Published : 03 Jul 2016 10:53 AM
Last Updated : 03 Jul 2016 10:53 AM

அடூர் கோபாலகிருஷ்ணன் 10

உலகப் புகழ்பெற்ற கேரள திரைப்பட இயக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணன் (Adoor Gopalakrishnan) பிறந்தநாள் இன்று (ஜூலை 3). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

* கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் அடூர் கிராமத்தில் (1941) பிறந்தவர். கலைத் திறன்மிக்க, குறிப்பாக கதகளி ஆடுவதில் சிறந்து விளங்கிய குடும்பம் என்பதால், சிறு வயதிலேயே கலைகளில் திறன் பெற்றிருந்தார். 8 வயதில் நாடகத்தில் நடிக்கத் தொடங்கினார்.

* பள்ளிப்படிப்பு முடிந்ததும் புனே திரைப்படக் கல்லூரியில் சேர்ந்து, திரைக்கதை மற்றும் சினிமா இயக்கத்தில் பட்டம் பெற்றார். திண்டுக்கல் காந்தி கிராம பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம், அரசியல் அறிவியல், பொது நிர்வாகத்தில் பட்டம் பெற்றார். திண்டுக்கல் அருகே அரசு அதிகாரியாக சிறிதுகாலம் பணியாற்றினார்.

* திருவனந்தபுரம் சித்திரலேகா ஃபிலிம் சொசைட்டி, சித்திரலேகா ஃபிலிம் கோ-ஆபரேட்டிவ் ஆகிய அமைப்புகளை நிறுவினார். இவை கேரள திரைப்படக் கலாச்சாரத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகித்தன. இவரது முதல் திரைப்படமான ‘ஸ்வயம்வரம்’ 1972-ல் வெளிவந்தது. முதல் படத்திலேயே அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

* சினிமாவில் அதிரடி மாற்றங்களைக் கொண்டு வந்தார். ‘சினிமா வெறும் கேளிக்கைக்கானது மட்டும் அல்ல; கலை, கலாச்சாரத்தை வளர்ப்பதிலும் முக்கிய பங்காற்ற முடியும்’ என்பதை தனது திரைப்படங்கள் மூலம் நிரூபித்தார்.

* திரைக்கதையும் இவரே எழுதினார். மென்மையாக கதை சொல்வ தோடு, சிந்திக்கவும் தூண்டியவர். வழக்கமான, பழைய பாணியை மாற்றி, புதுமையான உத்திகளை இவர் கையாண்டது, மகத்தான வெற்றியை ஈட்டித் தந்தது. இதை பல இயக்குநர்களும் பின்பற்றினர்.

* நிழல்குத்து, கதாபுருஷன், விதேயன் உள்ளிட்ட 11 முழு நீளப்படங்கள், கலாமண்டலம் கோபி, சோழப் பாரம்பரியம், யட்சதானம் உள்ளிட்ட ஏறக்குறைய 30 குறும்படங்கள் மற்றும் ஆவணப் படங்களையும் இயக்கியுள்ளார்.

* குறைந்த படங்களே இயக்கினாலும் இவரது அனைத்து படங்களும் உலகப்புகழ் பெற்றன. ‘ரியலிஸம்’ எனப்படும் எதார்த்தத்தை பிரதிபலிக்கும் சினிமாக்களையும் தாண்டி, புதுமையான கலைப்படங்களை அளித்தவர். கேரள சினிமா ரசிகர்களின் ரசனைத் தரத்தை உயர்த்தியவர் எனப் போற்றப்பட்டார்.

* ‘கொடியெட்டம்’, ‘எலிப்பத்தாயம்’, ‘முகாமுகம்’, ‘மதிலுகள்’ போன்ற சிறந்த படைப்புகள் மூலம் நாட்டின் தலைசிறந்த இயக்குநர்களில் ஒருவராக உயர்ந்தார். இவரது கதை சொல்லும் பாணி தனித்துவம் வாய்ந்தது. ‘சினிமாயுடே லோகம்’, ‘நிர்மால்யம்’, ‘எலிபத்தாயம்’ உட்பட பல நூல்களையும் எழுதியுள்ளார்.

* பத்மஸ்ரீ, பத்மவிபூஷண், தாதாசாஹிப் பால்கே, ‘ஸ்வயம்வரம்’ படத்துக்காக தேசிய விருது, சிறந்த இயக்குநருக்கான தேசிய விருது 4 முறை, சிறந்த திரைக்கதை எழுத்தாளருக்கான தேசிய விருது 3 முறை, கேரள மாநில திரைப்பட விருதுகள், பிரிட்டிஷ் திரைப்பட இன்ஸ்டிடியூட் விருது, யுனிசெஃப் திரைப்பட பரிசு, ஓசிஐசி திரைப்பட பரிசு, இன்டர்ஃபிலிம் பரிசு என நீள்கிறது இவரது பரிசுப் பட்டியல்.

* இன்று 75-வது வயதில் அடியெடுத்து வைக்கும் ‘அடூர்’, 8 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு இயக்கியுள்ள ‘பின்னேயும்’ திரைப்படம், படப்படிப்பு நிறைவடைந்து விரைவில் வெளிவர உள்ளது. உலகம் முழுவதும் உள்ள கலாரசிகர்களை தனது அடுத்த படைப்புக்காக ஆவலோடு காக்க வைத்திருக்கிறார் இந்த உலகப் புகழ்பெற்ற இயக்குநர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x