Last Updated : 20 Feb, 2017 05:41 PM

 

Published : 20 Feb 2017 05:41 PM
Last Updated : 20 Feb 2017 05:41 PM

ரசிகநெஞ்சங்களும் நம்பிக்கை வாக்கெடுப்பும்

மக்கள் கலைத்துறை சார்ந்தவர்கள் மீது வைத்துள்ள அன்பும் மரியாதையும் மிகமிக அதிகம். ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்கள் மீது வைத்துள்ள அன்பும் மரியாதையும்விட கூடுதலானது அது. இரண்டும் ஒன்றல்ல. கலைத்துறையில் உள்ளவர்கள் தோல்வி அடைந்தால்கூட அவர்கள் மீதுள்ள மக்களின் நேசம் மாறுவதில்லை. ஆனால் ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் தோல்வி அடைந்தால் அது ஆட்சி தோல்வி மட்டுமல்ல. அதிகார துஷ்பிரயோகத்திற்கு மக்கள் கொடுக்கும் தண்டனை. அதனாலேயே ஊழல் குற்றச்சாட்டுக்களில் மக்களுக்கு அவர்கள்மீது வெறுப்பு முளைக்கிறது. அங்கு உருவாகும் வெறுப்பு நாட்டுநலன் சார்ந்தது.

கலைத்துறைக்கும் ஆட்சி அதிகாரத்திற்கும் பொதுவாக நல்ல உறவு இருப்பதில்லை. உலக வரலாற்றின் முக்கிய நிகழ்வுகளை கவனித்தவர்களுக்கு இதன் பல்வேறு போக்குகள் நிச்சயம் பிடிபடும். சார்லி சாப்ளின் ஒரு சிறந்த திரைக்கலைஞர். அவர், ஹிட்லரை விமர்சனம் செய்தாரே தவிர ஹிட்லரை அல்லது ஹிட்லர் போன்ற அதிகாரம் உள்ள ஒருவரை பதவியிறக்கம் செய்துவிட்டு அந்த இருக்கையில் தான்போய் அதில் அமரவேண்டுமென எப்போதும் நினைத்ததில்லை.

ரஷ்ய நாவலாசிரியர் போரீஸ் பட்டர்நாக் ஒரு நாவலை எழுதினார். 'டாக்டர் ஷிவாகோ' என்ற அந்த நாவல் ரஷ்ய புரட்சியை விமர்சித்து எழுதப்பட்டதால் நாடு கடத்தப்பட்டார். ரஷ்ய புரட்சியின் பக்க விளைவாக நேர்ந்த இழப்புகளை அந்நாவல் வெளிப்படுத்தியது. பெங்களூருவில் 1989-ல் வீதி நாடகக் கலைஞர் சப்தர் ஹஸ்மி நாடகம் நடத்திக்கொண்டிருக்கும்போதே கொல்லப்பட்டார். இலங்கையின் தமிழர்கள் பெருமளவில் கொல்லப்பட்டபோது அதை எதிர்த்து தனது நாளிதழில் இலங்கை அரசை எதிர்த்து தலையங்கம் தீட்டிய சிங்களக் கவிஞரும் சண்டே டைம்ஸ் ஆசிரியருமான லசந்தா விக்ரமதுங்கா கொலைசெய்யப்பட்டார். எழுத்து, இலக்கியம், கலை எப்போதும் அரசுக்கு நேர் எதிரானதாக அமைந்ததற்கு பொறுப்பு பொறுப்பற்ற அரசாங்கங்களே.

ஆனால் தமிழகத்தில் தொடர்ந்துபோய்க்கொண்டிருக்கும் நிலை இதற்கு நேர்மாறாக உள்ளது.

கடந்த 40 வருட தமிழக வரலாறு, உலக வரலாற்றின் தெளிவுடன் முற்றிலும் மாறுபடுகிறது. தமிழகத்தில் கலைத்துறை சார்ந்தவர்களே ஆட்சியதிகாரத்தை ஏற்றிருந்தது ஒரு காரணம். ஆந்திரத்தில் என்டிஆர், இலங்கையில் மாலினி பொன்சேகா, விஜய குமாரணதுங்க உள்ளிட்டவர்களும், அமெரிக்காவில் ரோனால்ட் ரீகன் போன்றவர்களும் தமிழகத்தைப் போல வேறு எவரையும் நிரந்தரமாக ஆட்சியதிகாரத்திற்குள் வரவிடாத (எளிமையான சி.என்.அண்ணாதுரை விதிவிலக்குத் தவிர) எம்.ஜி.ஆர், கருணாநிதி, ஜெயலலிதா போன்ற முடிசூடா மன்னர்களல்ல. இதனால் கலைத்துறை மீதுள்ள அதீத நேசத்தினால் கலைத்துறை சார்ந்தவர்களின் பொறுப்பிலிருந்த ஆட்சியதிகாரத்தை அதன் நுணுக்கங்களை, நுணுக்கமான மோசடிகளை கண்டுகொள்ளாமலே கடந்த 40 ஆண்டுகளை தமிழக மக்கள் கடந்துவந்துவிட்டனர்.

இப்போதாவது நிலை மாறிவிட்டது என்பதற்கு உத்தரவாதம் இல்லை. கலை வேறு ஆட்சியதிகாரம் வேறு என்பதை உணரத் தொடங்கிள்ளனரா என்பதும் தெளிவாகவில்லை. கலைத்துறையிலிருந்து அரசியலுக்கு வருபவர்களை மக்கள் ஒருபோதும் தங்கள் ஆட்சியதிகாரத்தின் தலைவராக ஏற்கமாட்டார்கள் என்ற எந்த உத்தரவாதமும் இல்லை.

திரைக்கலைஞர்கள் மீது வைத்துள்ள உண்மையான அன்பும் மரியாதைக்கும் அத்தாட்சியாக அதை தேர்தல் அதிகாரத்தோடு குழப்பிக்கொள்ள வேண்டியது அல்ல என்பதை தமிழக மக்கள் ஏனோ யோசிப்பதே யில்லை. அவர்களை அரசியல் தலைவர்களாக ஏற்றுக்கொண்டால் பல மறைமுக இழப்புகளை நாடு ஏற்றுக்கொள்ளவேண்டும். பல்வேறு சிக்கல்களுக்கும் பொறுப்பெடுத்துக்கொள்ள அரசியல் அதிகாரம் பெற்ற திரைக்கலைஞர்கள் தயாராக இருக்கமாட்டார்கள். வழிபாட்டு அபிஷேகத்தில் அவர்களின் திளைப்பு கண்களை மறைத்துவிடும். அவர்களால் நேரும் பல்வேறு சிக்கல்களையும் மாநில மக்கள் பொறுத்துச்செல்லவேண்டிய நிலைக்கு தள்ளப்படுவார்கள்.

நம் காதுபட விழும் பல விஷயங்கள் மிரள வைக்கின்றன. கடந்த 40 ஆண்டுகளாக பொறுப்பேற்ற திரைத்துறை சார்ந்த தலைவர்கள் ஆட்சியதிகாரத்தின் பின்னணியில் உள்ள குடும்ப சொத்துக் கணக்குகள் பற்றியது அது.

அவர்கள் சேர்த்துவைத்துள்ள சொத்துக்கணக்குகளில் உள்ள பண மதிப்பு லட்சமோ கோடியோ அல்லது அளவற்ற லட்சம் கோடிகள் என்று கூறுவதைக் கேட்டு ஆசைஆசையாய் ஓட்டுபோட்ட சாமான்யனின் தலை கிறுகிறுவென சுற்றக் கூடும். சாதாரண கலைஞர்களாக, ஏழைப் பங்காளர்களாக திரைத்துறையில் பணியாற்றி அரசியலில் நுழைந்து அவர்கள் அடித்த கொள்ளை அது என்பதை அவன் எப்படி மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்வான். இது ஒருபுறம்.

தற்போதைய தமிழக பிரச்சனைகளுக்கு வருவோம். தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகான தமிழகத்தின் காட்சிகள் ஒன்றுகூட ரசிக்கும்படியாக இல்லை.

அத்தகைய காட்சிகள் திடீரென உருவானதல்ல. கடந்த 40 வருடங்களாக மக்களின் மயக்கம் திடீரென கலைந்ததால் ஏற்பட்ட அதிர்ச்சிநிலைப் படிமங்களே அவை. நாடே பார்த்துக்கொண்டிருக்க கூவத்தூரில் ஒரு வாரத்திற்கும் மேலாக சொகுசு ஓட்டலில் சட்டமன்ற உறுப்பினர்கள் சசிகலா அன்ட் கோவுக்கு சாதகமான நம்பிக்கை வாக்களிக்க வேண்டுமென அடைத்து வைக்கப்பட்டிருந்ததை எப்படி பார்ப்பது என்றே இந்த நிமிடம் வரை கூட யாராலும் புரிந்துகொள்ளமுடியவில்லை.

சென்றவாரம் 'நம்பிக்கை வாக்கெடுப்பு'க்காக கூடிய சட்டமன்றத்தில் அமளி துமளிகள் குளறுபடிகள் நிகழ்ந்தன. சட்டமன்ற உறுப்பினர்கள் தொகுதிக்கு சென்று மக்களின் எண்ணத்தை அறிந்துகொண்டு வந்துதான் நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவேண்டும் என்ற குறைந்தபட்ச நிபந்தனையைக்கூட பேரவைத் தலைவர் விதிக்கவில்லை.

இதனை எதிர்க்கட்சிகளும் மற்றும் எதிர் அணியினரின் கோரிக்கைகளாக வைத்தும் அவை நிராகரிக்கப்பட்டன. எந்தவித வெளிஉலக ஜனநாயகக் காற்றை சுவாசிக்காத நிலையில் மக்கள் கருத்துக்கள் என்னவென்றே அறியாதவர்களாய் கூவத்தூர் சொகுசு ஓட்டலில் இருந்து மயக்கம் தெளியாதவர்களாய் மூளைச்சலவை செய்யப்பட்ட நிலையில்தான் ஆளும் அதிமுக கட்சியின் 100க்கும் மேற்பட்ட பேரவை உறுப்பினர்கள் இருந்தனர்.

பெரும்பான்மையான அந்த உறுப்பினர்களின் வெளிஉலகத் தொடர்புகள் துண்டிக்கப்பட்டதுபோல பத்திரமாக அழைத்துவரப்பட்டு எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கிடையே சசிகலா தரப்பு ஆளுங்கட்சியினருக்கு சாதகமாகவே 'நம்பிக்கை வாக்கெடுப்பு' நடத்தப்பட்டது. ஆளும் அதிமுக கட்சியின் ஆட்சி நிலைநாட்டப்பட்டது. இதை மக்களாட்சி என்ற பெயரில் நடந்த மாபெரும் முறைகேடாகவே பார்க்க வேண்டியுள்ளது. தமிழகத்தை பீடித்த 40 ஆண்டுகாலமாக நீளும் நோயின் தொடர்ச்சி இது.

கலைத்தாயின் செல்லப்பிள்ளைகளின், ரசிக நெஞ்சங்களின் ஆட்சியில்தான் இவையெல்லாம் நடக்கின்றன.

திரைக்கலைஞர்களின் அரசாட்சியில்தான் ஈழத்தமிழர் பிரச்சனையில் நடந்த சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் மீதான தாக்குதல்கள், கூடங்குளம், டாஸ்மாக், மெரினா போராட்டங்கள் போன்றவை கடும் தாக்குதல்களோடு முடக்கப்பட்ட சம்பவங்கள், இவற்றின் தொடர்ச்சியாகவே மேற்சொன்ன சட்டமன்ற கூவத்தூர் அன் கோவின் நம்பிக்கை வாக்கெடுப்பும் நிறைவேறியது.

சாமான்யன் என்ற நிலையைக் கடந்து ரசிகன் என்ற நிலையிலிருந்து மக்கள் ஆட்சிப் பங்கெடுப்பில் நேரும் சிக்கலில் உருவாகும் அதிர்ச்சி நிலை இது. அரசியல் போராட்டங்கள் என்றால் என்னவென்றெ தெரியாத இன்னமும் நீடிக்கும் தமிழகத்தின் மயக்கநிலையுமாகும். தமிழகம் உடனடியாக இந்த அதிர்ச்சிநிலையிலிருந்து விடுபட வேண்டும். ஒரு ஜனநாயக நாட்டில் வாக்களித்த சாதாரண குடிமகனின் விருப்பங்களுக்கும் ஆட்சிக்கும் உள்ள இடைவெளி மலையளவு கடலலளவு மாறிப்போன ஆபத்திலிருந்து தப்பிக்கவேண்டிய விழிப்புநிலை பெற வேண்டும்.

ஆட்சியதிகாரத்தின் எத்தகைய துஷ்பிரயோகத்தையும், தவறு செய்தால் எந்த முகத்தாட்சண்முயமும் இல்லாமல் அவர்களைத் தூக்கியெறிவதற்கு பெரிய சாகச துணிச்சல்கள் தேவை என்ற நிலையெல்லாம் குடியரசு நாட்டில் உருவாகக் கூடாது.

அதெல்லாம் மிகவும் சர்வ சாதாரண காரியங்களாக நடந்தேற வேண்டியவை. ஆனால் இங்கு இப்போது அதுவே குதிரைக்கொம்பாகி உள்ளது. கட்அவுட் அபிஷேக திரையில் காணும் போலி சாகச அரிதார கலை மயக்கங்களிலிருந்து விழிக்கவேண்டும். தமிழக வாழ்வாதார பிரச்சனைகளோடு தீவிரமாக இயங்குபவர்களால் மட்டுமே மக்கள் நலன் சார்ந்த ஆட்சியதிகாரம் இனி சாத்தியம். சாமான்யனின் வாழ்க்கையில் புதிய சமுதாயத்திற்கான உத்வேகங்களும் சாத்தியம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x