ட காய்கறிகள் இருக்கும்.
நாட்டின் மொத்த மக்களுமே மீன் விரும்பிகள் என்பதால் அதிக அளவில் மீன்களைப் பிடிப்பது அவசியமாகிறது. ஒரு வருடத்துக்கு ஜப்பானின் கடலோரப் பகுதிகளில் பிடிக்கப்படும் மீன்களின் எடை 12 மில்லியன் மெட்ரிக் டன். இதற்காக பயன்படுத்தப்படும் இயந்திரப் படகுகளின் எண்ணிக்கை 4 லட்சம் ஆகும்.
நான் ஒரு விநாடி மூச்சை விடவும் மறந்துபோனேன்! எங்களுடைய வழி காட்டி சொன்னார்: ‘‘இதற்கே வாயைப் பிளந்தால் எப்படி? ஜப்பானின் தலைநகரமான டோக்கியோவின் (Tsukiji) ‘சுகிஜி’ மீன் அங்காடிக்குள் நுழைந்தீர்கள் என்றால் கண்களையும் இமைக்க மறந்துவிடுவீர்கள்’’ என்றவர் தொடர்ந்து சொன்னார்:
‘‘அலாரம் வைத்து சரியாக காலை 3 மணிக்கெல்லாம் எழுந்து விடுங்கள். ஒரு நாளைக்கு தூக்கத்தை தியாகம் செய்தால், உலகிலேயே மிகப் பெரியதும், மிகச் சுறுசுறுப்பாக இயங்கும் ‘சுகிஜி’ அங்காடியைக் கண்ணாரக் கண்டு, வாழ்க்கையின் மறக்க முடியாத அனுபவங்களைப் பெறலாம்!’’
‘‘ஏன் அவ்வளவு சீக்கிரம் எழுந் திரிக்கணும்?’’ என்றேன்.
‘‘அதிகாலையில் சென்றால்தான் (Tuna) டியுனா மீன்களை ஏலம் விடுவதைப் பார்க்கலாம். இந்த ஏலம் 5.30 மணிக்குத் தொடங்கிவிடும். மொத்தம் 120 நபர்களை, ஒரு குழுவுக்கு 60 நபர்கள் வீதம் இரண்டு குழுவாகப் பிரிப்பார்கள். ஒரு குழு 5-25 மணியில் இருந்து 5.45 வரை நடக்கும் ஏலத்தை பார்க்கலாம். அடுத்த குழு 5.50 மணியில் இருந்து 6.10-க்குள் நடக்கும் ஏலத்தை பார்க்கலாம். ஒரு ஏலம் என்பது 30 நிமிடங்களுக்குள் முடிந்துவிடும். ஆகவே, சீக்கிரம் கிளம்புவதே உசிதம்’’ என்று வழிகாட்டி முடித்துக் கொண்டார்.
1935-ல் ஆரம்பிக்கப்பட்ட ‘சுகிஜி’ மீன் அங்காடிக்கு அது தோன்றிய இடத்தின் பெயரையே வைத்தார்கள். மொத்தம் 56 ஏக்கர் பரப்பளவைக் கொண்டு, 1,200 மீன் விற்கும் சிறிய கடைகளை தன்னகத்தே அடக்கியுள்ளது. இங்கே மொத்தம் 480 வகையான கடல்வாழ் உயிரினங்கள் விற்கப்படுகின்றன. திமிங்கலத்தின் மாமிசமும் அழகாக வெட்டப்பட்டு விற்கப்படுகிறது.
5 மில்லியன் பவுண்ட் கடல் உணவு (இதனுடைய மதிப்பு 28 மில்லியன் டாலர்கள்) தினந்தோறும் விற்கப் படுகிறது. மொத்தம் 60 ஆயிரம் வேலையாட்களையும் 32 ஆயிரம் வாகனங்களையும், அதாவது லாரிகள், கூண்டு வண்டிகள், வேகன்கள் (wagon), டரண்ட் டிரக்ஸ் (turrent trucks) என்று செயல்படும் ‘சுகிஜி’ மீன் அங்காடியின் செயல்பாட்டை நேரில் பார்ப்பது என் றால் சும்மாவா? எவ்வளவு அரிய சந்தர்ப்பம்! தூக்கத்தை தூரத் தள்ளி, ஆவலை கண்களில் ஏந்தி புறப்பட்டோம்.
ஒரு காலத்தில் ஜப்பானியர்கள் மீன் பிடிக்கும் இயந்திரப் படகுகள் மூலம் தங்கள் கடல் பகுதிகளிலும் மற்ற நாடுகளின் கடல் பகுதிகளிலும் தன்னிச்சையாகச் சென்று மீன் பிடித்தனர். இதனால் உலகிலேயே டியுனா மீன்களைப் பிடிப்பதில் முதன்மையான இடத்திலும், சால்மன் மீன்களைப் பிடிப்பதில் அமெரிக்காவுக்கு அடுத்தபடி யான இடத்திலும் ஜப்பான் இருந்தது. அதனால், ஜப்பானிய மக்களுக்குத் தேவையான மீன்களை வழங்குவதில் அரசாங்கத்துக்கு ஒரு பிரச்சினையும் இல்லாமல் இருந்தது.
ஆனால், 1970-ல் திடீர் என்று கட லோரப் பகுதியில் இருந்த நாடுகள் எல்லாம் தங்கள் கரைப் பகுதியில் இருந்து கடலுக்குள் 370 கி.மீ தூரத் துக்கு மீன் பிடிக்க தனி உரிமை வேண்டி அதில் வெற்றியும் அடைந்தன. ஜப்பானிய மீனவர்களால் முன்போல் மற்றவர் கடல் பகுதியில் சென்று மீன் பிடிக்க முடியவில்லை. அதனால் பிடிக்கப்படும் மீன்களின் அளவு குறைந்தது. நாட்டுக்குத் தேவையான மீன்களை ஜப்பான் பிற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யத் தொடங் கியது. நாங்கள் பார்க்கச் சென்று கொண்டிருக்கும் ‘சுகிஜி’ மீன் அங்காடி யில் அவர்கள் கடல் பகுதியில் இருந்து பிடிக்கப்பட்ட டியுனா மீன்களையும், விமானங்கள் மூலம் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மீன்களையும் கொண்டுவந்து குவிக் கிறார்கள்.
அலஸ்காவில் இருந்து நண்டுகள், கொரேசியா, ஸ்பெயினில் இருந்து டியுனா மீன்கள், ஆஸ்திரேலியா, பெரு என்று பட்டியலும் நீள்கிறது. மீன் வகைகளும் கூடுகிறது.
ரயில் பிடித்து, இறங்கி, ஐந்து நிமிட நடைக்குப் பின் ‘சுகிஜி’ அங்காடியின் நுழைவாயிலை அடைந்தோம். அங்காடியின் வெளிச்சுற்றுக் கடைகளில் அருமையான மீன் உணவு வகைகள் கிடைக்கும் என்று வழிகாட்டி சொல்லி இருந்ததால், இரண்டு பிஸ்கட்டுகள், ஒரு குவளை ஹாட் சாக்லேட் பானத்தோடு கிளம்பிவிட்டேன். ‘சுகிஜி’ மீன் அங்காடியில் என் கண் முன்னே விரிந்த காட்சிகள், உண்ட உணவுகள் இன்றளவும் என் நெஞ்சில் நிலைத்து நிற்கின்றன.
- பயணிப்போம்.
எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள: shanthisiva12@gmail.com
வறுத்த டியுனா மீனை சாப்பிடும் சாந்தகுமாரி
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT